(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18

 

வெளி

     வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு. சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவ ரென்பது வெளிப்படை.

அரணும் அமர்க்களமும்

     தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள் பல இருந்தன. அரசனுக்குரிய மனை அரண்மனையென்று அழைக்கப்பட்டது. அரண் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களால் அறியலாம்.

 எயில்

     எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். ஆகாய வழியாகச் செல்லும் கோட்டை போன்ற விமானங்களைத் ‘தூங்கு எயில்’ என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது.1 தொண்டை நாட்டில் பண்டை நாளில் இருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயில் கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக் கோட்டத்திலே தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சி மாநகரம் விளங்கிற்று. அக் காரணத்தால் காஞ்சியை எயிற்பதி என்று சேக்கிழார் குறித்துப் போந்தார்.2 காஞ்சி மாநகரத்தின் பழைய வடிவம் ஓர் அழகிய பாட்டிலே காட்டப்படுகின்றது.

             “ஏரி யிரண்டும் சிறகா எயில்வயிறாக்

            காருடைய பீலி கடிகாவாச் – சீரிய

            அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே

            பொற்றேரான் கச்சிப் பொலிவு”3

என்பது அப் பாட்டு. ‘காஞ்சி நகரம் ஓர் அழகிய மயில் போன்றது. எயில் அம் மயிலின் உடல்; ஏரி அதன் சிறகு; அத்தியூர் அதன் வாய்; அடர்ந்த காடு அதன் தோகை’ என்பது அப் பாட்டின் கருத்து. எனவே, காஞ்சிபுரம் ஒரு மயில் கோட்டையாக விளங்கிற்றென்பது நன்கு அறியப்படும்.

     பண்டை நாளில் பாண்டி நாட்டில் எயில்கள் பல இருந்தன. பூதப் பாண்டியனுடைய சிறந்த நண்பனாகிய சிற்றரசன் ஒருவன் எயில் என்ற ஊரில் இருந்து ஆண்ட செய்தி ஒரு பழம் பாட்டால் தெரிகின்றது.4 மன்னெயில் ஆந்தை என்று பாண்டியன் அவனைக் குறித்தலால் நிலை பெற்ற கோட்டையாக அவனது எயில் விளங்கியிருத்தல் வேண்டும் என்று தோற்றுகின்றது.

     பழங் காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் என்னும் நகரம் விளங்கிற்று. அவ்வூரில் சோழ மன்னர்கள் அரசு வீற்றிருந்த செய்தியைச் சேக்கிழார் வாக்கால் அறியலாகும்.5 அக்காலத்தில் அஃது அரண் அமைந்த சிறந்த நகரமாக இருந்ததென்பது சில அடையாளங்களால் அறியப்படும். பேரெயில் என்னும் பெயருடைய ஒரு கோட்டை அதன் அருகே இருந்தது. அக் கோட்டையைச் சுற்றி ஒரு சிற்றூர் எழுந்தது. அவ்வூர் பேரெயிலூர் என்று பெயர் பெற்றது. இந் நாளில் அப் பெயர் சிதைந்து பேரையூர் என வழங்குகின்றது.6

      பாண்டி நாட்டில் கானப் பேரெயில் என்னும் பெருங்கோட்டை இருந்தது. வேங்கை மார்பன் என்று பெயர் பெற்ற வீரன் ஒருவன் அக் கோட்டையின் தலைவனாக விளங்கினான். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அவன் மீது படையெடுத்துச் சென்று கானக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி சங்க இலக்கியங்களிற் கூறப்படுகின்றது. அவ் வெற்றியின் காரணமாக அம் மன்னன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் உயரிய பட்டம் பெற்றான்.7

      கானப் பேரெயிலுக்கு அணித்தாக ஏழெயில் என்னும் கோட்டை ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது. ஒருகால் அக்கோட்டையைக் கைப்பற்றிய  நலங்கிள்ளியென்ற சோழனை,

        “தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்

        ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்

        பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை

என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடியுள்ளார். இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ள ஏழுபொன் கோட்டை என்ற ஊரே பழைய ஏழெயில் என்பர்.

     நெல்லை நாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகே ஒரு பேரெயில் இருந்ததாகத் தெரிகின்றது. அக்கோட்டை நகரத்தில் திருமால் கோயில் கொண்டருளினார். ஆதலால், அவ்வூர் திருப்பேரெயில் என்று அழைக்கப்பட்டது.8 திருப்பேரை என்பது அப்பெயரின் குறுக்கம். வைணவத் திருப்பதிகளில் வடநாட்டில் திருப்பேர் நகர் ஒன்று இருத்தலால், இதனைத் தென் திருப்பேரை என்று அழைத்தார்கள். தென் திருப்பேரி என்பது இன்று

அவ்வூர்ப் பெயராக வழங்குகின்றது. இன்னும், வட ஆரக்காட்டிலுள்ள செஞ்சிக் கோட்டையின் அருகே எய்யல் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உண்டு. எயில் என்பதே எய்யல் எனச் சிதைந்துள்ளது.

அகழி

    சேலம் நாட்டு ஆற்றூர் வட்டத்திலுள்ள ஆறகழூர் முற்காலத்தில் சிறந்ததொரு கோட்டையாக விளங்கிற்று. அங்குள்ள திருக்காமேச்சுரம் என்னும் சிவாலயத்திற்குப் பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அளித்த நன்கொடைச் சாசனங்களிலே காணப்படும்.26 அவ்வூருக்கு அண்மையில் பெரியாரை என்னும் பெயருடைய கோட்டையொன்று இருந்தது. அதன் அடையாளம் இன்றும் காணப்படுகின்றது. இப்போது அந்த இடம் பெரியேரி என்று வழங்குகின்றது.

இஞ்சி

     கோட்டையின் மதிற்சுவர் இஞ்சி என்ற சொல்லாற் குறிக்கப்படும். பாண்டி நாட்டில் மதுரைக்கு அண்மையில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்னும் ஊர்கள் உள்ளன. பழஞ்சி என்பது பழ இஞ்சி என்பதன் சிதைவாகத் தோன்று கின்றது. இவற்றால் பண்டைய நகரத்தின் கோட்டை மதில்களின் எல்லையை ஒருவாறு அறிந்துகொள்ளலாகும். நெல்லை நாட்டில் நாங்குனேரிக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் பெரும் பழஞ்சி, சிறு

பழஞ்சி என்னும் இரண்டு ஊர்கள் உண்டு. அவை பழங் கோட்டைகளாகக்

கருதப்படுகின்றன. இக் காலத்தில் பெரும் பழஞ்சிக்கு வழங்கும் தளபதி

சமுத்திரம் என்னும் பெயரும் அவ்வூரின் வீரத் தன்மையை விளக்குகின்றது.

ஆரை

     ஆரை என்னும் சொல்லும் கோட்டையின் மதிலைக் குறிப்பதாகும். சேலம் நாட்டில் ஆரைக்கல் என்னும் கோட்டை உண்டு. அங்குள்ள பாறையின் மீது பெருமாள் கோவில் எழுந்து சிறந்தது. பெருமாளுடைய திருநாமம் ஆரைக்கற் பாறையில் போடப்பட்டது. அக் காரணத்தால் ஆரைக்கல் என்னும் பழம் பெயர் மாறி நாமக்கல் என்னும் பெயர்

அவ்வூருக்கு அமைவதாயிற்று.9 அஃது இரு பகுதிகளையுடையதாய் விளங்குகின்றது. ஒன்று கோட்டை; மற்றொன்று பேட்டை. கோட்டை இரு நூறடி உயரமுள்ள பாறையின் உச்சியில் உள்ளது. அரைமைல் சுற்றளவுடைய கோட்டையின் மதில்கள் இன்றும் காணப்படுகின்றன. பேட்டையே ஊராக விளங்குகின்றது.

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

1. தூங்கு எயில் = Flying Fortress. தூங்கெயிலை அழித்த சோழன் ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ என்று பெயர் பெற்றான்; புறநானூறு, 39. சிலப்பதிகாரம், 27, 164.
2. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 5.
3.  பெருஞ்சித்திரனார் பாட்டு – பெருந்தொகை : 2129.
4.  புறநானூறு, 71.
5.  ‘செம்பியர் வாழ்பதி திருவாரூர்’ என்றார் சேக்கிழார்; திருநகரச் சிறப்பு, 12.
6.  ஓகைப் பேரையூர் எனவும் வழங்கும், இது பாடல் பெற்ற சிவத்தலம்.
7. அக்கோட்டையின் ஆழ்ந்த அகழியும், உயர்ந்த மதிலும், அதன் மீதமைந்த ஞாயிலும், காவற்காடும் ஐயூர் மூலங்கிழார் பாடிய செய்யுளில் குறிக்கப்பட்டுள்ளன; புறநநானூறு, 21. 25. “தென்திருப்பேரெயில் மாநகரே” – திருவாய்மொழி : 7, 3, 9
8. 415 / 1919; 418 / 1913.
9. 5 / 1906.