(ஊரும் பேரும் 59 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சாத்தங்குடி – தொடர்ச்சி)

ஊரும் பேரும்

இறையும் அறமும்


சிவபாத சேகர நல்லூரும் மங்கலமும்
சைவ சமயத்தைச் சார்ந்த பெரு மன்னர்கள் தமிழ் நாட்டில் அரசு வீற்றிருந்தபோது சிவம் மணக்கும் சொற்களை ஊர்ப் பெயராக்கினார்கள். சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட இராசராசன் உண்டாக்கிய சிவபாத சேகரபுரம் இப்பொழுது சிவாயம் என வழங்குதலை முன்னரே கண்டோம். அம்மன்னன் பாண்டி நாட்டில் திருநெல்வேலிக்கு மேற்கேயுள்ள நல்லூரில் சில நிலத்திற்குச் சிவபாத சேகர நல்லூர் என்று பெயரிட்டு, அதனைச் சேரவன் மாதேவிக் கயிலாச நாதர் கோயிலுக்கு தேவதானமாக விட்ட செய்தி சாசனத்தால் விளங்குகின்றது.1 இன்னும் சிவபாத சேகர மங்கலம் என்ற ஊர் திருக்கடவூர்க் கோயிற் சாசனத்தில் குறிக்கப் படுகின்றது.2 ஆகவே, சிவபாதசேகரன் பெயரால் அமைந்த புரமும், நல்லூரும், மங்கலமும் தமிழ் நாட்டில் சைவ சமயத்தின் பெருமையை விளக்கி நின்றன.3


திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் என்பது சைவ சமயத்தார் போற்றும் செம்மை சேர் நாமம். தில்லை மன்றத்தின் பெயராகிய திருச்சிற்றம்பலத்தின் பெருமை தமிழக முழுவதும் பரவி நின்றது. தேவாரப் பாமாலை பெற்ற திருச்சிற்றேமம் என்னும் சிவாலயம் திருச்சிற்றம்பலம் என மாறி வழங்கலாயிற்று.4

குலோத்துங்க திருநீற்றுச் சோழ நல்லூர்

சோழன் திருச்சிற்றம்பல நல்லூர் என்ற ஊரை இறையிலி யாக்கித் திருப்பாலைத் துறையுடையார்க்குத் தேவதானமாக அளித்தான் என்று சாசனம் கூறும்.5
மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு” என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெருமன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம்மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும்.6


இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்.7


இன்னும், தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது.8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது.9 இன்னும், திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர், மற்றும் ஒன்பதூர் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித் திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது அச்சாசனம்.10


திருத்தொண்டத்தொகை மங்கலம்
திருத்தொண்டத் தொகை என்பது திருத்தொண்டர்களாகிய சிவனடியாரின் செம்மையைப் போற்றும் தேவாரத் திருப்பதிகம்.“தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றெடுத்துச் சுந்தரர் பாடிய அப்பதிகமே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்கு அடிப்படை யாயிற்று. இத்தகைய திருத் தொண்டத்தொகையில் ஈடுபட்ட சைவ மன்னர் அப்பெயரைச் சில ஊர்களுக்கு இட்டார்கள். திருக்கடவூர் மயானத்துச் சிவாலயத்தில் உள்ள சாசனத்தில் திருத் தொண்டத் தொகை மங்கலம் என்ற ஊர் குறிக்கப்பட்டுள்ளது.11

தேவதானம்
திருக்கோயிலுக்கு அரசர் இறையிலியாக விட்ட நிலங்களும், ஊர்களும் தேவதானம் எனப்பட்டன. இத்தகைய தானம் தமிழ் நாட்டிற் சிறந்திருந்த தென்பது சாசனங்களாலும் ஊர்ப் பெயர்களாலும் அறியப்படும். செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் தேவதானம் என்னும் ஊர் உண்டு. தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் மற்றொரு தேவதானம் உள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவில்லி புத்தூர் வட்டத்தில் இன்னொரு தேவதானம் இருக்கின்றது. மதுரை நாட்டுப் பெரியகுள வட்டத்தில் தேவதானப் பட்டி என்பது ஓர் ஊரின் பெயர்.

மங்கலம்
நன்மையானவற்றை யெல்லாம் மங்கலம் என்னும் சொல் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் பல ஊர்ப் பெயர்களில் மங்கலச் சொல் அமைந்திருக்கக் காணலாம். தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருமங்கலக்குடி. காவிரியாற்றின் வட கரையில், வளமெலாம் வாய்ந்து விளங்கிய அப்பதியைச் “செல்வம் மல்கு திருமங்கலக்குடி” என்று திருநாவுக்கரசர் பாடினார்.


மங்கை
மங்கலம் என்பது மங்கை எனவும் குறுகி வழங்கும். திருவாசகம் பெற்ற பட்ட மங்கையும்,12 தேவாரம் பெற்ற சாத்த மங்கை, புள்ள மங்கை, விசய மங்கை என்னும் ஊர்களும், திரு வாய்மொழி பெற்ற வரகுண மங்கையும் இதற்குச் சான்றாகும்.
பிற்காலத்தில் தமிழ் மன்னர்கள் உண்டாக்கிய ஊர்களில் மங்கலப் பேர் இடம் பெற்றது. தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருமங்கலம் இராசராசனால் உண்டாக்கப் பட்டதாகும்.13 பாண்டி நாட்டுத் திருமங்கல வட்டத்திலுள்ள விக்கிர மங்கலம், விக்கிரம சோழபுரம் என்று சாசனத்தில் வழங்குகின்றது.14 இன்னோரன்ன மங்கலங்கள் தமிழகத்தில் பல உண்டு.


சதுர்வேதி மங்கலம்
வேதம் நான்கையும் கற்றுணர்ந்த வேதியர்க்கு விடப் பட்ட ஊர் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. தமிழ் நாட்டு மன்னரும் அவர் தேவியரும் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலங்கள் பலவாகும். மதுராந்தகன், சோழாந்தகன் முதலிய விருதுப் பெயர்களோடு இணைந்த சதுர்வேதி மங்கலம் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன. செங்கற்பட்டைச் சேர்ந்த மதுராந்தகம் என்னும் ஊர் மதுராந்தகன் நிறுவிய சதுர்வேதி மங்கலம், அவ் வண்ணமே மதுரைக் கருகேயுள்ள சோழ வந்தான் என்ற ஊர் சோழாந்தகனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம்.
தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் பெரு வளந்தான் என்னும் ஊர் உள்ளது. பெரு வாழ்வு தந்த பெருமாள் சதுர்வேதி மங்கலம் என்பது அதன் முழுப் பெயராகும்.15
பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த செம்பி நாட்டில் வீரநாரா யண சதுர்வேதிமங்கலம் என்னும் ஊர் விளங்கிற்று. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பாடிப் பெருமை யுற்ற பகழிக் கூத்தர் அவ்வூரிலே பிறந்தவர். “செம்பி நாட்டு வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம் விளங்க வந்தவர்16 என்று சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று கூறுதலால் இவ்வுண்மை விளங்கும். சன்னாசி கிராமம் என்று அவ்வூர் இந்நாளில் வழங்கும். –
வட ஆர்க்காட்டுப் போனார் வட்டத்தில் மகாதேவ மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அதன் பழம் பெயர் மகாதேவி மங்கலம் என்பதாகும்.17 செங்கற்பட்டில் உள்ள மணிமங்கலம் என்ற ஊர் இராசராசன் தேவியாகிய உலக மாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம்.18


தஞ்சை வட்டத்தில் மன்னார் சமுத்திரம் என்னும் மறு பெயருடைய செந்தலை என்ற ஊர் உள்ளது. சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என முற்காலத்தில் வழங்கிய பெயரே பிற்காலத்தில் செந்தலை யெனச் சிதைந்தது.19
வட ஆர்க்காட்டில் தீன சிந்தாமணியின் பெயர் கொண்ட சதுர்வேதி மங்கலம் ஒன்றுண்டு. தீன சிந்தாமணி என்பது முதற் குலோத்துங்கனுடைய தேவியின் பெயராதலால், அவ்வூர் அவரால் உண்டாக்கப்பட்டதென்று கொள்ளலாகும்.20 கடைக்கோட்டுப் பிரம தேசம் என்பது அதன் மறு பெயராகச் சாசனத்தில் வழங்குகின்றது. இப்பொழுது பிரமதேசம் என்பது அதன் பெயர்.21


பட்டவிருத்தி
கற்றுயர்ந்த பார்ப்பனர்க்கு இறையிலியாக அரசரால் விடப்படும் நிலம் பட்டவிருத்தி யெனப்படும். பட்ட விருத்தி யென்ற ஊர் ஒன்று மாயவர வட்டத்தில் உள்ளது. பட்ட விருத்தி அய்யம்பாளையம் என்ற ஊர் கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உண்டு.


பட்ட மங்கலம்
இன்னும், பட்டமங்கலம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவாகும். பாண்டி நாட்டுத் திருப்பத்தூரில் ஒரு பட்டமங்கலம்; சோழ நாட்டு மாயவரத்தில் மற்றொரு பட்ட மங்கலம், நாகபட்டினத்தில் இன்னொரு பட்ட மங்கலம், இன்னோரன்ன மங்கலம் இன்னும் சிலவுண்டு.


அகரம்
அகரம் என்பது அக்கிரகாரத்தின் குறுக்கம் என்பர்.22 தமிழகத்தில் அகரம் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு. தென்னார்க் காட்டிலுள்ள அகரம் சனநாத சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப் படுதலால், சனநாத சோழன் என்னும் இராச ராசன் அதனை அமைத்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.23
இராசேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் தொண்டை நாட்டில் ஓர் அகரம் உண்டாக்கினான்; வானவன் மாதேவி என்னும் தன் தேவியின் பெயரை அவ்வூருக்கு இட்டான்; வானமங்கை என்று வழங்கப் பெற்ற அப் பதியில் பிராமணர்களைக் குடியேற்றினான்.24 அங்குக் கைலாச நாதர் கோவிலும் கட்டினான். இங்ஙனம் கங்கை கொண்ட சோழன் கண்ட நகரம் இன்று செங்கற்பட்டில் அகரம் என்னும் பெயரோடு விளங்குகின்றது.25
செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் இரண்டு அகரங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, வானவன் மாதேவியால் உண்டாக்கப்பட்டது.26 மற்றொன்று, பிற்காலத்தில் திம்மப்ப நாயக்கரால் ஏற்பட்டதென்று சாசனம் தெரிவிக்கின்றது. நெல்லிக் குப்பம் முதலிய மூன்று ஊர்களினின்றும், இரண்டாயிரம் குழி நிலத்தைப் பிரித்தெடுத்து அந் நாயக்கர் உண்டாக்கிய அக்கிர காரம் அகரம் என வழங்கலாயிற்று.27
வட ஆர்க்காட்டில் அக்கிரகாரம் என்றும், அக்கிர காரப்பாளையம் என்றும் இரண்டு. ஊர்கள் உள்ளன. நெல்லை நாட்டில் மேலகரமும், திருச்சி நாட்டில் காட்டகரமும் தென்னார்க்காட்டில் புத்தகரமும், வட ஆர்க்காட்டில் கோட்டகரமும் காணப்படும்.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

1. 612 / 1916.

2. 642 / 1916.

3. சாமந்தருள் ஒருவனாகிய சோழகங்க தேவன் அரசனிட மிருந்து பெற்ற ஐந்து வேலி நிலத்திற்குச் சிவபாத சேகர மங்கலம் என்று பெயரிட்டுத் திருச்சிற்றம்பல முடையார்க்கு நிவந்தமாக விட்ட செய்தி சாசனத்தால் அறியப்படும். 185 / 1929.

4. செ.க.அ.(M. E. R.), 1925 – 26, 189 / 1926.

5. 434 / 1912.

6. 312 / 1901.

7, 363 / 1911

8. 505 / 1922.

9, 280 / 1913,

10. 120 / 1930. சோழர்கள், தொகுதி 2.ப.418.

11. 54 / 1906. –

12. “பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்(கு)

அட்டமா சித்தி அருளிய அதுவும்”

– கீர்த்தித் திருவகவல், 62-63

13. செ.கை.அ., 1926-27.

14. இ.கை.ப.(I. M. P.), ப. 1039.

15, 193 / 1908,

16. பெருந்தொகை, 1665.

17. செ.க.அ.(M. E. R.), 1933 – 34.

18.144 / 1919.

19.எல்.எம்.பி., பக்கங்கள். 1398-1400

20.671 / 1919.

21. 271 / 1915.

22. எனினும், வேளாளர் அகரம் என்பது தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.

23.326 / 1922.

24.232 / 1931.

25.சோழர்கள், தொகுதி 1.ப.549.

26.செ.க.அ.(M. E. R.), 1930 – 31.

27.செ.க.அ.(M. E. R.), 1934 – 35.