எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?

 

விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை.

ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்வதால் சில ஐயங்கள் ஏற்படுகின்றன.

வரலாறு என்று சொல்லாமல் கதை என்று அவர்களே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிதான். ஆனால்  வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பௌத்த இராமாயணம், சமண இராமாயணம், திபேத்து இராமாயணம், கம்பர் இராமாயணம் எனப் பல்வேறுமொழிகளிலும் 300 இராமாயணங்கள் உலகம் முழுமையும் உள்ளன. இராவணனின் மகள் சீதை, தசரதன் மனைவியர் வரிசை முறை கோசலை, சுமத்திரை, கைகேயி, என்பனபோன்று 80 வகையான இராமகாதைகள் உள்ளன. இவற்றுள் எந்தக் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்? தெரியவில்லையே!

 இராமன் முதலானவர்கள் பிறப்பும் வெவ்வேறு வகையாகச் சொல்லப் படுகின்றன. தசரதன் மனைவிகள் வேள்வியில் பாயாசம் குடித்ததால் பிறந்தவர்கள், பானம் பருகியதால் பிறந்தவர்கள், விந்து உண்டு பிறந்தவர்கள், குதிரைப் பிணத்தைக் கட்டிக் கொண்டமையால் பிறந்தவர்கள் எனப் பிறப்பு முறைகள் வெவ்வேறாக க் கூறப்படுகின்றன.

மற்றொரு கதையும் உள்ளது. இராமன், உத்காதா என்னும் பூசாரிக்கும் கோசலைக்கும் பிறந்தவன்; இலக்குமணனும் சத்துருக்கனனும் பரிவிருத்தி என்னும் பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவர்கள்; பரதன், மற்றொரு பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவன் என்பது ஒரு கதை.

இவற்றுள் எதனைப் பாடமாக வைப்பார்கள்? எல்லாக் கதைகளிலுமுள்ள ஒற்றுமை தசரதனுக்கும் மனைவியருக்குமான உறவில் இராமன் முதலானோர் பிறந்தமையாகத்   தெரிவிக்காத துதான்.

கடவுளுக்குப் பிறப்பு கிடையாது. தாய்க்கும் அவரின் கணவர் அல்லாத மற்றொருவருக்கும் பிறந்தவரைக் கடவுளாகச் சொல்ல முடியாது  அல்லவா? 

கடவுளுக்கு இறப்பும் கிடையாது. ஆனால், இராமன் சரயு ஆற்றில் இலக்குவனை(இலக்குமணனை)த் தள்ளிக் காென்றுவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். அப்படியானால் கடவுளாகவோ கடவுளின் பிறப்பாகவோ இராமன் இருக்க முடியாதே! 

இராமன் பட்டத்து அரசனானால் அவனுடைய மனைவிமார்களின்  ஏளனத்திற்கும் ஆளாவாள் எனக் கைகேயியைக் கூனி எச்சரிக்கிறாள். இராமனின்  ஒற்றை மனைவி – ஏகப்பத்தினி – உடையவன் என்னும் பிம்பம் உடைந்து ஏகப்பட்ட பத்தினி உடையவன் என மக்கள் தூற்றமாட்டார்களா?

அன்னைக்கும் மேலாக அண்ணனை மதிப்பவன் இலக்குவன். அண்ணி சீதையையும் அன்னையாகப் போற்றுபவன். உடன்பிறப்புப் பாசத்திற்கு இராமன் இலக்குவனைத்தான் மக்கள் கூறுவர். மூத்த பிள்ளைக்கு இராமன் பெயரை வைத்தால் இளையவனுக்கு இலக்குவன் பெயரை வைப்பது மக்கள் வழக்கம்.

இராமன் காட்டிற்குச் செல்ல நேரிட்டதும் தன் அன்பு மனைவியைப் பிரிந்து உடன் செல்கிறான் பாசமிகு தம்பி இலக்குவன். ஆனால் இலக்குவன் பாசத்தினால் வரவில்லை; தன்மீதுள்ள காமத்தினால் வந்ததாகச் சீதை கூறுகிறாள். இலக்குவனின் பாசம் பற்றிய நம்பிக்கையைத் தவறு என்பதா? பாசப்பார்வையைக் காமப் பார்வையாக நோக்கும் சீதையின் ஒழுக்கத்தில் ஐயப்படுவதா?

இலங்கையுடனான போருக்கு அடிப்படை சூர்ப்பனகையின் மூக்கு, காதுகள், மார்புக்காம்புகள் ஆகியவற்றை இலக்குவன் அறுத்துத் துன்புறுத்தியதுதான். காரணம், சூர்ப்பனகை, இராமன் தனியாக இருப்பதாக எண்ணி அவனைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்ததுதான். ஒழுக்கமுடையவனாகப் போற்றப்படும் இராமன் தான் மணமானவன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தானும் உடன்படுவதுபோல் முதலில் பேசியிருக்கக் கூடாது. சீதை, குடிலில் இருந்து வெளியேவந்த பின், சூர்ப்பனகையும் சீதையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். அப்பொழுதுதான் தனக்கு மணமான உண்மையைத் தெரிவிக்கிறான். அதுவரை இராமன் விளையாட்டிற்குப் பேசினானாம். காதற்சொற்களைப் பேசிவிட்டு விளையாட்டாகப் பேசியதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லவா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பரிகாரம் தண்டனை வழங்குவது என்பது கொடுமை அல்லவா? இராமனையும் இலக்குவனையும் எப்படி அறவடிவங்களாகக் கூறுவார்கள்?

பிறரின் தம்பியர் தத்தம் தமையன்மாருக்கு எதிராகத் திரும்பினால் உடன்பிறப்புப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களிடையே ஒற்றுமை அல்லவா ஏற்படுத்தி யிருக்க வேண்டும். மாறாக அண்ணன்களைக் கொன்று ஆட்சியைப் பறித்து அரசாளத்தானே உதவி செய்துள்ளான். இதனைப் படிக்கும் மாணவர்கள், இராமனை எப்படி நல்ல அண்ணனாக எண்ணுவார்கள்?

இராமர் பாலம் கட்டுக்கதை என்பதை விரிவாகத் தனியாகப் பார்க்கலாம். ஆனால் புத்தத்துறவிகளையும் புத்த மடங்களையும் இராமாயணத்தில் படிக்கும் மாணவர்கள் பொய்யான இராமர் பாலத்தை வைத்து ஏய்ப்போரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள் அல்லவா? 

இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அளவுள்ள உண்மைகளைப் படிப்பவர் உணர்ந்தால் இராமனின் புகழ் மங்கும். அப்படி யென்றால் நமக்கு ஒன்றும் இல்லை. மாறாக, மதவெறியைத்தூண்டுவதற்காக இராமனின் பாடம் என்றால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவரின் முதற்கடமை!

 

— குவியாடி