ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31- குறுநில மன்னர்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 30. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31
குறுநில மன்னர்
பாரி
தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான். அவ்வள்ளலுக்குரிய பறம்பு நாட்டிற் காணப்படும் பாரீச்சுரம் என்னும் சிவாலயம் அவன் எடுத்த திருக்கோயிலாகக் கருதப்படுகின்றது.120
பாரீச்சுரம் என்பது பாரியால் வழிபடப்பெற்ற சிவபிரான் கோயில் கொண்டதலம் என்ற பொருளைத் தரும். அப் பாரீச்சுரம் தேவாரப் பாடல் பெற்ற கொடுங் குன்றத்திற்கு அருகேயுள்ளது. எனவே, இக் காலத்திற் பிரான்மலை யெனப்படும் கொடுங்குன்றத்தைத் தன்னகத்தேயுடைய பறம்பு நாடே பாரியின் நாடென்பதும், அங்குள்ள பாரீச்சுரம் அவன் எடுத்த திருக்கோயில் என்பதும் இனிது விளங்கும்.
ஆய்
பொதியமலைக்கு அண்மையிலிருந்த நாட்டை ஆய் என்ற குலத்தார் நெடுங்காலம் ஆண்டு வந்தனர். அக் குலத்தில் வந்த ஆய் அண்டிரன் என்னும் வள்ளல், புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது.
“தென்திசை ஆஅய் குடியின் றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே”121
என்று மோசியார் அதன் பெருமையைப் புனைந் துரைத்தார். இவ்வூர் இன்றும் பொதியமலைச் சாரலில் உள்ளது.
காரி
கடைவள்ளல் எழுவரில் காரி என்பவன் ஒருவன். அவன் சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று அவன் குறிக்கப்படுகின்றான். சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் அச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது. சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது.122 சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
ஓரி
திருமுடிக் காரியின் பெரும் பகைவன் ஓரி என்பவன். அவன் வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்லில் ஓரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது.
குமணன்
கடையெழு வள்ளல்களின் காலம் கழிந்த பின்பு கொங்கு நாட்டுக் குறுநில மன்னனாகிய குமணன் சிறந்த கொடையாளனாக விளங்கினான்.
முதிரம் என்னும் மலையும், அதைச் சேர்ந்த நாடும் அவன் ஆட்சியில் அமைந்திருந்தன. குமணண் வார்ந்த ஊர் குமணம் என்று பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்ததென்று அறிந்தோர் கூறுவர். கோவை நாட்டைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில் கொழுமம் ஒரு சிற்றூராக இன்று காணப்படுகின்றது. சோழீச்சுரம் என்னும் பழைமையான சிவாலயம் இவ்வூரில் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொங்கு நாட்டை யாண்ட வீரசோழன் அங்கே கட்டிய கோயில் விரசோழீச்சுரம் என்னும் பெயர் பெற்றுப் பின்னர்ச் சோழீச்சரம் எனக் குறுகி வழங்கலாயிற்று என்பது சாசனங்களால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழிகளால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும் குதிரை மலையே பழைய முதிர மலை என்பர். முதுகிற் சேணமிட்டு நிற்கும் குதிரை போன்று இம் மலை காட்சி யளித்தலால் பிற்காலத்தார் அதனைக் குதிரை மலை என்று அழைத்தனர் போலும்!123
வள்ளலூர்
கோயம்புத்தூருக்கு அண்மையில் வள்ளலூர் என்னும் அழகிய பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்குத் தேனீச்சுரம் என்பது பெயர். உலகளந்த பெருமாள் கோவிலும் அங்குண்டு. பழைய பேரூர் நாட்டைச் சேர்ந்த இவ்வள்ளலூர் அன்னதான சிவபுரி எனவும் வழங்கிற்று.124 எனவே, அன்னதானத்தால் அழியாப் புகழ் பெற்ற வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று கூறலாகும். இந்நாளில் இவ்வூரின் பெயர் வெள்ளலூர் என மருவியுள்ளது.
பூதன்
பெண்ணையாற்றின் அருகேயுள்ளது புல்வேளூர் என்ற ஊர். இவ்வூர் தொண்டை நாட்டு எயிற் கோட்டத்தைச் சேர்ந்ததென்று சாசனம் கூறும்.125
தமிழ் இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது. நல்லிசைப் புலவராகிய ஒளவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன் இவ்வூரில் விளங்கினான் என்பது,
“பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்”
நினைந்து பாடும் ஒளவை வாக்கால் அறியப்படும்.126 புல்வேளூர் என்பது இப்போது புல்லலூர் எனத் திரிந்துள்ளது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
120. சாசனத் தமிழ்க்கவி சரிதம், ப. 7
121. புறநானூறு, 99.
122. 38 / 1913. காரிக்குடிக் கயிலாசமுடைய நாயனார்க்கு வடகரைக் கரிகால சோழவள நாட்டைச் சேர்ந்த ஊற்றங்கரை யென்னும் அழகிய கூத்தநல்லூரைச் சித்திரைத் திருநாட்சிறப்புக்காக வழங்கிய செய்தியைக் கூறுவது இச்சாசனம்.
123. கோழீச்சுரதேவர் திருத்தல வரலாறு, ப.29.
124. 141 / 1910.
125. 46 / 1923.
126. பெருந்தொகை, 983.
Leave a Reply