ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும்.

தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும்.

தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது ஆட்சி அமைத்தால் எங்ஙனம் நேர்மையாக இருப்பார்கள்?

தேர்தலில் பணத்தைக் கொட்டிச் செலவழிக்கும் வேட்பாளர்களின் இலக்கு வெற்றி மட்டுமல்ல. அதற்குப் பின்னர் அவ்வாறு கொட்டிய பணத்தை எப்படி யெல்லாம் திரும்பப் பெறுவது என்பதுதான். தேர்தலில் வென்று ஆட்சியமைத்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிய வழியாகத் தேர்ந்தெடுப்பது மக்கள் பணத்தைச் சூறையாடுவதுதான்.

இத்தகைய அளவுகடந்த முறையற்ற தேர்தல் செலவினமே ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக உள்ளது.

தேர்தல் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. வேட்பாளர் எண்ணிக்கையை வரையறுக்காமல் இவ்வாறு செயல்படுத்துவது மக்களின் வரிப்பணத்தைத்தான் வீணடிப்பதாக அமையும்.

இதற்கு மாற்றாக உள்ள ஒரே எளிய வழி, கட்சிமுறையிலான தேர்தலை 5 ஆண்டுகளுக்கேனும் ஒத்தி வைப்பதுதான். இவற்றின் அடிப்படையில் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

  1. 5 ஆண்டுகளுக்குக் கட்சிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
  2. போட்டியிடும் அனைத்து வேட்பாளருமே தற்சார்பினர்(சுயேச்சை)தான்.
  3. கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்கள், சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
  4. எந்த வேட்பாளரும் பிற தொகுதிக்குச் சென்று பரப்புரை மேற்கொள்ளக் கூடாது.
  5. கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் யாரும், போட்டியிடும் தொகுதி தவிர, வேறு எங்கும்பரப்புரை மேற்கொள்ளக்கூடாது.
  6. வேட்பாளர்களுக்குக் குற்றப்பின்னணி இன்மை, 3 ஆண்டுகள் பொதுப்பணி ஈடுபாடு, தமிழறிவு, அரசியல் பொறுப்பு, பதவி மூலம் சொத்து சேர்த்திருக்காமை முதலான தகுதிகளை வரையறுக்க வேண்டும்.
  7. போட்டி இன்மையால், தேர்தல் பரப்புரைக்கான பொதுக் கூட்டங்களுக்குத் தேவையில்லை. இதனால் அழைத்து வரப்படுவோருக்கான வீண் செலவுகள், பின்னர் மக்கள் தலையில் வந்து விழாது.
  8. தேர்தல் ஆணையமே, தேர்தலில் போட்டியிட விரும்புநருக்குச் சம வாய்ப்பு அளித்துத் தொலைக்காட்சிகள் வழியாகத் தங்களைப்பற்றிய அறிமுகத்தையும் ஆற்ற எண்ணும் பணிகளையும் விளக்க வாய்ப்பு தர வேண்டும். அவற்றில் தேர்தலில் போட்டியிடுதற்குரிய தகுதிக்குறைவான செய்திகள் இருப்பின், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்; தகுதிக்குறைபாடு இருப்பவர்களைக் குலுக்கலில் இருந்து எடுத்து விட வேண்டும்.
  9. வெற்றி பெற்ற உறுப்பினர்களில் இருந்து குலுக்கல் முறையில் தலைமை அமைச்சர் / முதலமைச்சர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  10. அமைச்சர்களையும் குலுக்கல் முறையில்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  11. குலுக்கல் முறையில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், குறுக்கு வழிகளில் அமைச்சர் பதவி பெற முயலமாட்டார்கள். எனினும்சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு ஆளுமைப் பயிற்சி அளிக்க வேண்டும்.
  12. மாநிலங்களவை, மேலவை உறுப்பினர்களையும் இவ்வாறே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  13. அமைச்சர்கள், முதலமைச்சர், தலைமையமைச்சர் முதலானோர் தவறுஇழைக்கும் போது பதவி நீக்கம் செய்வதற்கும் வழிமுறை வகுத்து அதனைப் பின்பற்ற வேண்டும்.
  14. சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். தனித் தொகுதிகளில் அவற்றிற்குரிய இனத்தினர் மட்டும் குலுக்கலில் இடம்பெற வேண்டும்.
  15. உள்ளாட்சித் தேர்தல்களில் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குலுக்கலில் சேர்க்கப்பட வேண்டும்.
  16. சட்டமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே குலுக்கலில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
  17. நாடாளுமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களில் 10 ஆண்டுகளேனும் வசிக்கிறவர்கள், அந்தந்த மாநிலங்களில் 5 ஆண்டுகளேனும் மக்கள்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே குலுக்கலில் இடம்பெற வேண்டும்.
  18. குலுக்கல் முறை என்றால் குடவோலை முறைபோல் சீட்டுகளைப்போட்டுத் தேர்ந்தெடுப்பது அல்ல. பரிசுச்சீட்டுகளுக்கான இயந்திர முறை எண்களைச் சுற்றி நிறுத்துவது போன்று ஒவ்வொருவருக்கும் எண்கள் கொடுத்து இயந்திரச் சுழற்சி மூலம் இக்காலத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
  19. இவ்வாறு வாக்குஅளிப்பு முறையிலான தேர்தலை ஒழிப்பதன் மூலம், கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல போகும். கட்சி வேட்பாளர்களும் பிற வேட்பாளர்களும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது நிற்கும். தேர்தலுக்குச் செலவழித்தவற்றைக் குறுக்கு வழிகளில் திரும்பப் பெறுவதற்காக ஊழல்களில் திளைப்பர். ஊழல்களால் மக்களின் நலன்கள்தாம் பாதிப்புறும். இம்முறையால் அவற்றிற்கு இடம் இருக்கா.

 

  1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் மக்களாட்சியாகவே இம்முறையையும் கருத வேண்டும். எனவே, குலுக்கலில் இடம் பெறுவதற்காக மக்கள் மன்றப் பொறுப்புகளை அல்லது அமைச்சுப் பதவிகளை ஏற்க விரும்புவோர் அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே மக்கள் பணிகளில் ஈடுபட்டு மக்களின் குறைகளைக் களைவர். இதனால் மக்களின் சிக்கல்கள் உடனுக்குடன் தீரும் வாய்ப்பு ஏற்படும்.

 

இவ்வாறு,  ஊழலை ஒழிக்க ஒரு முறையேனும் கட்சி சாராத் தேர்தலை நடத்த வேண்டும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 501)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை