(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!-தொடர்

ச்சி)

மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “தித்திக்கும் திருவாசகத்தேன்” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர்.
கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப் பேராசிரியர் வகுத்திருக்கும் உரையாகும். அவர் உரை மட்டும் இல்லாமல் போயிருந்தால் கோவையின் கருத்துச் செறிவுகளைக் கண்டுகளிப் பெய்த வாய்ப்பே இருந்திருக்காது. தோலும் தொலுப்பும் அகற்றிச் சுளை சுளையாக எடுத்துத் தேனில் தோய்த்து அளித்த வழியே பலாக்கனியின் சுவையினை உணர முடியும்.
அதுபோல் சொல்லையும் சொற்றொடரையும் தனித்தனியே பிரித்து இலக்கண விளக்கம் பொருள் விளக்கங்களைக் கடா விடைகள் மூலம் விலக்கிய பின்னரே கோவையின் சுவையினை உணர வைத்துள்ளார் உரையாசிரியர்.

செய்யுட்குப் பொருள் கூறத் தொடங்குவதன் முன்னர் பொருள் கொள்வதற்கு ஏற்ப, சொற்களையும் சொற்றொடர்களையும் முன்னும் பின்னுமாகக் கொண்டு கூட்டுவதும் தொகைச் சொற்களை விரிப்பதும் செய்வர். அதன்பின் சொற்பொருள் கூறுவர். அதையடுத்து அவ்வாறு பொருள் கூறும் நிலையில்; விளங்கப்பொருள் சொல்லாது விடுத்த சொற்களுக்கான பொருளை விரிவாகக் கூறுவர். பின்னர் ஒரு சொல் அல்லது ஒரு தொடருக்குத் தாம் கொண்ட பொருளேயன்றி கொள்ளலாகும் பிற பொருள் ஏதேனும் இருப்பின் அது கூறி, அவ்வாறு கொள்வதன் அமைதி அமைதி இன்மைகளை விளக்குவர்.
இறுதியாக ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் எடுத்துக் கொண்டு அவற்றை ஆண்டிருப்பதால் காணலாகும் சொல்நயம் பொருள் நயங்களையும், பெறலாகும் வேறு பிற விளக்கங்களையும் விரிவாக எடுத்துக் கூறி படிப்போர் உள்ளத்தில் பாட்டும் பொருளும் பளிங்கென ஒளிவிடச் செய்து விடுவார்.
“திருவளர் தாமரை” என்ற தொடருக்குத் “திருவளரும் தாமரைப் பூவினையும்” என்று பொருள் கூறிய பின்னர், திரு என்னும் சொல்லைத் தனியே பிரித்துப் பொருள் கூறத் தொடங்கியவர், “திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்” எனப் பொது நிலையில் கூறி, அதையடுத்து, திருவென்பது. கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று அதற்கு மேலும் ஒரு பொருள் விளக்கம் கூறியுள்ளார்.


பின்னர் தாம் அவ்வாறு பொருள் கோடற்காம். அமைதியினை விளக்குவான் வேண்டி, “இஃது என் சொல்லியவாறே வெளின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ, அக் கண்டவர்க்கு அப்பொருள் மேற்சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு; அதன்மேல் அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றிற்கு இல்லாமையால் திரு என்றது அழகுக்கே பெயராயிற்று என விளக்கம் தந்துள்ளார். அத்துடன் அமையாது” கோயிலைத் திருக்கோயில் என்றும். கோயில் வாயிலைத் திருவாயில் என்றும். அலகைத் திருவலகு என்றும் பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல; அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது; ஆதலாலும் திருவென்பது அழகென்றே அறிக அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே என உலக வழக்கை எடுத்துக்காட்டித் தாம் கொண்ட பொருளுக்கு அரண் செய்யும் அழகுணர்ந்து, இன்புறற்கு உரித்து.


“திருவளர் தாமரை” என்ற தொடருக்குத் “திருவளரும் தாமரைப் பூவிளையும்” எனப்பொருள் கூறிப் பின்னர் “திருமகள் தங்கும் தாமலர் எனினும் அமையும்” எனக் கொள்ளலாகும் வேறு பொருள் கூறியவர், அதுவும் தாம் கொண்ட முன்னையை பொருளோடு தொடர்புடையதே அல்லது முரண்பட்டது அன்று என்பதனை விளக்க, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமை யுடையவளும், இதன் சிறப்பு நோக்கியே இதனில் இருந் தாளல்லது, தன்னாலே இதற்குச் சிறப்புப் பெறவேண்டி இருந்தாள் அல்லள். ஆதலான் தாமரைக்கு ஒத்ததும் மிக்கதும் இல்லை; அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாதலான் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பது பெற்றாம்” என அளிக்கும் வாதம், அறிவுச் செறிவு வாய்ந்த வாதமாதல் அறிந்து அகம் மகிழ்ந்தற்கு அரியதன்றோ!


தாமரைக்கு அடையாக வந்துள்ள “வளர்” என்ற காலம் கரந்த பெயரெச்சத்திற்கு “வளரும் தாமரை” என நிகழ்காலம் பொருள் தோன்ற பிரித்துவிட்டு, உம்மை நிகழ்காலம் குறிப்பதன்று, மூன்று காலத்தையும் குறிப்பதாகும். இறந்த காலம், நிகழ்காலம், வரும் காலமாகிய மூன்று காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சியை “உம்” ஈறு உணர்த்தும் என்பதை உணர்த்துவான் வேண்டி, “இது வழக்கினும் வருவதுண்டோ எனின் உண்டு; அது ஞாயிறு திங்கள் இயங்கும்; யாறு ஒழுகும். மலை நிற்கும் என்றற்றொடக்கத் தனவற்றான் அறிக, “முன்னிலைக் காலமும் தோன்றும் இயற்கை அம்முறை சொல்லும் நிகழும் காலத்து மெய் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்” என்ற தொல்காப்பிய விதியை மேற்கோள் காட்டி “ஆகலின், உம்மைச் சொல் வரும் காலத்தையே காட்டாது, மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் என்றே அறிக என முடிப்பதும், அவர்தம் இலக்கண விளக்கத்திற்கு விழுமிய தோர் எடுத்துக்காட்டாம்.


மருத நிலத்துத் தாமரை, நெய்தல் நிலத்துக் காவி, முல்லை நிலத்துக் குமிழ், பாலை நிலத்துக் கோங்கு, குறிஞ்சி நிலத்துக் காந்தள் ஆகிய ஐந்து மலர்களைக் கூறியிருப்பது கொண்டு, “ஓரிடத்து ஒரு கலியாணம் உண்டானால், எல்லாரிடத்தும் உண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத்துக் கூடி, அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற். போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. எனக் கூறும் விளக்கமும், “திருவளர் தாமரை”, “சீர் வளர்காவி”, “குருவளர் பூங்குமிழ்”, “பைங்காந்தள் எண் ஒவ்வொரு மலருக்கும் சிறப்பு அடை கொடுத்துக் கூறிய ஆசிரியர், கோங்கு மலர்க்கு மட்டும் அடைகொடாது “கோங்கு” என வாளா கூறியது கொண்டு, “இதற்கு அடை கொடாதது பாலைநிலம் செல்லுதல் நோக்கி, என்னை பாலைக்கு நிலம் இன்று ஆக்லான்” எனக்கூறும் விளக்கமும், சொல்லாட்சி அமைதி காணும் அவர்தம் அறிவு நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.

தலைமகளைக் கண்ணுற்று வியந்து நிற்கும் நிலையில் தலைவன் கூறுவதாக அமையும் இப்பாட்டில் அன்னத்தின் நடைபோல நடை பெற்று “எனப் பொருள் தரும் என நடைவாய்ந்து” என்றதொடர் அமைந்திருப்பதைக்கண்டார் உரையாசிரியர்; தலைமகளை முதன்முதலாகக் கண்ட தலைமகன். அவள் பேரழகு கண்டு; மானோ மடமயிலோ, மலர் மகளோ, மான்மகளோ என ஐயுறுதற்குக் காரணமாய் வியப்புற்று நிற்கும் நிலையில் அவன் வாய் வழி வெளிப்படும் சொற்களே காட்சி எனும் துறை தழுவி வருதல் வேண்டும்; வியப்பு ஒருவாறு தணியக் தலை தூக்கிய ஐயம், அவள் கண் இமைத்தல், கால் நிலம் தோய்தல் முதலாயின. கண்டு அவள் மண்மகளே எனத் துணிவன், அவ்வாறு துணியத் துணை நிற்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய கால்நிலம் தோய்தல், அது நடை பயிற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளைக் காட்சி எனும் துறை அமைந்த செய்யுளில் கூறுவது அகத்திணை மரபுக்கு ஒவ்வாது; ஆனால் மணிவாசகப் பெருந்தகை அதை இச்செய்யுளில் கூறி விட்டார்: ஆகவே, “நடை கண்டானாயின், மேல் ஐயநிலை உணர்த்தல் வழுவாம் எனின், இவன் நடை, கண்டான். அல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்ன நடையை ஒக்கும் என்றான்” என அமைதி கூறி இருப்பது இலக்கண மரபு வழுவாது காக்கப்படல் வேண்டும்” என்பதில் உரையாசிரியர் காட்டும் ஆர்வத்தை உணர துணை புரிவதாகும்.

இவர் உரையில் செந்தமிழ் சிலம்பொலிக்கிறது என்றாலும் இடையிடை வடசொற்களின் வாடையும் வீசுவதும் உணர்கிறோம். முதற்பாட்டிற்கு வகுத்த உரையில் மட்டும் ஆபரணம், கலியாணம், கேசம், சிருங்காரம், தவிசு, நாயகர், பரதம், விகாரம், விசேசத்து போலும் வடசொற்கள் இடம் பெற்றுள்ளன.

(தொடரும்)