ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளது.

ஒரே தேர்தல் என்பதற்காகச் பல சட்டமன்றங்களையும் ஆட்சிகளையும்  கலைக்க வேண்டி இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்களின் காலம் முடியும் முன்னரே அழிக்கப்படுவது மக்களாட்சிக்கு எதிரானதல்லவா?

வாதத்திற்காக நாடாளுமன்றம், அனைத்துச் சட்டமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்துவதாகக் கொள்வோம். அப்படியானால் ஆட்சியில் இருக்கும் அரசுகளையும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்றங்களையும் தேர்தலுக்காகக் கலைப்பது என்பது மக்களாட்சியைப் படுகொலை செய்வதாகத்தானே பொருளாகும்?  இப்படுகொலை தேவைதானா?

இப்படுகாலை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேர்தல் நடந்து முடித்துவிட்டதாகக் கொள்வோம். சில மாநிலங்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் வரலாம். தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது சூது நிறை பா.ச.க. இது போன்ற சூழலில் மாநில அரசு கலையும் நிலை வரலாம். பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பொழுது வெவ்வேறு நாள்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம வரத்தானே செய்யும். அப்பொழுது நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகும் அல்லவா?

இதனை மறுதலையாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். நாடாளுமன்றச் சூழல் மாறி மத்திய ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டு எக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் மத்தியில் தேர்தல் நடத்தித்தானே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பது என்றால் மத்திய மக்களாட்சி என்பது அடிபட்டுத்தானே போகும்.

அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டு முழுமையும் பொறுப்பில் இருக்கும் வரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்கின்றனர் சிலர்.  என்ன தவறு செய்தாலும் எவ்வளவு ஊழலில் திளைத்தாலும் ஆட்சி நிலைத்துத்தான் இருக்கும் என்றால் ஆட்சியாளர்களுக்குத் தவறு செய்வதில் எந்த அச்சமும் இருக்காதே இதனால் மக்கள் நலன்கள்தானே பாதிக்கப்படும்.

சில செலவுகளைச் செய்துதான் ஆகவேண்டும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் செலவு. எனவே, சிக்கனம் என்ற பெயரில் மக்களாட்சிக்கு ஊறு நேரும் வகையில் செயல்படக்கூடாது என நாளைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.

. பா...வும் பேராயக்(காங்.) கட்சிக்கும் தேசிய இன அழிப்பில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாகக் கூற இயலாது. பேராயக்கட்சிக்கும் ஒரே நாடு  ஒரே கோட்பாடு என்ற கொள்கைதான். எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ச.க.வை எதிர்ப்பதற்காகச் சில கருத்துகளைக் கூறினாலும் அடிப்படையில் அதற்கு இணையான செயல்பாடு கொண்டதுதான். 1967இற்கு முந்தைய அதன் நிலைப்பாடு குறித்துத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முன்பு குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.

 பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.

 இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில் கொள்ள வேண்டியன.”

குறள்நெறி (மலர்2 : இதழ்22): கார்த்திகை 16,1997 : 1.12.65

என்றார் அவர்.

இவற்றின் அடிப்படையில்தான் பா.ச.க. ஒரே தேர்தல் எனப் பிதற்றி வருகிறது.

ஒரே மொழி எனச் சமற்கிருதத் திணிப்பில்  அசையா உறுதியுடன் நிற்கிறது பா.ச.க. ஒரே கல்வி என்று சொல்லித்தான் பொதுநுழைவுத் தேர்வுகளைப் (நீட்டு)புகுத்திப் பல உயிர்களைக் காவு கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டும் வருகிறது பா.ச.க.

அடுத்து ஒரே வழிபாடு, ஒரே உடை என்பன போன்ற ஆயுதங்களைக் கைகளில் எடுக்கலாம்.

இதன் தொடர்ச்சியாகத் தன் உள்ளக்கிடக்கையான ஒரே மதம் என்பதைக் கைகளில் எடுக்கும் பா...

நாட்டு மக்களின் நலன்களில் கருத்து செலுத்த  வேண்டும் என்ற பா.ச.க.வின் எண்ணத்தைப் பாராட்டலாம். ஆனால் அதற்காக ஒத்த தன்மை என்ற போர்வையில் பாகுபாட்டை உருவாக்கும் முயற்சிகளை அது கைவிடவேண்டும். ஒரே தேர்தல் என்பது வாதுரைக்குரிய பொருளே அல்ல என்பதை உணர வேண்டும். அத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.(திருவள்ளுவர், திருக்குறள் 463)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல