ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

 

 திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது.

திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து படிக்கத் தொடங்கிய பொழுதுதான் இப்பிரிவும் ஒப்புயர்வற்ற இலக்கியச் சுவை உடையது என்பதை உணர்ந்தாராம். அதன் பின்னரே அவர் முழுமையும் மொழிபெயர்த்தார்.

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “திருக்குறள் இன்பத்துப்பால் பால்(Sex) பற்றிய நூலாயினும் ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை” எனச் சிறப்பித்துக் கூறுவார்.

தலைவன் தலைவி அல்லது கணவன் மனைவி இடையே உள்ள உள்ளன்பின் வெளிப்பாடாக இவை உள்ளனவே தவிர எதுவும் கொச்சையாக இல்லை.

திருக்குறளுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காமச்சூத்திரா என்னும் நூலைப் பார்த்துக் காமத்துப்பால் எழுதியதாக ஆரிய அன்பர் தவறாகக் கூறுவர். ஆனால், திருக்குறளின் காமத்துப்பால் போல் எந்த இலக்கியத்திலும் அன்பின் உறவு நயமாகக் கூறப்படவில்லை. எனவே, இவற்றை நாம்  இச் சிறு தொடரில், ஒவ்வொரு வரியில்  உணரலாம்.

 அதிகாரம் 109 தகை அணங்கு உறுத்தல்

 

  1. அணங்கோ? மயிலோ? பெண்ணோ? அறியாமல் நெஞ்சம் மயங்குகிறது. (குறள் 1081)
  2. படைகொண்டு தாக்குதல் போல் பார்க்கின்றாளே! (1082)
  3. முன்பு அறியா எமனைப் பெண்ணின் விழிகளால் அறிந்தேன். (1083)
  4. அழகாக இருந்தாலும் இவள் கண்கள் பார்த்தவர் உயிரை உண்ணுகிறதே!(1084)
  5. எமனோ? கண்ணோ? மானோ? பார்வை மூன்றையும் காட்டுகிறதே! (1085)
  6. புருவம் கண்ணை மறைத்திருந்தால், எனக்கேது நடுக்கம்?(1086)
  7. மார்புத் துகில் மதயானையின் முக மறைப்பு போன்றதே!(1087)
  8. பகைவர் அஞ்சும் என் வலிமை இவள் நெற்றி முன் தோற்றதே!(1088)
  9. மான்விழியும் நாணமும் உடைய இவ்வழகிக்கு அணிகலன் எதற்கு?(1089)
  10. உண்டால்தான் கள்ளால் மகிழ்ச்சி. காதலோ கண்டாலே மகிழ்ச்சி!(1090)

 

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

 

  1. காதல் நோய் தரும் பார்வையே மருந்தைத் தருகிறதே! (1091)
  2. கடைக்கண்பார்வையோ சிறிது! தரும் காதலோ பெரிது! (1092)
  3. பார்த்ததும் தலை தாழ்த்தினாள் அதுவே காதல் பயிருக்கு நீராகும். (1093)
  4. பார்த்தால், நிலம் பார்க்கிறாள். பார்க்காவிட்டால் பார்த்துப் புன்னகைக்கிறாள்.(1094)
  5. பார்க்காததுபோல் பார்த்துத் தலைசாய்த்து நகுவாள்.(1095)
  6. உதடு சுடுமொழி பேசும். உள்ளம் காதலை உணர்த்தும்.(1096)
  7. கடுஞ்சொல்லும் பகைப்பார்வையும் அன்பை உணர்த்தும் குறிப்பே! (1097)
  8. பரிவுப் பார்வையுடன் நகுவது அவளுக்கு அழகு தரும்.(1098)
  9. அயலார் போன்ற பார்வை காதலரிடமே உள்ளன.(1099)
  10. கண்ணும் கண்ணும் பேசுகையில் வாய்ச்சொல் எதற்கு?(1100)

 

அதிகாரம் 111.புணர்ச்சி மகிழ்தல்

 

 

  1. காணுதல், தீண்டுதல் என்ற வகையில் ஐம்புல நுகர்வு இன்பங்களும் இவளிடம் உள்ளன. (1101)
  2. இவள் தரும் காம நோய்க்கு இவளே மருந்து.(1102)
  3. திருமால் உலகம் தலைவி தரும் இன்பத்தினும் இனியதோ? (1103)
  4. விலகினால் சுடும், அணுகினால் குளிரும் தீயை எங்கே பெற்றாள்? (1104)
  5. விரும்பும் பொழுது கிடைக்கும் இன்பத்தைத் தலைவியின் தோள்கள் தருகின்றனவே! (1105)
  6. சேரும்பொழுதெல்லாம் உயிர் தழைக்கச்செய்யும் இவள் தோள்கள் அமிழ்தத்தால் ஆயின. (1106)
  7. தலைவியைத் தழுவும் இன்பம் உழைத்துப் பகிர்ந்து உண்ணும் இன்பம் போன்றது. (1107)
  8. காற்றிடைப் புகாத் தழுவல் இருவர்க்கும் இனிதே! (1108)
  9. ஊடல், உணர்தல், புணர்தல் இல்வாழ்வின் பயன்களாம். (1109)
  10. அறிதோறும் புலப்படும் அறியாமைபோல் கூடுந்தோறும் இன்பம் புலப்படுகிறது. (1110)

 

அதிகாரம் 112 நலம் புனைந்து உரைத்தல்

 

  1. அனிச்ச மலரே! நின்னினும் மெல்லியள் என் தலைவி. (1111)
  2. தலைவியின் கண் பூவைப்போன்றதால் பூக்களைக் கண்டுமயங்குகிறாயே நெஞ்சே! (1112)
  3. மூங்கில் தோளினளுக்குத் தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணம், வேல் கண். (1113)
  4. குவளைப்பூக்கள் இவள் கண்களுக்கு இணையில்லை என முகம் தாழ்த்தி நிலம் பார்க்கும். (1114)
  5. காம்பினைக் கிள்ளாமல் அனிச்சப்பூவைச் சூடினால் இவள் இடை ஒடியும்.(1115)
  6. தலைவியின் முகமா? நிலவா? என அறியாமல் விண்மீன்கள் கலங்குகின்றன.(1116)
  7. நிலவின் களங்கம் தலைவியின் முகத்திற்கு இல்லையே! (1117)
  8. நிலவே! தலைவி முகம்போல் ஒளிவீசினால் நீயும் விரும்பப்படுவாய்! (1118)
  9. தலைவியின் முகம்போல் இருக்க விரும்பினால் நிலவே, பலரறியத் தோன்றாதே! (1119)
  10. அனிச்சப் பூவும் அன்னச்சிறகும் தலைவியின் மென்பாதத்தை வருத்தும். (1120)

 

அதிகாரம் 113. காதல் சிறப்பு உரைத்தல்

 

  1. தலைவியின் வாயமுதம், பாலும் தேனும் கலந்த சுவையானது.(1121)
  2. உடலும் உயிரும் போன்றது தலைவிக்கும் எனக்கும் உள்ள உறவு.(1122)
  3. கண்ணின்பாவையே விலகி விடு! அங்கே தலைவி வருகிறாள்! (1123)
  4. உயிர் சேர்தலும் நீங்கலும் போன்றன தலைவியின் கூடலும் பிரிதலும். (1114)
  5. தலைவியை நான் மறந்ததில்லை! எனவே நினைத்ததும் இல்லை! (1115)
  6. நுட்பமான காதலர் கண்ணிலிருந்து நீங்கார் இமைத்தால் வருந்தார். (1126)
  7. கண் மை தீட்டும் பொழுது தலைவர் மறைவார் என்பதால் கண்ணுக்கு மை இடேன். (1127)
  8. நெஞ்சில் காதலர் உள்ளதால் சுடுபொருள் உண்ண மாட்டேன். (1128)
  9. இமைத்தால் மறைவார் என விழித்திருக்கிறேன். தலைவரைப் பழிக்கின்றனரே! (1129)
  10. உள்ளத்துள் உள்ள தலைவரைப் பிரிந்துள்ளதாக ஊரார் இகழ்கின்றனரே! (1130)

 

-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)