தலைப்பு-எழுவர் விடுதலை-திரு : thalaippu_ezhuvarviduthalai_thiru

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்!

 

  இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும்  மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது.

 தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம்,  போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது.

  இது தொடர்பான முதல்வரின் சொல்லும்  அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம்  அரசின் போக்கு மாற வேண்டும்.

  10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை  துய்த்த 2,200  ஆயுள்தண்டனைச் சிறைவாசிகளைத் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. இதே அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை  துய்த்து வரும் தன்னையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த திசம்பர் மாதம்  நளினி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் வழக்கில் ஒரு முடிவு எட்டும் வரை, இந்த வழக்கில் நளினி  பதிந்த விண்ணப்பத்தை உசாவலுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது; எனவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று   எதிர்ஆவணம் அளித்துள்ளது.

 அதிகாரிகளின் போக்கு அரசின் கருத்திற்கு இணங்க அமைய வேண்டும். ஆனால், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவைப் புறக்கணித்து மாறுதலுக்குரிய விதி முறை எதையாவது காரணம் காட்டி அரசின் உள்ளக்கிடக்கைக்கு எதிராக நடந்துகொள்கின்றனர். எனவேதான் வழக்கு மன்றத்தில் தவறானகருத்தைப் பதிந்துள்ளனர். அரசாணைகளுக்கு எத்தனையோ விதிவிலக்கு அளித்துள்ள அரசதிகாரிகள் ஒரு வேளை விதி இடையூறாக இருந்ததென்றால் அதை மாற்றலாமே! அல்லது விலக்கு அளிக்கலாமே!

  “19.02.2014 இல் கூடிய அமைச்சரவைக்கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432- இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி,  இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன்  ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள்” என்று மாண்புமிகு முதல்வர் செயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால் மனித நேயமும் அறவுணர்வும்மிக்க இந்த உரைக்கு மாறாகவே அதிகாரிகளின் போக்கு உள்ளது.

  பெரும்பாலான அதிகாரிகளின் போக்கு இன்னலுக்குள்ளானவர்கள் உள்ளங்கள்பற்றிக் கவலைப்படாது தொடர்பான தாள்களைப்பற்றியே இருக்கும் என்பதற்குச் சான்றாக இவ்விடுதலை தொடர்பான நேர்வை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் இவ்வழக்கு தொடர்பான எழுவரையும் விடுதலை செய்ய அல்லது அதுவரையில் காப்பு விடுப்பில் விடுவிக்க மடல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்பான மடல்களில் சில

09.11.2044 / 25.11.2013, 07.01.2045 / 20.01.2014, 22.01.2045/ 04.02.2014, 05.02.2045/ 20.02.2014,24.11.2046 / 10.12.2015  நாள்களிலும் மேலும் பல நாள்களிலும் அனுப்பப்பட்டுள்ளன.

  மாண்புமிகு முதல்வர், திட்டமிட்டவாறு தடைகளை உடைத்து எழுவரையும் விடுதலை செய்யும் நாள்வரை பொறுத்திராமல் இடைக்காலத்தடையை முறியடிக்கும் வகையில் இடைக்கால விடுதலையாகப் பேரறிவாளன் என்கிற அறிவு, சிரீஅரன் என்கிற முருகன், சுதேந்திரராசா என்கிற சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்பதே முறையீடுகளின் மையக் கருத்தாகும்.

இம்மடல்களில், பின்வருமாறு வலியுறுத்தப்பட்டன.

  1. அமைச்சரவை முடிவிற்கேற்ப மாண்புமிகு முதல்வரால் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டமுருகன் முதலானவரை முதலில் 6 திங்கள் காப்பு விடுப்பில் விடுவித்தல்.
  1. இவர்கள் தொடர்பான தீர்ப்பு குறித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்தல்.
  1. தேவை யெனில் காப்பு விடுப்பில் விடுவிக்கப்படு வோரை நன்னடத்தைக் கண்காணிப்பில் வைத்தல்.

  தொடர்ந்து வழக்கினைக் காட்டியே மறுத்ததால்,மதிப்புநிலை நன்னடத்தைக் கண்காணிப்பாளர்களை அமர்த்தி அவரின் பார்வையில் இவர்களை உட்படுத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

  முறையீடுகளுக்கு மதிப்பளித்து அவ்வப்பொழுது மறுமொழி அளித்துள்ள உள்துறைச் செயலர், தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் முதலானஅரசு அதிகாரிகளைப் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் பார்வை பழம்பார்வையாக உள்ளது வருத்தமாக உள்ளது. முதன்முறை மடல் அனுப்பிய பொழுது சிறைத்துறையில் இருந்து மறுத்து மடல்  அனுப்பப்பட்டது. ஆனால், அம்மறுப்பை ஏற்காமல் ஆராய்ந்து தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து மடல் அனுப்பினர். இதனைப் படித்தபின்பாவது அரசின் நோக்கத்திற்கேற்ப ஆராய்ந்து இருக்கலாம். ஆனால், பொதுவாக “விடுதலை குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, இன்படி விடுப்பு வழங்குவது குறித்துப்பரிசீலிக்க இயலாத நிலைஉள்ளது” என்பதே மறு மொழியாக இருக்கும். அதைத்தான் இப்பொழுது நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர்.

  அண்மையில் சிறைத்துறைத்தலைவர் அனுப்பிய மடலில் (எண் 7072/சிபு.1/2016 நாள் 01.06.2016 )  “ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்யும்  நேர்வு தற்போது பரிசீலனையில் இல்லை. மேலும் 14 ஆண்டுகள் சிறைவாசம் பெற்ற சிறைவாசிகளின் முன்விடுதலை அறிவுரைக்கழகம் மூலம் பரசீலனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

 அப்படியாயின் அறிவுரைக்கழகத்தைக் கூட்டுவதற்கு என்ன தடை உள்ளது? உடனே கூட்டலாமே!

 “ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.” (திருவள்ளுவர், திருக்குறள் 579)

ஆதலின், தண்டித்துத்தான் திருத்தவேண்டும் என்போர்களையும் மன்னிப்பதே சிறந்த பண்பு. ஆனால், இங்கோ, செய்யாக் குற்றத்திற்காகப் பொல்லாத் தண்டனையில் துன்புறுவோரைக் காப்பாற்ற இயலாமல் உள்ளது பேரவலம் அல்லவா?

  சட்டமன்றத்தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில்  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் அதிகாரவரம்பு தொடர்பான வழக்கு உள்ளதால், தமிழக அரசினால் விடுதலை செய்ய இயலவில்லை. எனினும் நீதிமன்றம் இசைந்தால் விடுதலையை எதிர்நோக்கி  விடுப்பில்(பரோலில்) விடுவிப்பதாகத் தெரிவித்து  நீதிமன்ற இசைவைப்பெற வேண்டும். ஒரு வேளை நீதிமன்றம் மாறாகத் தெரிவித்தால் உடனடியாக அறிவுரைக்கழகம் கூட்டத்தைக்கூட்டி நிலுவை வழக்கு முடியும்வரை  காப்பு விடுப்பில் விடுவிப்பதாக முடிவெடுத்து உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும். நளினிக்கு மட்டுமல்லாமல் பிற அறுவருக்கும் இவ்வாறு விடுப்பு வழங்க வேண்டும்.

  விசாரணைக் கைதிகளில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது  காப்பு விடுப்பு என்பது மறுக்கப்படலாம். ஆனால் அளவுகடந்த தண்டனையில் உள்ளவர்களுக்கு வழக்கு நிலுவை என்பது பொருந்தாது. மேலும் அரசு விடுதலைக்கே ஆயத்தமாக இருக்கும் பொழுது காப்பு விடுப்பு மறுப்பு என்பது அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தும். உண்மை உணர்வுடன் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வரின் புகழுருவிற்கும் இழுக்கு ஏற்படுத்தும். உலகத்தமிழர்களின் உள்ளம் குளிர்ந்து மாண்புமிகு முதல்வரை வாழ்த்த, எழுவர் விடுதலைக்கேற்ப மறு எதிர்உறுதி ஆவணம் அல்லது வாதுரை அளித்து, எழுவருக்கும் விடுதலை அல்லது விடுப்பு வழங்கி மறுவாழ்வு உதவிகளும் அளித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.

நீதிமன்றத்தில் அரசின் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்து எழுவரின் இடைக்கால விடுதலையாக விடுப்பிற்கு ஆவன செய்வார்களாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 140, ஆனி 12, 2047 / சூன் 26, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo