ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2
‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ் மொழிக்கான பெயர் திராவிடம் என்றும் அதிலிருந்துதான் தமிழ் வந்ததென்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் தெளிவாகப் பின்வருமாறு விடை பகர்கிறார் தாமோதரனார்.
இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது.
அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க.
செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க.
இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது! தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமுன்னர்ச் சமசுகிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ?
உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமசுகிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே.
இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சமசுகிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சமசுகிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீசு முதலிய அந்நிய மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணுமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்?
தருக்கத்திற்காக தாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!
இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர்.
ஏமசந்திரநாநார்த்தத்தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடி வளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. . . . . . . . மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழியையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க.
அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருடப் மொழிக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.
தற்காலத்தில் இங்கிலீசு பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும்.
குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?….இவையெல்லாஞ் சம்சுகிருதத்தினின்று பிறந்தனவாமே!!
இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் ‘பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழி’ என்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரே” என்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் – றறையவு நாணுவ ரறிவுடையோரே” யென்று மாழ்கினர்.
இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எம்மொழிக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு மொழி யின்றேயென்று சம்சுகிருதத்தையும் புரட்டிவிடலாமே.
இங்கிலீசு மொழியில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் F, Z இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு மொழியின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம்.
உண்மை உரைப்பின் உரோமாபுரிமொழியாகிய இலத்தீனுக்கும் இங்கிலீசுக்குமுள்ள சம்பந்தமே சம்சுகிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் இலத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீசில் இல்லாதவாறு போலவே சம்சுகிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று – ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோ” என இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக.
அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்சுகிருதத்தினின்று பிறவாத தன்மொழி(தற்பாசை) என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும்.
இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் மொழியினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.”
இவை போலும் அறிஞர் சி.வை.தாமோதரனாரின் ஆழமான கருத்துகள் தமிழுக்கு என்றும் வலிவும் பொலிவும் நல்குவனவன்றோ!
அறிஞர் தாமோதரனார், தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்து ஒன்பதாம் அகவையில், 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், இவ்வுலக வாழ்வை நீத்தார்.
நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் – பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. (புலவர். நா. சிவபாதசுந்தரனார்)
என நாம் அறிஞர் சி.வை.தாமோதரானரின் பார்புகழ் போற்றிப் பைந்தமிழ் காப்போம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்கியப்பூக்கள் 2
தொகுப்பாசிரியர் : முல்லை அமுதன்
பக்கங்கள்(432- 443:) 438-443
இப்பேர்ப்பட்ட அரிய கருத்துக்களையும், தமிழர்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைச் செய்திகளையும் தேடித் தேடித் தொகுத்துத் தரும் தங்களுக்குச் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!