(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 15 தொடர்ச்சி)

ஊரும் பேரும் 16

மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள்.

வட ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.+1 பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந் நகரம் பஞ்சு வியாபாரத்திலும், கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது. இக் காலத்தில் வாணிகம் குறைந்து விட்டாலும், கைத்தொழில் நடைபெற்று வருகின்றது.

சாலை

பாண்டி நாட்டில் கொற்கைத்துறை பழங்காலத்தில் சிறந்திருந்த தன்மையை முன்னரே கண்டோம். வாணிபம் செழித்தோங்கி வளர்வதற்கு நாணய வசதி வேண்டும். ஆதலால், கொற்கை மூதூரின் அருகே அக்க சாலை யொன்று அமைக்கப் – பெற்றது. நாணயம் அடிக்கும் இடமாகிய அக்க சாலையை உடைய ஊரும் அக்க சாலை என்று பெயர் பெற்றது. முதற் குலோத்துங்க சோழன் சாசனத்தில் அக்க சாலை ஈச்சுர முடையார் கோவில் குறிக்கப்படுதலால், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அவ்வூர் அழிவுறாது இருந்தது என்பது விளங்கும். இச்சாசனம் அக்கசாலைப் பிள்ளையார் கோவிலிற் காணப்படுகின்றது.+2

பழமையும் புதுமையும்

சில ஊர்களின் பழமையும் புதுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெல்லை நாட்டில் பழவூர் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரத்தில் பழையாறை என்னும் ஊர் பாடல் பெற்றுள்ளது. இராமநாத புரத்தில் பழையகோட்டை என்னும் ஊர் உண்டு. புதிதாகத் தோன்றும் ஊர்கள், புது என்னும் அடை மொழியைப் பெரும்பாலும் பெற்று வழங்கும். புதுக் கோட்டை, புதுச்சேரி, புதுக்குடி, புதுக்குளம், புதுப்பேட்டை, புதுவயல் முதலிய ஊர்ப் பெயர்களால் அவ்வூர்கள் புதிதாக வந்தவை என்பது போதரும்.

கிழக்கும் மேற்கும்

சில ஊர்களின் திசையை அவற்றின் பெயரால் நன்கறிதல் கூடும். இலக்கியத் தமிழில் குணக்கு என்பது கிழக்கு குடக்கு என்பது மேற்கு. இவ் விரு சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படும். ஒரு காலத்தில் சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஜெயங்கொண்ட சோழபுரத்துக்குப் பத்து கல் தூரத்தில் உள்ள ஊர் குணவாசல் என்று பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டில் குடவாசல் என்பது ஒர் ஊரின் பெயர். முன்னாளில் சிறந்து விளங்கிய ஒரு நகரத்தின் மேற்குத் திசையில் அவ்வூர் அமைந்தது போலும் இன்னும், குடகு என்னும் நாடு தமிழ் நாட்டில் மேற்கு எல்லையாக விளங்கிற்றென்று இடைக் காலத் தமிழ் இலக்கணம் கூறுகின்றது.+3 தமிழகத்தின் மேற்றிசையில் அமைந்த காரணத்தால் தமிழ் நாட்டார் அதனைக் குடகு என்று அழைத்தார்கள். கிழக்கு, மேற்கு என்னும் சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன. நாகப்பட்டினத்துக்கு அருகேயுள்ள வேளுர், கீழ் வேளுர் என்று அழைக்கப்படுகின்றது. அவ் ஆரின் பெயர் இப்பொழுது கீவளுர் என்று சிதைந்துள்ளது.

மலாடு என்னும் பழைய நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் கீழுர் ஆகும். பாண்டி நாட்டுக் கரையில் உள்ள கீழக்கரை என்னும் துறையும், மதுரையிலுள்ள கீழக்குடி என்னும் ஊரும் திசைப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. மதுரையி லுள்ள மேலூரும், வட ஆர்க்காட்டி லுள்ள மேல்பாடியும் இன்னோரன்ன பிறவும் மேற்குத் திசையைக் குறிப்பன வாகும்.

வடக்கும் தெற்கும்

இங்ஙனமே வடக்கும் தெற்கும் சில பெயர்களில் அமைந்துள்ளன. தமிழ் நாட்டுக்கு வடக்கே யுள்ள நாட்டை வடுகு என்றழைத்தனர் பண்டைத் தமிழர். “வடதிசை மருகின் வடுகு வரம்பாக“ என்று பாடினார் ஒரு பழம் புலவர்.+4 வடபாதி மங்கலம் முதலிய ஊர்களிலும் வடக்கைக் காணலாம். தமிழகத்தின் தென்பால் அமைந்த பாண்டிநாடு, தென்னாடு என்று பெயர் பெற்றது. அந் நாட்டிலுள்ள தென்காசி, தென்திருப்பேரை முதலிய ஊர்கள் தெற்கே எழுந்தவை என்பது வெளிப்படை. .

தலை, இடை, கடை

இன்னும் ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும் அடைமொழிகள் அவற்றின் பெயரோடு இணைக்கப்படுவ துண்டு. தலையாலங் கானம், தலைச் செங்காடு என்னும் பாடல் பெற்ற ஊர்களின் பெயரில் தலையென்னும் அடைமொழி அமைந்துள்ளது. சேலம் நாட்டில் தலைவாசல் என்பது ஓர் ஊர். தஞ்சையில் தலைக்காடு என்னும் ஊரும், ஆர்க்காட்டில் தலைவாய் நல்லூர் என்னும் ஊரும் காணப்படுகின்றன.

இடையென்னும் அடைமொழியைக் கொண்ட ஊர்களில் மிகப் பழமை வாய்ந்தன திருவிடைமருதூர், திருவிடைச் சுரம், இடையாறு முதலியனவாம். இவை மூன்றும் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. இடைக்காடு என்ற ஊரிலே பிறந்த புலவர் ஒருவர் இடைக்காடர் என்று பண்டை இலக்கியத்தில் பேசப்படுகின்றார். அரிசில் ஆற்றுக்கும் திருமலைராயன் ஆற்றுக்கும் இடையேயுள்ள ஊர், இடையாற்றங் குடி என்னும் பெயர் பெற்றுளது. இன்னும், இடையென்று பொருள்படுகின்ற நடு என்னும் சொல், நெல்லை நாட்டிலுள்ள நடுவக்குறிச்சி, சோழ நாட்டிலுள்ள நடுக்காவேரி முதலிய ஊர்களின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம்.

இனி, கடையென்னும் அடையுள்ள ஊர்ப் பெயர்கள் சில உண்டு. சேலம் நாட்டிலுள்ள கடைக் கோட்டூரும், தென் ஆர்க்காட்டிலுள்ள கடைவாய்ச் சேரியும், நெல்லை நாட்டிலுள்ள கடையமும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

பெரியதும் சிறியதும்

பெருக்கமும் சுருக்கமும் சில ஊர்ப் பெயர்களிலே பொருந்தி நிற்கக் காணலாம். கொங்கு நாட்டில் முற்காலத்தில் பெரியதோர் ஊராக விளங்கியது பேரூர் ஆகும். தஞ்சை நாட்டிலுள்ள பேரளம் என்னும் ஊரும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரும் புலியூரும் பெரிய ஊர்களாக இருந்திருக்கவேண்டுமென்று தெரிகின்றது. சிறிய ஊர்கள் சிற்றூர் என்று பெயர் பெற்றன.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

+1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கர்நாடகத்தின் நவாபாக இருந்த முகமது அலி, வாலாஜா என்றும் வழங்கப்பெற்றார். 1bid, p. 180.

+2. 165 of 1903.

+3. குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையுள் இருந்தமிழ் – நன்னூல்.

+4. சிறுகாக்கை பாடினியார் : பெருந்தொகை – 1997.