– கே.சி.சிவபாலன்

                ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோவை – 03              

                 agri_sivapalan01

 

 

இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில்,  சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்க‌ளை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக மக்களை போய்ச் சேரவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதற்கு முதன்மைக் காரணம் சரியான தகவல் தொடர்பு இன்மையே ஆகும். இன்றைக்கு ஊர்ப்புறங்களில் நிலவி வரும் வறுமை, கல்வியறிவின்மை, குறைந்த  நலவாழ்வு வாய்ப்புகள்,  குறைந்த வேலை வாய்ப்புகள், பெருகிவரும் நகரம் சார்ந்த இடப் பெயர்வுகள்,பெருகிவரும் வேளாண் வேலையாட்கள் தட்டுப்பாடு போன்ற சிக்கல்களுக்கும்  முதன்மைக் காரணமாக அறியப்படுதலும் தகவல் தொடர்பு இன்மையே.

வேளாண்  அறிவியலார் கண்டறிந்த அறிவுசார் தொழில்நுட்பங்கள், புதிய மேம்பாட்டு உத்திகளை மக்களிடையே விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டும். தகவல் தொடா;பு இடைவெளி இல்லாமல் இருந்தால் தான்  மன்பதைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அகன்று நீடித்த வளர்ச்சி (Sustainable development) அடைய முடியும். தகவல் தொடர்பு என்பது மனிதக் குலம் தோன்றியதில் இருந்து நடந்து வரும் நிகழ்வாகும். தகவல்களை அறிந்து கொள்ளும் பண்புதான்  மன்பதை, பொருளாதார மாற்றங்களுக்கு முதல்படி என்று சொல்ல வேண்டும். தகவல்களை அறிந்துகொள்வதும், புதிய நுட்பங்களை அன்றாட வாழ்வில் புகுத்திப் பார்ப்பதும்தான் தனிமனிதனைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் வைக்கின்றது. தகவல்தொடர்பு குறிப்பாக இணையமும் தொலைத் தொடார்பும் என்பது வெறும்  அறிவியல் இணைப்புக் கருவிகளுக்கு இடையேயான தொடர்பு அன்று! அதுவே  மன்பதை வளர்ச்சிக்கான இணைப்புச் சங்கிலியாகும்.

வேளாண்  மன்பதை அறிவியலாளர்களின் பங்கு

வேளாண் தொழில்நுட்பங்களை, எளிமைப்படுத்தி மக்களிடம் சென்று சேர்ப்பிக்க வேண்டியது வேளாண் மன்பதை அறிவியலாளர்களின் பணியாகும். வேளாண் விரிவாக்கத் துறையின் சார்பாக மேற்கொள்ளப்படும் ஊரகக் கூட்டங்கள், பயிற்சிகள், கையேடுகள், குறுந்தகடுகள், வானொலி, தொலைபேசி நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப விளக்கக் கூட்டங்கள், வேளாண் அறிவியலாளர்களுக்கான பயிற்சிகள், ஆராய்ச்சித் திட்டங்கள், கல்வியியல் பணிகள் மூலமாக இதுவரை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மாறிவரும் இன்றைய  ஊரகச் சூழ்நிலையில், வேளாண் தகவல்கள் விரைவான வகையில் அதிக அளவு மக்களைச் சென்று அடையும் வகையில் தொழில்நுட்பம் பின்பற்றப்பட வேண்டும். அந்தப் பணியைத் திறம்பட செய்வது தகவல்-தொடர்பு தொழில்நுட்பக்கைக் கருவிகள்  (Information and Communication Technology Tools (ICT)) ஆகும். தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஏந்துகள் மூலம் துல்லியமான, மேம்படுத்தப்பட்ட தேவையான தொழில்நுட்பங்களைக் குறைந்த காலக்கெடுவில்  உழவர்களுக்கும்,  ஊரக மக்களுக்கும் கொண்டு  சேர்க்க முடியும். இவ்வாறு இன்றியமையாத வகையில் செயல்படும் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகள் எவ்வகையில் ஊர்ப்புற மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவது சிறப்பாகும். மேலும் இவற்றால் பெரிதினும் பெரிதாக நன்மைகள் அமைய இவ்வகை ஏந்துகளை அன்றாட வாழ்வில் இயல்பாகப் பயன்படுத்துவதிலுள்ள இடர்ப்பாடுகள் என்பதைப் பற்றியும் அறிவதும் சாலச் சிறந்தது.

இணைய வழிப் பணிகள்

இந்தியாவில் 1995களில்  தொடங்கிய கைபேசி, இணையம், கணிப்பொறி பயன்கள் அறிவுசார் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஏந்துகளில்  முதன்மையானது  இணையம். இந்தியாவில் மட்டும் 2012இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 137 பேராயிரம்(மில்லியன்) இணையத் தளப் பயனாளிகள் உள்ளனர். அதில் 38 பேராயிரம் மக்கள்  சிற்றூர்களில்  வசிக்கின்றனர். ஏறக்குறைய 31 பேராயிரம் மக்கள் மாதம் ஒரு முறையாவது இணைய வசதியினைப் பயன்படுத்துபவராக உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2014 இல்  45 பேராயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.(ஐ.எம்.யு.ஏ,2013). தமிழகத்தில் மட்டும் 16.5 விழுக்காட்டினர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். தேசிய அளவில் ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ்மொழி  மிகுதியான அளவில் இணையத்தில் பயன்படுத்தும் மொழியாக உள்ளது. இணையத்தைச் சிறந்த தகவல் தொடர்பு  ஊடகமாகப் பயன்படுத்த முடியும் என்பதால் தான் தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் வேளாண்மை தோட்டக்கலை, வணிகம், வேளாண் பொறியியல், விதைச் சான்றிதழ், அங்ககச் சான்றிதழ், பட்டுப் புழு வளர்ப்பு, வனவியல், மீன் வளம், கால் நடை வளர்ப்புச் செய்திகள், தொழில்நுட்பக் குறிப்புகள், அரசு திட்டங்கள், வட்டார வளர்ச்சி, வங்கிப்பணி, கடன் உதவி, பயிர்க்காப்பீடு,  வேளாண் நலமனை(அக்ரி கிளினிக்),  உழவர்(கிசான்) அழைப்பு மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை மன்பதை வானொலிச் சந்தை தகவல் மையம், வெற்றிக் கதைகள், உழவர் கூட்டமைப்பு, உழவர்கள் கண்டுபிடிப்பு, பல்கலை  வெளியீடுகள், ‘காண் ஒலிக்’ காட்சி (video) போன்ற ஏராளமான செய்திகள் 3.6 இலட்சம் பக்கங்களுக்கு மேலாக உள்ளன. அத்துணை செய்திகளும் தமிழிலேயே வழங்கப்படுவது மிகவும் சிறப்பானதாகும். கணிப்பொறி, இணையத் தளவசதி கொண்ட உழவர்கள் <www.tnau.agritechportal.ac.in> என்ற இணைய முகவரி மூலம் தகவல்களைப் பெறலாம்.

தொலைபேசி வழி தகவல்  பணிகள்

இந்தியாவில் கைபேசி வைத்துள்ளோர் எண்ணிக்கை 929.37 பேராயிரமாக உள்ளது. இருப்பிடத் தொலைபேசிகள் 31.53 பேராயிரம் இணைப்புகள் உள்ளன. மொத்தத் தொலைபேசி இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 960.9 பேராயிரமாக உள்ளது. தொலைபேசி அல்லாதோர்-தொலைபேசி  பயனாளர் அடர்த்தி விகிதம் 79.28 விழுக்காடு தேசிய அளவில் காணப்படுகிறது. இதுவே  ஊர்ப்புறங்களில் 33 விழுக்காடு உள்ளது. தொலைபேசி தொடர்பு வசதியினைச்  சிற்றூர் மேம்பாடு- வேளாண் வளர்ச்சிக்குத் திறம்பட  பயன்படுத்த முடியும். தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாக அன்றாடம், சந்தைத் தகவல்கள் உழவர் பெருமக்களுக்குக் குறுந்தகவல்களாக (Short message service) அனுப்பப்படுகின்றது. சந்தைச் செய்திகள்,  கூல(தானிய) விலைகள், ஏற்றுமதி – இறக்குமதி விவரங்கள்  கட்டணமின்றியே வழங்கப்படுகின்றன. இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் (IFFCO) மூலமாகப் பதிவு செய்த  உழவர்களுக்கு  நாள்தோறும் 5 ‘குரல் வழி குறுந் தகவல்கள்’ (Voice based sms) அளிக்கப்படுகின்றன.

உழவர்களுக்கான குறை தீர்க்கும் தொலைபேசிப் பணி மையம் (Kisan Call Centre – KCC)

உழவர்களின் வேளாண் சார்ந்த  ஐயங்களை உடனுக்குடன் தீர்வு தர  உழவர் குறை தீர்க்கும் பணி மையம் 2004 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகின்றது.  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த மையம் வேளாண் தொடர்பான  ஐயங்களுக்கு உரிய விளக்கத்தினைத் தமிழ் மொழியில் வழங்கி வருகின்றது. கட்டணமில்லாத் தொலைபேசி  எண் 1800-180-1551 மூலம் தொடர்பு கொள்ளும்  உழவர்களின் கேள்விகளுக்கு, மையத்தில் பணியாற்றும் வேளாண் பட்டதாரிகள் உடனுக்குடன் தீர்வு கூறுகின்றனர். தீர்வு காண இயலாத கேள்விகள் இரண்டாம் நிலையில், உரிய அறிவியலர்களுக்கு அனுப்பப்பட்டு  மறுமொழிகளைப் பெற்று  உழவர்களுக்கு 72 மணி நேரத்திற்குள்ளாகக் கைபேசி வழி அனுப்ப ஆவன செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

வேளாண் தொழில்நுட்பப் பரிமாற்றம் மட்டுமின்றி, சிற்றூர்ப் பொருளியல், அரசு நலத்திட்டங்கள் போன்ற தகவல்கள் சிற்றூர் மக்களைச் சென்றடைய தகவல் தொடர்பு தொழில்நுட்ப  ஏந்துகள் சிறப்பான பங்கு வகிக்கின்றன. கல்வி,  நலவாழ்வு, வணிக முன்னேற்றம் போன்றவை கீழ்த்தட்டு மக்களுக்கும் கிடைக்க உதவும் தகவல் தொடர்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்த வழிகாட்டு முறைகளை ஏற்படுத்த வேண்டும். வேளாண் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்ய  ஒப்படைப்ப உணர்வோடு பணியாற்றும் மன்பதை அறிவியலர்களுக்கு (Social Scientists) தகவல்  தொடர்பு  ஊடகங்கள் குறித்த மேம்பட்டப் பயிற்சியை அளிக்க வேண்டும். அரசு துறைகளை ஒருங்கிணைத்து, கணிப்பொறி, இணையம் மூலம் தகவல்களைப் பரிமாற்றம் செய்து துல்லியமான, இடம் சார்ந்த தகவல்களை,  உழவர்களின் உரிய தேவைகளுக்கு ஏற்ப தகவல்களை உருவாக்க வேண்டும். மன்பதை அறிவியலர்களின் துணை கொண்டு உரிய தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மூலம் தகவல்கள்  உழவர் பெரு மக்களைச் சென்றடைய முயற்சிகள் மேற்கொண்டால் இரண்டாவது பசுமைப் புரட்சி மலரும். நீடித்த  மன்பதை வளர்ச்சி ((Sustainable Social development) ஏற்பட்டு உலக அரங்கில் இந்தியா சிறப்பான இடத்தை அடையும்.