(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17

அத்தகைய சிற்றூர்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு சில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவத்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு திருச்சிற்றேமம் ஆயிற்று. நாளடைவில் அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது.

நெடுமையும் குறுமையும்

      சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெடுங்களம் என்பது தேவாரத்திற் பாடப் பெற்றுள்ள பெரிய நகரம். திருநாவுக்கரசர் அவ்வூரை ‘நெடுங்கள மாநகர்’ என்று பாடியுள்ளார். அவ்வூரின் பெயர் இப்பொழுது திருநெடுங் குளம் என வழங்குகின்றது. மாயூரத்துக்கு அருகேயுள்ள நீடூர என்னும் ஊர் பழங்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. நெல்லை நாட்டிலுள்ள திருப்பதிகளில் ஒன்று குறுங்குடி என்பதாகும். அஃது ஆழ்வாரது மங்களாசாசனம் பெற்றமையால் திருக்குறுங்குடி ஆயிற்று. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த குறும்புலி யூரிலும், தொண்டை நாட்டுக் குறுங்கோழியூரிலும் குறுமை அமைந்திருக்கக் காண்கிறோம்.

செம்மை, கருமை, வெண்மை

      செம்மை, கருமை முதலிய நிறங்கள் சில ஊர்ப் பெயர்களில் விளங்குகின்றன. தஞ்சை நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊர் உள்ளது. செந்நிறக் காட்டின் இடையே அமைந்த குடியிருப்பு, செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது போலும்.  காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே தலைச் செங்கானம் என்னும் பெயருடைய ஊர் உண்டு. தேவாரத்திலும் சங்க இலக்கியத்திலும் அவ்வூர் குறிக்கப் படுகின்றது. செந்நிறத்தால் பெயர் பெற்ற குன்றுகளில் ஒன்று சேலம் நாட்டிலுள்ள செங்குன்று. அச்சிகரத்தின் பெயராகிய திருச்செங்கோடு என்பது இன்று ஊர்ப் பெயராக வழங்குகின்றது. சேர நாட்டில் செங்குன்று என்னும் வைணவத் திருப்பதி நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளது. இந்நாளில் அது செங்கன்னூர் என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றது. அருணாசலம் என்ற வட சொல்லின் பொருள் செங்குன்றம் என்பதே யாகும். அருணாசலம் திருவண்ணாமலையின் மறுபெயர். இன்னும், செங்குளம், செங்களக்குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்கள் செம்மையின் அடியாகப் பிறந்தவை. அவ்வாறே கருங்குளம், கருங்குழி, கார் குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்களில் கருமை அமைந்திருக்கக் காணலாம்.

      நிலத்தின் நிறம் பற்றி எழுந்த ஊர்ப் பெயர்கள் பலவாகும். கருநிறம் வாய்ந்த தரை கரிசல் எனப்படும். பாண்டி நாட்டில் சின்னக் கரிசல், குலையன் கரிசல் முதலிய ஊர்கள் உள்ளன. செந்நிறம் வாய்ந்த நிலம் செவ்வல் என்று பெயர் பெறும். தென்னாட்டில் மேலச் செவல், கீழச் செவல், முள்ளிச் செவல் முதலிய ஊர்கள் உண்டு.1 வெண்மையின் அடியாகப் பிறந்த ஊர்ப் பெயர்களும் உள்ளன. திருவெண்காடு, திருவெண்பாக்கம், திருவெள்ளறை முதலியன அவற்றிற்குச் சான்றாகும்.

மேடும் பள்ளமும்

   சில குடியிருப்புகளின் தன்மையை அவற்றின் பெயர்கள் அறிவிக்கின்றன. மேட்டில் அமைந்த ஊர்களையும் பள்ளத்தில் அமைந்த ஊர்களையும் அவற்றின் பெயர்களால் உணரலாம். சோழ மண்டலக் கரையில் அமைந்துள்ள கள்ளிமேடு என்னும் ஊர் முற்காலத்தில் கள்ளிகள் அடர்ந்து மேடாக இருந்த இடமென்று தெரிகின்றது. புதுச்சேரிக்கு  வடக்கே கடற்கரையில் கூனிமேடு என்னும் ஊர் உள்ளது. இன்னும் சேலத்திலுள்ள மேட்டூரும், நீலகிரியிலுள்ள மேட்டுப் பாளையமும் மேடான இடங்களில் அமைந்த ஊர்களே யாகும்.     திட்டை, திடல் முதலிய சொற்களும் மேட்டைக் குறிப்பனவாம். தஞ்சை நாட்டில் திட்டை என்பது ஓர் ஊர். இன்னும், நடுத்திட்டு, மாளிகைத் திடல், பிள்ளையார் திடல், கருந்திட்டைக் குடி முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உண்டு.    பள்ளம் என்னும் சொல் பல ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது. பெரும் பள்ளம், இளம் பள்ளம், ஆலம் பள்ளம், எருக்கம் பள்ளம் முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உள்ளன.2 நெல்லை நாட்டிலுள்ள முன்னீர்ப் பள்ளமும், இராமநாதபுரத்திலுள்ள பள்ளத்தூரும் பள்ளத்தாக்கான இடங்களில் அமைந்திருந்த ஊர்கள் போலும்! குழி என்னும் சொல்லும் பள்ளத்தைக் குறிக்கும். கருங்குழி, ஊற்றுக்குழி, அல்லிக்குழி, பள்ளக்குழி, குழித்தலை முதலிய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் அமைந்துள்ளன. இன்னும், பள்ளத்தைக் குறிக்கும் தாழ்வு என்னும் சொல் தாவு எனச் சிதைந்து சில ஊர்ப் பெயர்களிலே வழங்குகின்றது. கருங்குழித்தாவு, பணிக்கத்தாவு முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

தாளும் அடியும்

    பழங் காலத்தில் மரங்களின் அடியில் சில குடியிருப்புகள் தோன்றி, அவை நாளடைவில் ஊர்களாயிருக்கின்றன. அவ்வூர்களின் வரலாறு அவற்றின் பெயரால் விளங்கும். திருப்பனந்தாள் என்னும் பழம்பதி பனங்காட்டில் எழுந்த ஊராத் தெரிகின்றது. சேலம் நாட்டில் முருகந்தாள் என்பது ஓர் ஊரின் பெயர். நெல்லை நாட்டில் ஆலந்தாள், ஈச்சந்தாள், கருவந்தாள் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. தாள் என்ற பொருளைத் தரும் அடி என்னும் சொல் மாவடி, ஆலடி, இலவடி, மூங்கிலடி முதலிய ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது.

நத்தம்

   ஊர்ப் பொதுவாக அமைந்த இடம் நத்தம் எனப்படும். அத் தகைய இடம் குடியிருப்பாக மாறிய பின்னரும் பழைய பெயர் எளிதாக மறைவதில்லை. நெல்லை நாட்டிலுள்ள கீழ நெத்தம், மேல நத்தம் என்னும் ஊர்களும், மதுரையிலுள்ள பிள்ளையார் நத்தமும், தென் ஆர்க்காட்டிலுள்ள திருப்பணி நத்தமும் செங்கற்பட்டிலுள்ள பெரிய நத்தமும் இதற்குச் சான்றாகும். சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்தில் வெட்டை வெளியான இடத்தில் ஒரு நத்தம் எழுந்தது. அது பொட்டல் நத்தம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அப் பெயர் தேய்ந்து சிதைந்து பொட்டணம் ஆயிற்று. பழைய பொட்டலும் நத்தமும் இப்போது பொட்டணத்தில் அமைந்திருத்தலைக் காண்பது ஒரு புதுமையாகும்.

களம்

     இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சம வெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாத்திரம் பெறக்கருதிய அருச்சுனன் அவர் அருளைப் பெறுவதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக் களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.

     களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப்பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்தூ ராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்தூருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

1.  மணற்பாங்கான இடத்திலமைந்த ஊர் மணலி எனப்படும்.
2. மேலப்பெரும்பள்ளம் என்பது பாடல் பெற்ற திருவலம் புரத்துக்கு இப்பொழுது வழங்கும் பெயர். (M.E.R 1924-25)