thalaippu-ellaachollum-thamizhkuriththanave

       உணவுப் பொருளாயினும் நாம் பயன்படுத்தும் பிற பொருளாயினும் நாம் தூய்மையையே விரும்புவோம். கலப்படம் கேடு தரும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். ஆனால் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலும் கலப்படம் கூடா என்பதை நாம் உணருவதில்லை. கலப்படச் சொற்களும் கலப்பட நடையும் நம்மை வாழ்விக்கும் எனத் தவறாக எண்ணி நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இத்தகைய கலப்பினால்தான் தன் பரப்பினை இழந்து துன்புறுகின்றது என்பதையும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரம் தூய நடை என எண்ணிக்கொண்டு அருந்தமிழ்ச் சொற்களையும் அயற்சொற்களாகக் கருதி ஒதுக்கும் அவலநிலையும் தனித்தமிழ் அன்பர்களிடம் உள்ளது. எனவே எடுத்துக் காட்டிற்கு அயற்சொல் மயக்கத்திற்கு உள்ளாக்கப்படும் சில நற்றமிழ்ச் சொற்களைப் பார்க்கலாம்.

        வருடம் என்பது வானியல் சார்ந்த தமிழ்ச் சொல். ஆடு – வருடை – போல் தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் ஆடாகிய வருடையின் பெயரால் வருடை ஓரை எனப்பட்டது. வருடை ஓரையில் – வருட ஓரையில் – தொடங்கப்படும் காலம் வருடம் எனப்பட்டது. இது சமசுகிருதத்தில் வருசம் என்றானதும் உச்சரிப்பால் குழம்பிய நாம் தமிழ் அன்று என எண்ணிவிட்டோம். இன்றைய நிதியாண்டு(financial year) என்பதுதான் வருடம் ஆகும். ஏனெனில் பழந்தமிழ் ஆண்டு என்னும் கால அளவு ஆவணியில் தொடங்குவது. வருடம் என்பது சித்திரைத் தொடக்கம். எனவே வருடம் என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து பயன்படுத்துவோம்.

          மத்தியம் தமிழ்ச்சொல் அன்று எனக் கருதி மையம் என்றும், மையமும் தமிழ்ச்சொல்லன்று என எண்ணி நடுவம் என்றும் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் மூன்றும் தமிழ்ச் சொற்களே. ஆனால் சீர்திருத்த முறையில் எழுதுவதாகக் கருதிக் கொண்டு மய்யம் என எழுதுவதுதான் தவறு ஆகும்.

        ஒரு பரப்பில் எல்லாப்புறமும் சமஅளவு உள்ள புள்ளியில் அமைவது நடு என்பதாகும். இவ்வாறு துலாக்கோல் நடுப்புள்ளியில் அமையும் பொழுதுதான் சரியான நிறுவையைக் காட்டும். அதுபோல்தான் நாமும் நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தமிழர் கொள்கை. தயிர் கடையும் மத்து நடுச் சுழற்சியில் அமைவது போன்ற நடுப்பகுதிதான் மத்தி என்பது. மத்து என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து உருவான மத்தி, மத்தியம் மத்தியானம் முதலியவற்றைப் பிறமொழிச் சொற்களாகக் கருத வேண்டியது இல்லை. மையம் என்பது நடுப்பகுதியாகவும் இருக்கலாம்; அல்லாமலும் இருக்கலாம். ‘மை’ என்பது மழை முகிலைக் குறிக்கும். கார்முகில் கூட்டம் ஓரிடத்தில் திரண்டு இருந்தால், கார் முகில் அல்லது புயல் மையம் கொண்டுள்ளதாகக் கூறுகிறோம். இது போல் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து இருப்பின் அதனை அதிகார மையம் என்று சொல்லலாம். எனவே இந்திய நடுவணரசு என்றோ மத்திய அரசு என்றோ சொல்வதைவிட மைய அரசு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்திய நிலப்பகுதியின் நடுவிலோ மாநிலங்களுடன் சமஅளவிலான மத்தியிலோ அமைந்த அரசு அன்று இது. அதிகாரங்களைத் தன் பக்கம் குவித்து வைத்து உள்ள அரசு. எனவே மைய அரசு என்பதே பொருத்தம்.

           பலர், ‘பூர்த்தி’ என்பது தமிழன்று என எண்ணி ‘நிறைவு’ எனக் கையாளுகின்றனர். 1 க்குப் பிறகு 52 சுழிகள் இடப்பட்ட எண் பூரியம் எனப்படும். இன்மை எண் பூச்சியமாகவும் முழுமை எண் பூரியமாகவும் கருதப்பட்டது.   ஒரு காலத்தில் அதனையே பேரளவு எண்ணாகக் குறித்தனர். எனவே முழுமைக்கு வேர்சொல்லாகப் ‘பூர்’ அமைந்தது. முழுமையான மகிழ்ச்சி பூரிப்பு எனப்பட்டது. முழு அளவில் உப்பி விரிவடைகின்ற உணவுப் பண்டம் ‘பூரி’ எனப்பட்டது. எனவே கோடிட்ட இடங்களை அல்லது காலியாக உள்ள இடங்களை நிரப்புவது பூர்த்தி செய்தல் என்றாயிற்று. இதனை அறியாமல் பூர்த்தி செய்தல் என்பது தமிழன்று எனக் கருதி நிறைவு செய்தல் எனக் கையாளுகின்றனர்.

           சூரியன் நல்ல தமிழ்ச்சொல் என்பதை உணராமல் அதனைத் தவிர்கின்றனர். ஞாயிற்றின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்பக் கதிரவன், ஆதவன், எனப் பெயர்கள் உள்ளமை போல் அதன் வெப்பத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த சொல்லே சூரியன் என்பது. ‘சுர்’ என்பது வெம்மையைக் குறிக்கும். எனவே வெப்பமான நிலப்பகுதி சுரம் எனப்படுகிறது. வெயில் கடுமையாக இருந்தால் ‘சுரீர்’ என வெயில் அடிப்பதாகக் கூறுகிறோம். நமக்கு உதவக்கூடியவற்றுள் மிகுதியான வெப்பத்தை அளிக்கக் கூடிய நட்சத்திரத்தைச் சூரியன் என்றனர் நம் முன்னோர். ஆதி என்பது தொடக்கத்தையும் தொடக்கமாக அமையும் தோற்றத்தையும் குறிக்கும் தமிழ்ச் சொல்லே. புவிக்கு ஆதியாய் அமைந்த சூரியன் ஆதவன் எனப்பட்டது வானறிவியல் சார்ந்த நல்ல தமிழ்ச்சொல்லாகும்.

               சொந்தபந்தம், பந்துக்கள் என உற்றார் உறவினர்களைக் குறிக்கிறோம் அல்லவா? ஓலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைத்து உருவாக்கப்படுவது பந்தல். அதுபோல் பிணைக்கப்படும் உறவு பந்தம். பந்தத்தில் உள்ளவர்கள் பந்துக்கள்.

             உத்தரவு, ஆணை முதலியனவும் தமிழே. மேலிருந்து தரப்படும் கட்டளைகள் உத்தரவு ஆகும். மேற்புறம் கூரையில் அமையும் உத்தரம் போன்ற சொற்களைப் போல் அமைந்ததே உத்தரவு. மேலே வடக்கில் அமையும் பகுதி உத்தரம், உத்தரப் பகுதி (உத்தரப் பிரதேசம்) எனப்படுகிறது. எனினும் உத்திரவு என எழுதுவது தவறாகும். ஆளுமைக்குரிய – ஆண்மைக்குரிய – சொல் அல்லது தொடர் ஆணையாகும். ஆண்மை என்பதனை ஆண்மை, பெண்மை என்ற நோக்கில் பார்க்கக் கூடா. ஆளுமையாகிய ஆண்மை இருபாலருக்கும் உரியதே. ஆணையில் இருந்து உருவானதே ஆக்ஞை என்னும் சமசுகிருதச் சொல்.

                    கவனம் என்பது உச்சரிப்பில் தவறாக ஒலிக்கப்படுவதால், சமசுகிருதச் சொல் எனக் கருதி, கருத்து செலுத்துதல், கருத்தில் ஈர்த்தல், கருத்தில் கொள்ளுதல் என்ற முறைகளில் எழுதி வருகின்றனர். மனத்தைக் கவரும் செயல் கவனிப்பு ஆகின்றது. எனவே, கவனம் என்பதும் தமிழ்ச் சொல்லே.

                 இரவலாக்குக் கொடுப்பது கொடை என்பது போல் இல்லார்க்குத் தருவது தருமம் ஆகும். இதுவும் ஒலிப்பு முறையால் தமிழன்று எனத் தவறாகக் கருதப்படுகின்றது. எனினும் அறம் என்பது மிகச் சிறந்த பண்பு. இரவலர்க்குத் தருவது தருமம், கலை இலக்கியச் சிறப்பு கருதிக் கொடுப்பது கொடை, தீயவற்றை அறுக்கும் நற்பண்பு, நற்செயல் ஆகியன அனைத்தும் அறம் எனலாம்.

           கலியாணம் என்பதும் நல்ல தமிழ்ச் சொல்லே. மணம் என்பது பொருந்தி வாழ்வதைக் குறிக்கிறது. எனவே ஆண் பெண் இருவரின் இணைவு திருமணம். இத்திருமணம் நடைபெறும் நிகழ்வே கலியாணம். கலி என்பது எழுச்சி, மகிழ்ச்சி, களிப்பு, ஆரவாரம், விழா என்பனவற்றைக் குறிக்கும். திருமணம் குறித்துச் சுற்றமும் நட்பும் எழுச்சி கொண்டு மகிழ்ச்சியாக ஆரவாரமாக எடுக்கும் விழாவே கலியாணம் ஆகும்.

              சமசுகிருதத்தில் உள்ள சொற்களில் ஐந்தில் இரண்டு வெளிப்படையாகவே தமிழ் என உணரக்கூடியவை. பிறவற்றில் பெரும்பான்மை, பழந்தமிழ்ச் சொற்களாகவோ பழந்தமிழ்ச்சொற்களின் சிதைவு வடிவங்களாகவோ உள்ளமையை நடுநிலையாளர்கள் நன்கு உணருவர். இதற்குக் காரணம் என்னவென்றால், சமசுகிருதம் வரும் முன்பு இத்துணைக் கண்டம் முழுவதும் வழங்கி வந்த மொழி தமிழே என்பதால்தான். “தமிழின் தொன்மையோடு ஒப்பிடுகையில் சமசுகிருதமானது இப்பொழுது வரப்பெற்ற கம்பிச் செய்தியைப் போன்றது” என்கிறார் மேனாள் ஆளுநர் அறிஞர் கிராண்டப். ஆரியர்கள் தாங்கள் செல்லும் பகுதிகளில் உள்ள சொல்வளங்களையே தம் ஒலிப்பு முறைக்கேற்ப மாற்றிக் கொண்டனரேயன்றி அவர்களுக்கு எனச் சொல் வளம் அமையாதிருந்ததால், இங்கு மக்கள் மொழியாக இருந்த தமிழைப் பார்த்துத் தம் மொழியைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். “இமயமலை முதல் குமரிக்கடல் வரை பேசப்பட்ட மொழி தமிழ் எனப் பல வரலாற்று அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் நிறுவியிருந்தாலும் வேண்டுமென்றே சமசுகிருதத்தை உயர்த்தியும் தமிழைத் தாழ்த்தியும் ஒரு கூட்டத்தார் செயல்பட்டு வந்தமையால், சமசுகிருதம் கடன்கொடுக்கும் மொழியாகத் தவறாகக் கருதப்பட்டுவிட்டது. எனவே, இன்றைக்கும் வட திராவிட மொழிகள் எனவும் தென்திராவிட மொழிகள் எனவும் கூறப்படும் தமிழ்ச்சேய் மொழிகளில் உள்ள சொற்கள் சமசுகிருத்தில் இருப்பினும் சமசுகிருத மூலமாகத் தவறாகக் கருதப்பட்டு விட்டன” என்னும் கருத்தோட்டம் பல அறிஞர்களாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

              இவ்வுண்மையை அறிந்தும் உணராத் தமிழன்பர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றிரட்டு இருக்கையில் சிலவற்றைச் சமசுகிருதம் என எண்ணித் தவிர்ப்பதையும், நல்ல தமிழ்ச்சொற்களைச் சமசுகிருதம் என மயங்கிப் புதுச்சொல் புனைவதையும் கடமையாகக் கொண்டு தவறு செய்கின்றனர். அவ்வாறு இல்லாமல் பழந்தமிழ்க் கண்டத்தில் உருவான எல்லாச் சொல்லும் தமிழே என உணர்ந்து தமிழுக்கு இயைபில்லாத சமசுகிருதச் சொற்களையும் பிற அயல்மொழிச் சொற்களையும் சிதைவுச் சொற்களையும் அறவே நீக்கி நல்ல தமிழ்ச் சொற்களையே பேசியும் எழுதியும் வரவேண்டும். உலகின் மூத்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்ச் சொற்களே பிறவற்றிற்கு மூலமாக உள்ளமையை உணர்ந்து, நமக்குரியனவற்றை நமக்குரிமையானவை என உரிமையோடு பயன்படுத்தவும் அல்லாதனவற்றை அகற்றவும் வேண்டும். இவ்வாறு முனைந்தால், ஆசியக் கண்டத்து மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொல்வளம் பெரும்பகுதி இருப்பதை வெளிப்படுத்தலாம்.

–    இலக்குவனார் திருவள்ளுவன்

thamizhosai