kalpurki-murder02

மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா?

  மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

  அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் இலலிதகலா அகாதமியின் முன்னாள் தலைவருமான அசோக் வாசுபாய் என இதுவரை 21 பேர் விருதைத் திருப்பி அளித்துள்ளனர். சாகித்ய அகாதமியின் பொதுக்குழு, செயற்குழு, நிதிக்குழு ஆகிய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அறிவித்துள்ளார். அந்த வழியிலேயே கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இரவிக்குமார், பி.கே.பரக்கதாவு ஆகியோர் சாகித்ய அகாதமி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளனர். அதேபோல் சாகித்ய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் ஆறு பேர் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனர். கன்னட எழுத்தாளர் அரவிந்து மாளகத்தி சாகித்ய அகாதமியில் தான் வகித்த பொறுப்புகளை உதறியுள்ளார்.

  தமிழ் எழுதுலகில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் 16 பேர் கூட்டறிக்கை வெளியிட்டள்ளனர். அறிக்கை மட்டும்தானா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அந்த மணிமுடி அத்தனை மாண்பானது.

    ‘கல்புர்கி’ மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்தாளர் உதயபிரகாசு சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்தார். இந்த வரிசையில் புகழ்மிகு மலையாள எழுத்தாளர் சாராசோசப்பும் விருதை திருப்பி அளித்து,

  “நரேந்திரமோடி பொறுப்பேற்றதிலிருந்தே நாட்டில் பீதி அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மதநல்லிணக்கமும் மதச்சார்பின்மையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன…ஆனால் நடுவணரசு பாராமுகமாக இருக்கிறது. எழுத்தாளர்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க நடுவணரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. விரும்பிய உணவை உண்பதற்கும், நேசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்யவும் உரிமை இல்லை; தற்போதைய நிலை நெருக்கடி நிலைக்கால கறுப்பு நாட்களைவிட மோசமாக உள்ளது” எனக் கருத்து கூறியுள்ளார்.

  “சிறுபான்மையினர், எதிர்க்கருத்து வைப்போர் தாக்கப்படுகின்றனர். அமைச்சர்கள் மாறுபாட்டிற்குரிய கருத்துகளைக் கூறுகின்றனர். எழுத்தாளர்களால் என்ன செய்யமுடியும் போராடுவதைத் தவிர? பட்டப்பகலில் எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியைக் காண்பிக்க இதுவே தருணம்” என அழைப்பு விடுத்ததோடு, நயனதாரா சேகலுக்கு அடுத்து விருதையும் திருப்பி அளித்த இரண்டாமவர் அசோக் வாசுபாய்.

   அவர் தெரிவிப்பதுபோல போராடுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்? எதிர்ப்பைப் பதிவு செய்ய போராட்ட வழிமுறைகள் பல உண்டு. எதிர்ப்பை வலிமையாக எது பதிவு செய்யுமோ, மக்கள்நாயக உணர்வு கிஞ்சித்தும் இல்லாத கடும்போக்காளர்களயும் கொஞ்சம் “கிணுக்” கென்று எது அசையச் செய்யுமோ அதுவே அப்போதைக்குச் சீரிய போராட்ட முறை. அதை விடுத்து மயிலிறகால் நீவி விடுகிற வேலையைத் தமிழ் எழுத்தாளர்கள் செய்திருக்கிறார்கள். அறிக்கை விடுவது தவிர அப்படியான வழிமுறையை இப்போதைய நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் எடுக்கவில்லை? பாவம், இதையாவது செய்ய ஒன்றாய் வந்தார்களே என்ற இளக்காரமும் எழும்பாமலில்லை.

   கருத்து உரிமையின் மீது வன்முறைகள் நேரடியாகவே நிகழ்த்தப்படுவது இந்தியா முழுமையும் இயல்பான நடைமுறையாகியுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் அனைத்தும் கல்லறைக்கு அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டின் எழுத்துப் பிரமாக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? நம்மில் எத்தனைபேர் சாதிய, மதவாத பாசிசத்துக்கு எதிராய் விருதுகளை வீசி எறியப்போகிறார்கள் ?

  கருத்துரிமை மீதான தாக்குதல் வரலாற்றுக் காலந்தொட்டு காலகாலமாக நடைபெற்று வருகிறது.

“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்”

 புலமை, அறிவாற்றல் ஆகியவற்றை அரசர்களை நத்திப்பிழைத்தே வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்த காலத்தில் இந்தக் குரல் ஒலித்தது. அரச அடக்கு முறையை எதிர்த்த புலமைப் பரம்பரை நம்முடையதாக இருந்திருக்கிறது. எதிர்க்குரலின் தொடக்கப் புள்ளிகள் இப்புலமையாளனும் நக்கீரனும் தான்.

   ஆயுதந் தாங்கிய வடிவமே அரசு என்றிருந்தாலும், இன்று புதிய தொழில்நுட்பம் கைலாகு கொடுக்கும் உகத்தில் அடக்குமுறை உத்திகள் உச்சம் அடைந்துள்ளன. அச்சு வடிவத்தில் கருத்து வெளிப்பாட்டுமுறை தோன்றியபோது,   பொறுத்துக் கொள்ள மாட்டாத மேலாண்மை ஆற்றல்களும் அவற்றின் அரசும் எவ்வாறெல்லாம் அடக்க முடியும் என்ற அடிவைப்புகளில் நடைபோட்டன. தன்னுரிமையான வலைத்தளம் புதிதாகப் பிறப்பெடுத்ததும் கண்ணில் விரலைவிட்டுத் தோண்டி எடுப்பதுபோல் வலைத்தளத்திற்குள்ளான அடக்குமுறையை முன்னெடுக்கின்றன. புதிய புதிய வெளிப்பாட்டு முறைகள் பிறப்பெடுக்கிற போதெல்லாம் புதிய புதிய ஒடுக்குமுறைப் பொறிமுறைகளை அரசுகள் கண்டுபிடிக்கின்றன .

    சாதிய, மதவாத ஆற்றல்களின் அரசியல் ஆதிக்கம் மேலோங்கியுள்ள இன்றைய நிலையில், பழமைவாதக் கருத்துக்களுக்கு எதிராக எவரும் நா அசைக்கக் கூடாது. பேசினால், எழுதினால் நா துண்டிக்கப்படும். கை முறிக்கப்படும் என்பதைக் கல்புர்கியின் கொலையும் பெருமாள்முருகன் மீதான ஊரடங்கு உத்தரவும், புலியூர் முருகேசன் மண்டை உடைப்பும், குலதிரன்பட்டு குணாவின் இடப்பெயர்ப்பும்   மெய்ப்பிக்கின்றன. சாதிய மதவாத ஆற்றல்களுக்கு எதிராகத் தமிழகத்தின் மக்கள்நாயகவாதிகள், சிந்தனையாளர்கள், கலை இலக்கியவாதிகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. காலம் நம்மை அழைத்துக் கடமையை கையளிக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

  எழுத்துரிமை, பேச்சுரிமை, கலை யுரிமை, மக்கள்நாயகம் போன்ற “அற்பச்செய்திகள்” பற்றியெல்லாம் அரசுகளுக்கு கவலை இல்லை. “அரசுகள் ஆடை அணிவதில்லை” என்றோர் ஆங்கில வழக்கமொழி உண்டு. ஆகவே எந்த நிருவாணம்பற்றியும் அவை கவலைப்படப் போவதில்லை.

  சமுதாயத்தில் ஏற்கெனவே நிலவுகிற கருத்துகளால் வன்கவர்விற்கு உள்ளானவர்களுக்கும் புதிய சமுதாயத்திற்கான கருத்தாக்கங்களை முன்னெடுப்போருக்குமான உராய்வில், பழைய சமூதாயத்தின் காவலர் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் ஒன்றிணைவது எளிதான செயல் – சாதி, மதம், இனம், பண்பாடு, குழு, கட்சி என்று பல அடிப்படைகள்.

  எழுதுகோலை அசைக்கும் முன் எழுதலாமா கூடாதா என இசைவு பெற்ற பின்னர் எழுத வேண்டும் என்பது இவர்களின் ஆணை; எழுத்துக்கு முந்தையய சிந்திப்பின் தொடக்கப் புள்ளியையும் காவு கேட்கிறார்கள். .எங்களின் சிந்தனையின் வழியிலேயே நீங்களும் பயணியுங்கள். அவ்வழியிலேயே எழுதுங்கள்.. பேசுங்கள்….இல்லையெனில் பாதகம் விளையும் என்று அச்சுறுத்தி முறுக்கிக்கொண்டு வருகிறார்கள். பிற்போக்கு ஆற்றல்கள் ஒன்றிணைகிற   அளவிற்கு   புதிய சமுதாயத்திற்கான முன்னோடும் கிளிகள்   எளிதாய் ஒன்றிணைவதில்லை.   இலக்கியவாதிகள் முறுக்கேற்றி போராட்டக்குரல் உயர்த்தாதற்கு காரணிகள் உள்ளன;

  1. முதலில் ஒவ்வொரு வீட்டிலும் சாதி இருக்கிறது;   மதம் இருக்கிறது.   இந்துவாக, இசுலாமியனாக, கிறித்துவனாக, சீக்கியனாக எந்த அடையாளத்துடனும் நானில்லையென்றாலும், அதன் நெடியை வீட்டில் ஒவ்வொரு நாளும்  உயிர்க்கிறேன். வீட்டார் இந்துக்களாக, சாதியாக வாழ்கிறார்கள். வழிபடலும் சடங்குகளும் உறவாடல்களும் இருக்கின்றன.
  2. அவ்வாறே அண்மை வீடுகளும் எதிர் வீடுகளும் கொண்ட தெரு இயங்குகிறது.
  3. ஊர் அல்லது வட்டாரம் இவ்வகை அடையாளங்களுக்குள் சுழல்கிறது.

  சாதி மத வட்டத்திற்குள் வலைப்பட்டுள்ள தனிமனிதன் கண்காணிப்பிற்கு உள்ளாகிறான். முதல் கண்காணிப்பு, குடும்பம். “எதற்கு இந்த வம்பெல்லாம்” என்ற முணுமுணுப்பு எழுகிறது. இந்த முணுமுணுப்பின் வலிமையை எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், சாதி மத மறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்கள். அடுத்து எழுகிறது தெருவின் புகைச்சல், ஊரின் அனல்: நான் மட்டும் ஏன் மாட்டுப்பட வேண்டும் என்னும் அச்சலாத்தி(எரிச்சல்) , எதிர்நீச்சல் போடத் திராணியில்லாத ஒவ்வொருவருக்குள்ளும் தோன்றுவது உண்மையா இல்லையா?

  இந்துவாக இருப்பதினாலே எழுதுவதற்கு, பேசுவதற்கு, வாழுவதற்கு அச்சம் கொள்கிறேன் என்பது என்னவாக இருக்க முடியும்? பெரும்பான்மை சமூகத்திற்குள் இருப்பதே ஒருவருக்குப் பாதுகாப்பு இல்லையெனில் வேறு எது அவரைக் காக்க முடியும்? மக்கள்நாயகத்தை பெரும்பான்மைதான் தீர்மானிக்கிறது. இங்கே பெரும்பான்மையே மக்கள்நாயகத்தை சாகடிக்கிறது. பெருமாள்முருகன் மீதும் குடும்பத்தார் மேலும் கவிந்திருக்கிற ஊரடங்கு உத்தரவு, புலியூர் முருகேசன் மண்டையுடைப்பு, குலத்திரன்பட்டு குணாவின் இடப்பெயர்ப்பு இவையெல்லாம் இந்தப் பெரும்பான்மையே   சனநாயகத்தினை புதைகுழிக்குள் அனுப்பியதல்லாமல் வேறென்ன!   சனநாயக மறுப்பு தொலைக்காட்சி ஊடகங்கள்வரை இவர்களை இழுத்துப்போகிறது. உலக மகளிர் நாளையொட்டி “தாலி, பெண்களைப் பெருமைபடுத்துகின்றதா, சிறுமைப் படுத்துகின்றதா?” என்ற விவாதத்தை நடத்த முயன்ற ‘புதியதலைமுறை’ தொலைக்காட்சியைத் தாக்கினார்கள். உணவுக்கலன்(டிபன் பாக்சு) குண்டு வீசப்பட்டது. “இப்போது வீசியது பட்டாசுதான். அடுத்தமுறை வெடிகுண்டே வீசுவோம்” என்று தெனாவட்டாய் சொல்லிவிட்டுப் போனார்கள்..

  என்ன செய்யப்போகிறோம்? கூட்டு அறிக்கை விட்டு ஆற்றிக்கொள்வதால் கழுத்தினை நெரித்துக்கொண்டிருக்கும் கொடுங் கரங்கள் தாமே விலகிடுமா?

  ஒன்றிணைந்து குரல் கொடுப்போமா? ஊர்வலம் போகலாமா? போராட்டம் எடுக்கலாமா?   அல்லது     தன்னை அறிவுச்சுரங்கமாக எண்ணிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு தமிழ் இலக்கியவாதியும் தனக்குத்தானே கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு உட்கார்ந்து குமையலாமா?

  சாகித்ய அகாதமியின் நல்லகாலம்! எனக்கு விருது அளிக்கவில்லை. விருது கிடைத்திருந்தால், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக அப்போதே தூக்கி வீசியெறிந்திருப்பேன்.

J-Prakasam-paa.seyaprakasam

பா.செயப்பிரகாசம்

  jpirakasam@gmail.com