(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி)ezhuthaikaappoam_attai02

  பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் – தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் – எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு எதிராகத், “தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. பழமையை அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்து கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா?” எனக் கடிந்து கூறியுள்ளார் (சித்த யோகி சாமி சுந்தரமகாலிங்கம் அவர்களின் ‘உண்மை வெளிப்படுகின்றது’ என்னும் கட்டுரை: செந்தமிழ்ச் செல்வி சனவரி, 1952: தரவு-புலவர்மணி இரா.இளங்குமரனாரின் ‘எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா?’ என்னும் நூல் பக்கம் 13). சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், “எழுத்துச் சீர்திருத்தவாதிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை பேசுகின்றனர். …. எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம். அது குழப்பவாதிகள் என்பதாகும். …. உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுகின்றனர்” (எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? 1995) என எழுத்துச்சிதைவிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கூறாததைக் கூறியதாகக் கூறும் வஞ்சனையை அன்றே சிலம்புச் செல்வர் உணர்த்தியுள்ளார். இவர்களைப் போல், கப்பலோட்டிய தமிழர் அறிஞர் வ.உ.சிதம்பரனார், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் வ.சுப.மாணிக்கம், பாவலர் பெருஞ்சித்திரனார், முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், கணிஞர் மு. மணிவண்ணன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் முதலிய பலரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; மேலும் பலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரிவடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால் மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கிவந்த தமிழ் மொழி புதிய புதிய வரிவடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக்கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச் சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ் நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. ஒலியே மொழி என்றும் வரிவடிவம் மொழியன்று என்றும் கூறும் தவறான வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஐ என்று மட்டும் ஒலித்தால் தமிழா ஆங்கிலமா வேறு மொழியா எனத் தெரியாது. ஆனால், ஐ எனத் தமிழில் எழுதும்பொழுது, உயிரெழுத்துகளில் ஒன்றாகவும், தலைவன் என்னும் பொருள் உடைய சொல் என்றும் புரிந்து கொள்ளலாம். இதனையே ஆங்கிலத்தில் ஐ என எழுதும்பொழுது தனி எழுத்தாயின் (I) உயிரெழுத்தையும் நான் என்னும் பொருளையும் குறிப்பதாகவும் எழுத்துச் சேர்க்கையாக அமையின் (Eye) கண் என்னும் பொருள் வருவதையும் புரிந்து கொள்ளலாம். ஆக ஒலிவடிவம் பல மொழிகளில் பொதுவாக இருப்பதையும் வரிவடிவமே மொழியை வேறுபடுத்துவதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, வரிவடிவத்தைச் சிதைப்பது மொழியைச் சிதைப்பதாகும் என உணர்ந்து அம் முயற்சியைக் கைவிடவேண்டும்.

ஐரோப்பிய மொழிகளில் உயிர் மெய்யெழுத்தில்லை எனக் கூறி அவ்வாறு உயிர் மெய் அமைப்பிருக்கும் தமிழின் சிறப்பைக் குறையாகக் கூறுகின்றனர். ஊனமுற்றவர்களைக் காட்டி, முழு நலத்துடன் இருக்கின்றவரைக் கைகால்களை உடைத்துக் கொள்ளச் சொல்லும் அறியாமைக்கு என்னென்பது? உயிர்மெய்எழுத்துகள் இருப்பதால் நாம் ஒவ்வோர் எழுத்தாக ஒலிக்க வேண்டிய தேவையில்லை. த+மி+ழ் என்றால் தமிழ் என்றாகிறது. மாறாக உயிர் மெய் எழுத்துகள் இல்லாமல் இருந்தால் அவர் குறிப்பிடும் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் போல் த்+அ+ம்+இ+ழ் என எழுத்தொலிகளைக் கூட்டிச் சொல்லை உச்சரிக்க வேண்டியிருந்திருக்கும். சொல்லின் அளவும் நீளமாகும். இதேபோல்தான் சிதைவு முறைப்படி எழுதும் பொழுதும் அளவு கூடும். சான்றாகப் புது என்பதை எழுதும் பொழுது ப+உகரக்குறியீடு+த+உகரக்குறியீடு எனச் சொல்லின் அளவு நீளும். உழைப்பு, தாள், மை, தேய்மானம் ஆகியவை கூடும்: செலவு பெருகும். குறைந்த முயற்சியும் குறைந்த உழைப்பும் நிறைந்த சிக்கனமும் எளிமையும் உடைய எழுத்தமைப்பைக் குறை கூறுவதில் இருந்தே ஆழமான சிந்தனை இன்றி மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் 26 என்ற குறைந்த எழுத்துடைய ஆங்கில மொழியினைக் கற்க முதன்மை கொடுப்பதாகவும் 247 என்னும் மிகுதியான எண்ணிக்கை உடைய தமிழைக் கற்க அஞ்சி ஓடிவிடுவதாகவும் அவ்வப்பொழுது தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. எழுத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து யாரும் மொழியைக் கற்க முடிவெடுப்பதில்லை. தேவை கருதிப் பெரும்பான்மையரும் ஆர்வம் கருதி மிகச் சிறுபான்மையரும் மொழியைக் கற்கின்றனர். மேலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான உள்ளன என்பதும் தவறாகும். ஆங்கில வரிவடிங்கள் தலைப்பெழுத்து, சிறிய எழுத்து, அச்சுப் பெரிய எழுத்து, அச்சுச் சிறிய எழுத்து என நால்வகையாக உள்ளன. சான்றாகப் பின்வரும் இரண்டு எழுத்துகளைப் பார்ப்போம் : F, f, g , f – G, g, g, g, என்பன வெவ்வேறு வகையாக உள்ளன அல்லவா? ஆங்கில வரிவடிவத்தில் மொத்தம் 524 வகை உள்ளதாக ஆங்கிலப் பேராசிரியர் ஐயாதுரை என்பார் கூறியுள்ளார். அவை அனைத்தையும் அறியா விட்டாலும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஒருவர் இந்நால்வகை வடிவமுறைகளையும் கற்றால்தான் அவரால் ஆங்கிலத்தைப் படிக்க முடியும். இல்லையேல் பயனில்லை. எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன என்று சொல்பவர்கள் உண்மையை மறைப்பது ஏன்?

ஆதலின், ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து 1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்,ஏ,எம்,ஏ (R,A,M,A) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என், ஓ (NO) என்றால் நோ; என், ஓ, டபுள்யூ (NOW) என்றால் நௌ; கே, என்,ஓ,டபுள்யூ (KNOW) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக – ஆக 104 – எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே. (எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்