(உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை தொடர்ச்சி)

என் சரித்திரம்
மகாமகோபாத்தியாய முனைவர்

உ. வே. சாமிநாதர்
அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4

சற்றேறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமசுதானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து கல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போசனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக் கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார்; தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுது போக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசி யென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று ஒரு வேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதமுடையவர்; விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக்கொள்வதும் வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசி யென்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். தஞ்சாவூராக இருந்தால் அரண்மனை சோதிடர் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து அன்றன்று திதி வார நட்சத்திர யோககரண விசேடங்கள் இன்னவையென்று பஞ்சாங்கத்திலிருந்து வாசித்துச் சொல்வார். அதற்காகவே அவருக்கு மானியங்களும் இருந்தன.

அரசருடைய பிரயாணத்தில் சோதிடர் உடன் வரவில்லை. அதனால் ஏகாதசியை அரசர் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராதபடி விரதத்திற்கு ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்திய அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்கத் தொடங்கினர். அவர் வைதிக ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும் அறிந்திருந்தனர்; ஆதலின் அப்பெரியோர்கள், “ஓர் அக்கிரகாரப் பிரதிட்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ் வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோசம் நீங்கும்” என்றார்கள்.

“இது தானா பிரமாதம்? அப்படியே செய்து விடுவோம்; இதே இடத்தில் பிரதிட்டை செய்வோம்” என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறாக 24 கிணறுகளையும் அமைக்கச் செய்தார். வேதாத்தியயனம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, அந்த வீடுகளையும், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு மா நன்செயும் அதற்குரிய புன்செயுமாகிய நிலத்தையும் தானம் செய்தார்*. அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் அவ்வூர் உத்தமதானபுரம் என்னும் பெயரால் வழங்கலாயிற்று.

அரசருடைய விரதபங்கம் நாற்பத்தெட்டுக் குடும்பங்களுக்குப் பாக்கியத்தை உண்டாக்கிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத்தில் வைதிக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற்ற நிலங்கள் இன்றும் தனித் தனியே ஒரு பங்கு என்று வழங்கி வருகின்றன. நாற்பத்தெட்டு பங்கு நிலமும், நாற்பத்தெட்டு வீடுகளும், இருபத்துநாலு கிணறுகளும் கொண்ட இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்து விடாமல் தஞ்சாவூர் சில்லாவில் பாபநாசம் தாலூகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது.

இவ்வூருக்குப் பழைய காலத்தில் பழையகரமென்று பெயர். அகரமென்பதற்கு அக்கிரகாரமென்று அர்த்தம். பக்கத்திலுள்ள அக்கிரகாரங்களெல்லாவற்றையும் விட இது பழமையானமையின் இப்பெயர் பெற்றது போலும். இப்பொழுது உள்ள குடியானத் தெரு முன்பு பிராமணர்கள் குடியிருந்த இடமாக இருந்ததென்றும், அரசர் தானம் செய்த காலத்தில் அங்கிருந்தவர்கள் புதிய அக்கிரகாரத்திற் குடியேறினரென்றும் சொல்வார்கள். குடியானத் தெருவின் மேலைக் கோடியில் ஒரு பெருமாள் விக்கிரகமும் தென் கிழக்கில் கண் கொடுத்த பிள்ளையாரென்று ஒரு விநாயகரது கோயிலும் இருக்கின்றன. அக்கிரகாரமாக அது முன்பு இருந்த பாபநாசம் இரெயில்வே நிலையத்திற்குக் கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.
தென்பதற்கு உரிய அடையாளங்கள் இவை. பாபநாசத்திலுள்ள சீனிவாசப் பெருமாள் தமக்குரிய பிரம்மோத்சவத்தில் இந்தப் பெருமாளிடமும் உத்தமதானபுரம் புதிய அக்கிரகாரத்திலுள்ள பெருமாள் கோயிலுக்கும் வந்து செல்கின்றார்.

உத்தமதானபுர அக்கிரகாரம் இரண்டு தெருக்களை உடையது. ஒன்று கீழ் மேலாகவும், மற்றொன்று தென் வடலாகவும் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் இரண்டு சிறகுகள் இருக்கின்றன. கீழ்மேல் தெருவின் மேல் கோடியில் பெருமாள் கோயிலும் தென்வடல் தெருவின் தென்கோடியின் தென்புறத்தில் சிவாலயமும் இருக்கின்றன. பெருமாளுக்கு இலட்சுமி நாராயணப் பெருமாளென்பது திருநாமம். சிவாலயத்தின் சந்நிதியில் ஒரு குளம் உள்ளது. அதற்கு இலட்சுமி தீர்த்தமென்று பெயர். சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள சுவாமியின் திருநாமம் கைலாசநாத ரென்பது; ஆனந்தவல்லி யென்பது அம்பிகையின் திருநாமம். இக்கோயிலில் உள்ள விநாயகமூர்த்தியிடம் இவ்வூரினர் மிக்க பக்தியுடையவர்கள். இவ்வூரில் வசிப்பவர்களும், இவ்வூரிலிருந்து வெளியூர் சென்று வாழ்பவர்களும் தங்கள் வீடுகளில் ஏதேனும் சுபகாரியம் நடைபெற்றால் அதற்கு முன்பு அந்த மகா கணபதிக்கு நிறைபணி செய்துவிட்டுப் போவார்கள். காது குத்துக் கல்யாணமாக இருந்தாலும் அந்த விநாயக மூர்த்தியை அவர்கள் மறப்பதில்லை. இவ்விரண்டு கோயில்களிலும் நித்தியபூசையும் உத்சவங்களும் கிரமமாக நடைபெற்று வருவதுண்டு.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

  • இப்படித்தான் தமிழர் நிலங்கள் தமிழ் ஏழைகளுக்கு வழங்கப் பெறாமல் அயல் பிராமணர்களுக்குக் கொள்ளை போயின.