(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):27

 4. குலமும் கோவும் தொடர்ச்சி

சுந்தர சோழன்

    அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு                             விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக்

கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம் என்னும் பெருங் கோயிலுள் இவ் விருவர் படி மங்களையும் நிறுவினார் குந்தவைப் பிராட்டியார்.

த்தம சோழன்

     கண்டராதித்தருடைய திருமகனாய்த் தோன்றிய உத்தம சோழன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவன் பெயரால் எழுந்த ஊர்கள் சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் கொங்கு நாட்டிலும் உண்டு.

தஞ்சைநாட்டில் நன்னில வட்டத்தில் உள்ள உத்தம சோழபுரம் என்னும் ஊரும், தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்திற் காணப்படும் உத்தம சோழ  மங்கலமும் செங்கற்பட்டு மதுராந்தக வட்டத்திலுள்ள உத்தம நல்லூரும், சேலம் நாட்டிலுள்ள உத்தம சோழபுரமும் இவன் ஆண்ட நாட்டின் பரப்பை ஒருவாறு காட்டுகின்றன. மதுரையை ஆண்ட வீர பாண்டியனோடு இவன் போர் புரிந்து அவன் தலை கொண்டான் என்று சாசனம் அறிவிக்கின்றது.71

அவ் வெற்றியின் அடையாளமாக இவனும் மதுராந்தகன் என்னும் விருதுப்பெயர் கொண்டான் என்பர்.

இராசராசன்

     உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன் திருமாவளவன் என்று தமிழ் இலக்கியம் கூறுவது போலவே, தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழர் குலத்தைத் தலையெடுக்கச் செய்தவன் இராசராசன் என்று சாசனம் அறிவிக்கின்றது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாளத் தொடங்கிய இம் மன்னன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழ் நாட்டின் பெருமையைப் படிப்படியாக உயர்த்தினான்.

விருதுப் பெயர்கள்

    இம் மன்னனது இயற் பெயர் அருண்மொழித் தேவன் என்பதாகும்.

இவன் சேர மன்னனையும், பாண்டியனையும் வென்று அடக்கி, மூன்று தமிழ்நாட்டையும் ஒரு குடைக்கீழ் அமைத்தபோது, மும்முடிச் சோழன் என்னும் பெயருக்கு உரியனாயினான்;72 பின்னர்த் தென் பாலுள்ள இலங்கை என்னும் ஈழ நாட்டையும், வடபாலுள்ள வேங்கை நாடு, கங்கபாடி முதலிய நாடுகளையும், குடபாலுள்ள கொல்லம், குடகம் ஆகிய நாடுகளையும் வென்று, மன்னர் மன்னனாக விளங்கிய போது இராசராசன் என்ற விருதுப் பெயர் பூண்டான். அப்பால் கப்பற்படை கொண்டு பன்னீராயிரம் தீவங்களைக் கைப்பற்றி நிலத்திலும் நீரிலும் வெற்றி பெற்று வீறுற்ற நிலையில் சயங் கொண்டான் என்னும் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டான். இவன் வீரத்தாற் பெற்ற விருதுகளோடு சீலத்தாற் பெற்ற பெயர்களும் சேர்ந்து அழகுக்கு அழகு செய்தன. “சிவனடி பணியும் செல்வமே செல்வம்” எனக்கொண்ட இராசராசன் சிவபாத சேகரன் என்னும் செம்மை சான்ற பெயர் தாங்கினான். ஈசனார்க்குக் கோயில் எடுத்துப் பணி செய்த பான்மையில் கோச்செங்கட் சோழன் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவன் இராசராசன்.

    தில்லைச் சிற்றம்பலத்தின் ஒருசார் அடைபட்டு மறைந்திருந்த தேவாரத் திருப்பாசுரங்களைத் திருவருளாற் கண்டு வெளியிட்டு இராசராசன் சைவத்திற்குப் பெரு நலம் புரிந்தான். உலகம் ஈடேறும் வண்ணம் எழுந்த தேவாரத்தை எடுத்து வெளியிட்ட வேந்தனை உய்யக் கொண்டான் என்று உயர்ந்தோர் பாராட்டினர்.73

     இராசராசன் விருதுப் பெயர்களை அவன் ஆட்சியில் அமைந்த மண்டலங்கள் தாங்கி நின்றன. ஈழ மண்டலம் (இலங்கை) மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயர் பெற்றது. தொண்டை மண்டலம் சயங்கொண்ட சோழ மண்டல மாயிற்று. பாண்டி மண்டலம் இராசராசப் பாண்டி மண்டலம் எனப்பட்டது.

அருண்மொழி

     இனி, இவ்வரசன் பெயர் கொண்டு எழுந்த ஊர்களை முறையாகக் காண்போம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராசராசன், அருண்மொழி வருமன் என்று குறிக்கப்படுகின்றான். அருண்மொழி என்பது அருமொழி என மருவி வழங்குவதாயிற்று. பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த கானநாட்டில் அருமொழித் தேவபுரம் என்னும் பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம் அறிவிக்கின்றது.74 இன்னும், தஞ்சை நாட்டிலும், தென்னார்க்காட்டிலும் அருமொழித் தேவன் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு.75

மும்முடிச் சோழன்

      தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் சோழபுரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அதன் முழுப்பெயர் மும்முடிச் சோழபுரம் என்பதாகும்.76 நாஞ்சில் நாட்டில் நாகர் கோவிலுக்கருகே யுள்ள கோட்டாறு, மும்முடிச் சோழ நல்லூர் என முன்னாளில் வழங்கிற்று.77 தொண்டை  நாட்டிலுள்ள திருக்காளத்தி, மும்முடிச் சோழபுரம் என்னும் மறுபெயர் பெற்றது. இராசராசன் கால முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை அவ்வூர் மும்முடிச் சோழபுரம் என வழங்கிற்று.78 இன்னும், மும்முடிச் சோழமங்கலம் (திருச்சி), மும்முடிக் குப்பம் (செங்கற்பட்டு), மும்முடிச் சோழகன் (தென்னார்க்காடு) முதலிய ஊர்ப் பெயர்களில் இராசராசனது விருதுப் பெயர் விளங்கக் காணலாம்.

இராசராசன்

    தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊர் இராசராசபுரமேயாகும்.79 நெல்லை நாட்டிலுள்ள இராதாபுரமும் இராசராசபுரமே என்று சாசனம் கூறுகின்றது.80 ஈழநாட்டுப் பாலாவி நதிக்கரையில் திருக்கே தீச்சரம் என்னும் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தேயுடைய மாதோட்டம் இராசராசபுரமென்னும் பெயர் பெற்றது.81

சயங்கொண்டான்

    சயங்கொண்டான் என்ற விருதுப் பெயரைத் தாங்கி நின்ற நகரங்களுள் தலை சிறந்தது சயங்கொண்ட சோழபுரமுாகும். அஃது இராசராசன் காலமுதல் சில நூற்றாண்டுகள் சோழ ராச்சியத்தின் சிறந்த நகரமாக விளங்கிற்று. இப்பொழுது திருச்சி நாட்டு உடையார் பாளைய வட்டத்தில் அஃது ஒரு சிற்றூராக இருக்கிறது.

    சயங்கொண்ட பட்டணம் என்னும் ஊர் சிதம்பர வட்டத்தில் உள்ளது. சயங்கொண்டான் என்ற பெயருடைய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் சில உண்டு.82 திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்திலுள்ள மகாதானபுரத்தின் உட்கிடையாகிய சிற்றூர் பழைய சங்கடம் என்னும் விந்தையான பெயரைக் கொண்டுள்ளது. பழைய சயங்கொண்ட சோழபுரம் என்பதே நாளடைவில் பழைய சங்கடமாய் முடிந்தது என்பர்.83

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

71. 569 / 1905 (records that the king renamed a ruined tank (at Vagaiputtur) Virapandiyappereri and granted all lands irrigated by it to the Villagers – 1.M.P.542.)

72. சென்னைக்கல்வெட்டு அறிக்கைகள்(எம்.இ.ஆர் 1929-30.)

73. 192 / 1919.

74. சிரீவல்லபனால்‌ முன்னேற்றமடைந்த  ஊராதலின்‌ சிரீவல்லபமங்கலம்‌ என்னும்‌ பெயரும்‌ அதற்குண்டு,(160 /1895.) அப்பெயர்‌ சீவலனாடு எனவும்‌, சீவல மங்கையெனவும்‌ முக்கூடற்‌ பள்ளு நாடகத்தில்‌ வழங்கும்‌ – முக்கூடற்பள்ளு, 5.18.

75. “குட்டம்‌ தாங்கல்‌ கோட்டகம்‌ ஏரி” – பிங்கல நிகண்டு,

76. பாண்டி நாட்டின்‌ சில பாகங்களில்‌ கம்மாய்‌ என்பது குளத்தின்‌ பெயராக வழங்குகின்றது. கம்வாய்‌ என்ற சொல்‌ சிதைந்து கம்மாய்‌ ஆயிற்‌ றென்பர்‌. கம்மாய்‌ என்னும்‌ சொல்லும்‌ ஊர்ப்‌ பெயர்களில்‌ அமைந்திருக்கிறது. பாண்டுக்‌ கம்மாய்‌, மூவர்‌ கம்மாய்‌ முதலிய ஊர்கள்‌ பாண்டி நாட்டில்‌ உண்டு.

77. வட ஆர்க்காட்டில்‌ சோழிங்கர்‌ என்ற ஊரிலுள்ள ஏரியின்‌ பெயர்‌ சோழ வாரிதி என்று சாசனம்‌ கூறும்‌. (9 / 1896.)

78. இன்றும்‌ மைசூர்‌ தேசத்தில்‌ சிவ சமுத்திரம்‌ என்பது ஓர்‌ ஏரியின்‌ பெயராக வழங்குகின்றது. திருக்குற்றாலத்தில்‌ வட அருவி விழுந்து பொங்கி எழுகின்ற வட்டச்சுனை’ ‘பொங்குமா கடல்‌” என்று அழைக்கப்படுகின்றது. சோழசமுத்திரம்‌ சாசனத்திற்‌ குறிக்கப்பட்டுள்ளது. (238 / 1931. )

79. வரகுண பாண்டியனது வட்டெழுத்துச்‌ சாசனத்தில்‌ இவ்வூர்‌ முள்ளி நாட்டைச்‌ சேர்ந்த இளங்‌ கோக்குடி என்று குறிக்கப்படுகின்றது. (105 / 1905.)

80. 72. சென்னைக்கல்வெட்டு அறிக்கைகள்(எம்.இ.ஆர் .1922, 221.)

81. “கோமுகியென்னும்‌ கொழுநீர்‌ இலஞ்சி” – மணிமேகலை.

82. குற்றாலக்‌ குறவஞ்சி, 85. 

83. கச்சியைச் சூழ்ந்த நாட்டுக்குப்‌ பொய்கை நாடு என்ற பெயர்‌ இருத்தலால்‌, பொய்கையார்‌ என்று அவர்‌ சொல்லப்பட்டார்‌ என்பாரும்‌ உண்டு. அவர்‌ வரலாற்றை “ஆழ்வார்கள்‌ கால நிலை” என்ற நூலின்‌ இரண்டாம்‌ அதிகாரத்திலும்‌, தமிழ்‌ வரலாறு 176-ஆம்‌ பக்கத்தும்‌ காண்க.