ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி)
மலையும் குன்றும்
திருவண்ணாமலை
ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத்
தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்:
“அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா
முதுகுன்றம் கொடுங்குன்றமும்”
என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற்
சிறந்து திகழும் திருவண்ணாமலையாகும். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் அரும் பெருங் சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை என்பர்.1
திருஈங்கோய் மலை
திருச்சி நாட்டைச் சேர்ந்தது ஈங்கோய் மலை. அங்கு எழுந்தருளிய இறைவனை ஈங்கோய் நாதர் என்று தமிழ் மக்கள் போற்றினார்கள். அது பாடல் பெற்ற மலைப் பதியாதலால், திருவீங் கோய் நாதர் மலையாயிற்று. இப்பொழுது அப் பெயர் திருவிங்க நாதர் மலையென மருவி வழங்குகின்றது.
அத்தி
தொண்டை நாட்டு வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த அத்தியென்னும் தலம், பழம் பெருமை வாய்ந்ததென்பது சாசனத்தால் விளங்கும். அங்கமைந்த பழைய ஆலயம் அகத்தீச்சுரமாகும். பண்டைத் தமிழரசர் பலர் அதனை ஆதரித்துள்ளார்கள். இராஜராஜ சோழன் காலத்தில் கேரளாந்தக நல்லூர் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. கேரளாந்தகன் என்பது அம் மன்னனுக்குரிய விருதுப் பெயராதலால் அவன் ஆதரவு பெற்ற பதிகளுள் அத்தியும் ஒன்றென்று தோற்றுகின்றது. அப்பெயர் அதன் மறு பெயராய் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய தன்மை சாசனங்களால் விளங்கும்.2 பின்பு விஜய நகரப் பெரு வேந்தனாகிய கிருஷ்ண தேவராயன் காலத்தில் கிருஷ்ண ராயபுரம் என்னும் பெயர் அத்திக்கு அமைந்தது.3 இங்ஙனம் பல படியாகப் பெரு மன்னர் ஆதரவுக்குரியதாக விளங்கிய அத்தியே திருஞான சம்பந்தர் குறித்த ஊராக இருத்தல் கூடும்.
திருமுதுகுன்றம்
இன்னும், ஈசன் வீற்றிருக்கும் மலைகளுள் ஒன்றாகப் பேசப் பெற்றுள்ள முதுகுன்றம், மணிமுத்தாற்றின் மருங்கே அமைந்துள்ளது. “முத்தாறு வலங் செய்யும் முதுகுன்றம்” என்று திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைத்த தலம் அதுவே. பண்டைக்காலத்தில் அவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகின்ற ழமலை இன்று காணப்படவில்லை. எனினும், அப்பதியைக் குறிக்கும் முதுகுன்றம், பழமலை முதலிய தமிழ்ப் பெயர்களும், விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரும் முன்னாளில் இருந்து மறைந்த குன்றத்தைக் குறிக்கும்!
கொடுங்குன்றம்
பாண்டி நட்டைச் சேர்ந்தது கொடுங் குன்றம். அதனைப் பெருநகர் என்றும் திருநகர் என்றும் திருஞான சம்பந்தர் பாடியிருத்தலால். அந்நாளில் அது சாலப் பெருமை பெற்றிருந்ததாகத் தோற்றுகின்றது. தமிழ் நாட்டில் அழியாப் புகழ் பெற்று விளங்கும் பாரியின் பறம்பு நாட்டை அணி செய்தது அக்குன்றம். இன்று பிரான்மலை என்பது அதன் பெயர்.4
திருக்கழுக்குன்றம்
ஈசன் கோயில் கொண்ட ஏனைய மலைப்பதிகளும் திருஞான சம்பந்தர் தேவாரத்தால் விளங்குவனவாகும்.
“கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம்”
என்றெழுந்த திருவாக்கிலுள்ள கழுக்குன்றம் திருக்கழுக்குன்றம் என்னும் சிறந்த பதியாகும். பண்டை நாளில் தொண்டை நாட்டைச் சேர்ந்தது திருக்கழுக்குன்றம்.5 தேவாரம், திருவாசகம் ஆகிய இரு பாமாலையும் பெற்றஅக்குன்றம்6 வேதாசலம் என்றும், வேதகிரி என்றும் வடமொழியில் வழங்கும். நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக அம் மலையில் நாள்தோறும் உச்சிப்பொழுதில் இருகழுகுகள் வந்து காட்சியளித்தலால் பட்சி தீர்த்தம் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. ‘கழுகு தொழு வேதகிரி’ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந் நிகழ்ச்சியை அறிவித்தருளினார்.7
திருக்கயிலாயமலை
விண்ணளாவி நிற்கும் இமயமலையில் வெள்ளியங்கிரியாக விளங்குவது திருக்கயிலாயம். ஈசனார் வீற்றிருக்கும் மலைகளுள் ஒரு மாமலையாய் இலங்கும் திருமாமலை அதுவே. கயிலாயம் இருக்கும் திசை நோக்கிப் பாடப்பட்ட தேவாரப் பதிகங்கள் பலவாகும். “கங்கையொடு பொங்குசடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே” என்று ஆனந்தக் களிப்பிலே பாடினார்
திருஞானசம்பந்தர். “கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி” என்று உளங் கனிந்து பாடினார்
திருநாவுக்கரசர். “ஊழிதோ றூழி முற்றும் உயர் பொன்மலை” என்று அதன் அழியாத் தன்மையை அறிவித்தார் சுந்தரர். இத் தகைய செம்மை சான்ற கயிலாச மலையின் இயற்கைக் கோலத்தையே தென்னாட்டுத் திருக்கோயில்கள் சுருக்கிக் காட்டும் என்பர்.
திருக்கோணமலை
இலங்கை யென்னும் ஈழ நாட்டிலுள்ள திருக்கோணமலையும் தேவாரப் பாமாலை பெற்றதாகும். தெக்கண கயிலாயம் என்று போற்றப்படும் தென்னாட்டு மலைகளுள் ஒன்று திருக்கோணமலை என்பர்.8 ‘குரை கடல் சூழ்ந்த கோணமாமலை’ என்று தேவாரத்திற் புகழப் பெற்ற அம்மலை இன்று திருக்கணாமலை என வழங்கும்.9
திருக்கற்குடி
இன்னும், “கற்குடியார் விற்குடியார் கயிலாயத்தார்” என்று தேவாரத்திற் போற்றப்படும் கற்குடி இக் காலத்தில் உய்யக் கொண்டான் திருமலை என வழங்குகின்றது.10 அம் மலையிற் கோயில் கொண்ட இறைவனை ‘விழுமியார்’ என்று திருநாவுக்கரசர் போற்றியுள்ளார்.
“கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே”
என்பது அவர் திருவாக்கு. அஃது உய்யக் கொண்டான் திருமலை யென்னும் பெயர் பெற்ற பொழுது, ஈசனும் உஜ்ஜீவநாதர் என்னும் திருநாமம் பெற்றார்.
அப் பெயர் இன்று உச்சி நாதர் என மருவி வழங்குகின்றது.11
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக் குறிப்பு
1. ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருஞ் சோதியை’ -என்று
திருவெம்பாவையிற் பாடினார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை
திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது அம் மலை, அருணாசலம், அருணகிரி, சோணாசலம், சோணகிரி, சோணசைலம் என்னும் பெயர்களும் உடையது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையிலேயே பிறந்தவர்.
2. அங்கு ஈசன் கோவிலும், திருமால் கோவிலும் எழுந்தன. அவை முறையே எதிரிலி சோழேச்சரம் எனவும் எதிரிலி சோழ விண்ணகரம் எனவும் பெயர் பெற்ற பான்மையைக் கருதும் பொழுது எதிரிலி என்பதும் இராசராசனது விருதுப்பெயர் என்று தெரிகின்றது. 301, 302 / 1912.
3. 299 / 1912.
4. கொடுங் குன்றமாகிய பறமலை (பிரான்மலை)ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற ஊர் இருந்ததென்பது கல்வெட்டால் அறியப்படும். சாசனத் தமிழ்க்கவி சரிதம் ப. 7.
5. பெரிய புராணம்-திருக்குறிப்புத் தொண்டர் புராணம்.
6. ‘கன்றினொடு பிடிசூழ்தண் கழுக்குன்றமே’-தேவாரம். ‘எனையாண்டு கொண்டு, நின்தூய் மலர்க்கழல் தந்து …காட்டினாய் கழுங்குன்றிலே’
-திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.
7. திருப்புகழ், 325.
8. “முன்னர் வீழ்ந்திடு சிகரிகா ளத்தியா மொழிவர் பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்ன தின்பிற கமைந்தது கோணமா வசலம் இன்னன மூன்றையும் தக்கிண கயிலையென் றிசைப்பர்”
-செவ்வந்திப் புராணம், திருமலைச் சருக்கம்.
9. திருக்கணாமலை என்பது ஆங்கிலத்தில் Trincomalee ஆயிற்று.
10 உய்யக்கொண்டான் என்பது இராஜராஜனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று.
11. தேவாரத் திருமுறை: சுவாமிநாத பண்டிதர் பதிப்பு, ப. 365.
Leave a Reply