என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு

என் அம்மா பூபதி அம்மாள்(92), குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அறைகூவல்களை  எதிர்கொண்டார்.  தன் பாதையிலிருந்து புறங்காட்டவே இல்லை.  மக்களுக்குத் தொண்டாற்றவே செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து,  செவிலியர்  கல்வியில் சிறந்து விளங்கினார்.

பிரித்தானியர் காலத்தில் ஆயுதப்படையில் சேர்ந்தார்; நாயகன்(catain) நிலைக்கு உயர்ந்தார். கிளாசுகோ, மெடிசின் ஆட்டு(கனடா, Medicine Hat, Canada),  இலங்கை போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் அவரது பணி இருந்தது.

தாயகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி மீதான அவரது பற்றும் ஈடுபாடும் மிகவும் உயர்ந்தது. என் தாய் கத்தோலிக்கரான மைக்கேல் என்பவரை மணந்தார். அவரும் படைவீரரே. இருவரின் ஒரே மகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கட்டுப்பாடும் தமிழ் உணர்வும் காலூன்றின. அந்த நாட்களில், படைப்பெண்ணிற்குத் திருமணம் நடந்தால், அவள் ஆயுதப்படைத்துறையிலிருந்து விலக வேண்டும். அதன்படி என் தாயாரும் படைத்துறையிலிருந்து விலகினார். இருப்பினும் செவிலியராக மக்கள் பணியாற்றினார்.

என் இளம் பருவத்தில் தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த வலிமையான ஒட்டுறவைக் கண்டேன். இதுவே, பின்னர் என் உள்ளத்தில் தமிழ்ப்பற்றை விதைக்கக் காரணமாக இருந்தது. வைகறை 4.00 மணிக்கெல்லாம் இறைப்பாடல்களில் சில பகுதிகளை மனனம் செய்யச் செய்தார்.

அவர் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பெருமளவு உதவினார். அவர் எப்பொழுதும் பெண்களையும் நலிந்தவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தார்.

என்னிடம்  நல்ல குணங்கள் இருந்தால் அவை என் தாயிடமிருந்து எனக்கு வந்தவையே. அவர் 1988 இல் மறைந்தாலும், அவரது நினைவுகள் என்றும் நீடித்தவையாகவும் அன்றலர்ந்தன போலவும்  நிலைத்து நிற்கின்றன.

மைக்கேல் (இ)யூபருட்டு