எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது!

செட்டம்பர் திங்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் முதன்மையான திங்களாகும்.

செட்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செட்டம்பர் 16 தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரன் பிறந்த நாள். செட்டம்பர் 17  தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி பிறந்தநாள். தன்மானமும் உரிமையும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு, அவர்களை எப்பொ ழுதாவது புகழ்வதால் நனவாகாது.

செட்டம்பரில்  நம் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் மற்றொரு துயரம், திலீபன் இந்தியாவை நம்பி அளித்த உயிர்க்கொடை! திலீபன் போன்று எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிர் கொடுத்தும் ஈழம் விடியவில்லையே!

1987 செப்டம்பர் 15  அன்று ஐந்து  வேண்டுகோள்களை முன்வைத்து உண்ணா நோன்பிருந்தவர், அமைதிவழியை ஒப்புக்குப் பேசும் இந்திய வஞ்சகரால்   26.09.1987 அன்று  வீர மரணம் உற்றார்.

ஒரு தலைமுறை கடந்த பின்னரும்  திலீபனின் ஐந்து வேண்டுகோள்களில் ஒன்றுகூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல. மேலும் மோசமான நிலைக்குத்தான் அந்நாடு சென்று கொண்டிருக்கிறது.

  மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பது அவர் முதல் வேண்டுகோள். ஆனால்,  சிங்கள மக்களின் குடியமர்த்தல் மட்டுமல்ல, சிங்களப் படைத்துறையினரின் குடியிருப்புகள் தமிழர் பகுதியெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் நிலம் என ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழர்களைச் சுற்றிலும் தமிழர்களின் மத்தியிலும் சிங்களர்கள் குடி யமர்த்தப்படுகிறார்கள்.

  சிறைக் கூடங்களிலும் இராணுவ, காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற அவரது இரண்டாம் வேண்டுகோள் இன்றும் உயிரோடுதான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலை என்ன வென்றும் தெரியவில்லை.

  6 திங்கள் கடந்த பின்னரும் கேப்பாவுலவு மண்மீட்புப் போராட்டம் முடிவுறவில்லையே! சிறை வைக்கப்பட்டவர்கள், வலுக்கட்டாயமாக  இழுத்துச் செல்லப்பட்டவர்கள், மேலும் பல வகைகளில் சிங்களப்படையினராலும் சிங்களக் காவல்துறையினராலும் காணாமல் போக்கப்பட்டவர்கள் நிலை தெரியாமல் குடும்பத்தினர் படும் பாட்டிற்கு முடிவு வரவில்லையே!

  முள்ளிவாய்க்கால் முதலான ஈழப்பகுதிகளில் இனப்படுகொலை நடந்தது குறித்து வருத்தம்தான் தெரிவித்தோம். அத்துயரம் வராமல் தடுக்க  முயலவில்லையே அல்லது இயலவில்லையே! புலம் பெயர் தமிழர்கள் உலக அரங்கங்களில் முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

முடிந்ததற்கு விடிவு தெரியாவிட்டால் போகிறது! இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி உண்டா? இல்லையே!

கொத்துக்குண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் குண்டுமாரி பொழிந்து கொன்றால்தான் இனப்படுகொலையா?

அன்றாடம் நிலப்பறிப்பாலும் உடமைப்பறிப்பாலும் கட்டாயக் கருத்தடையாலும் கற்பழிப்பாலும் காவற்கூடச் சித்திரவதைகளாலும் இனம் அழிந்து கொண்டு உள்ளதே! இந்த இன அழிப்பு குறித்து நாம் கவலைப்பட்டோமா?

இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை முழுவதும்  சிங்களர் நிலமாகவும் ஏதோ சில பகுதிகளில் தமிழர்கள் சிலர் சிங்களவர்களின் அடிமையாகவும் வாழும் நிலைதானே நிலவும்!

இது குறித்துக் கவலைப்படுகிறோமா?

தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிகொடுத்துக்கொண்டு வாளாவிருக்கும் நாமா, அண்டைநாட்டுத்தமிழர்களின் உரிமைகளை மீட்கப் போகிறோம்!

  உரிமையுள்ளவன்தானே அடுத்தவன் உரிமைக்குப் போராட முடியும்!  (இதை அன்றைக்குப் பெரியார் சொன்னதைத்தான் திரித்துக் கூறிக்கொண்டுள்ளனர்.)

 தமிழ்த்தேசிய இயக்கத்தினரும் திராவிட இயக்கத்தினரில் ஒரு பகுதியினரும் தமிழ் அமைப்பினரும் நம்  உரிமைக்கும் ஒட்டுமொத்த நம் இன உரிமைக்கும் குரல்  கொடுத்து வந்தாலும் அதிகாரப் பீடத்தில் அவர்களை அமர விடுவதில்லையே! அதிகாரமில்லாதவர்களால் என்ன செய்ய இயலும்?

 உரிமைக்குக் குரல் கொடுத்து அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஊழலுக்குத் துணை நின்றதால் உண்மையான பேச்சிற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.

  நாட்டுமக்கள் நலன் குறித்து  உழைக்க உணர்வூட்டியவர்கள் வீட்டுமக்கள் நலன்குறித்துப் பிழைத்தமையால் உண்மையையும் போலி என எண்ணத் தொடங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.

இதே போக்கு  தொடர்வது நல்லதல்ல!

  உண்மையை உணர்ந்து உண்மையின் பக்கம் நாம்  நிற்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தமிழ்  தொலைக்கப்படும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்! தமிழ் தலைமையும் தமிழ்மக்கள் முதன்மையும் பெற நாம்  ஆன்றோர் பிறந்த திங்களிலே உறுதி எடுக்க வேண்டும்!

நாளும் தமிழினம்  ஈழத்தில் அழிவதை உணர்ந்து பிறருக்கும் உணர்த்தி,   01.01.1600 இல் தமிழ்நிலமாக விளங்கிய இலங்கைப்பகுதி தமிழ் ஈழமாக மலரக் கருத்துப் புரட்சியை விதைக்க வேண்டும்!

உலக ஆன்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள்  ஒத்துழைப்பால்  தமிழீழம்  உரிமையுடன் திகழ நாமும் பாடுபட வேண்டும்!

தமிழ் மக்களாக இருந்தும் தமிழைப் படிக்காமல் அயலவர் ஆகும் நிலை  பல நாடுகளில் நிலவுகிறது. ஆங்காங்கே இதனைப்போக்கத் தமிழ் அமைப்பினர் பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒல்லும் வகை உதவி, தமிழ் மக்கள் தமிழை மறக்காமல் உரிமையுடைய தமிழர்களாக வாழ வகை செய்ய  வேண்டும்!

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 967)

வாழ்க தமிழ்!   வெல்க தமிழினம்! ஓங்குக வையகம்!

 –  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை  அகரமுதல 203, ஆவணி 25, 2048 / செட்டம்பர் 10, 2017