kamal02

vellam01

o.pannerselvam

இயற்கைப் பேரழிவு தொடர்பான கமலின் கருத்திற்கு

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்!

  நடிகர் கமல்ஃகாசன், இயற்கைப் பேரழிவு தொடர்பான கருத்தில் வரிப்பணங்கள் எங்கே செல்கின்றன எனக் கேட்டுத் தமிழக அரசைக் குறைகூறியிருந்தார். இதுகுறித்து நிதி – பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

 கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்டமக்களைக் காப்பாற்றி, மீட்பு, துயர்துடைப்பு, சீரமைப்பு எனும் முப்பரிமானத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ளத்துயரீட்டுப் பணிகளை முதலமைச்சர் செயலலிதா மேற்கொண்டுள்ளார்.

  இயற்கைப்பேரிடர்பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  இந்த இயல்புமீறிய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமல்ஃகாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிருவாகம் செயல் இழந்துவிட்டதாகவும், துயரீட்டு நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், துயரீட்டுப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான தனது விதண்டவாதக் கருத்துகளை இணையத்தளம் ஒன்றுக்குப் பேட்டியாக அளித்துள்ளார்.

  எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஃகாசன், இங்கும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கிப் பிதற்றி இருக்கிறார்.

  கமல்ஃகாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கைப் பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்ப்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதைச் சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, துயர்துடைப்பு, சீரமைப்பு எனப் படிப்படியாகத் துயரீட்டு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும்.

  போர்க்கால அடிப்படையில் துயரீட்டுப் பணிகளை அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசு நிருவாகம் செயலற்றுப் போனதாக கமல்ஃகாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் தன்நலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஃகாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது.

  மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமல்ஃகாசன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளைத் தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும். தமிழக மக்களின் வரிப் பணம்  ஓர் உரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வோர் உரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர்.

  பெருநிறுவன(கார்ப்பரேட்டு)த் திட்டத்திற்கு 4000 கோடி உரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்தப் பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமல்ஃகாசன் அறிவுசீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்!  அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது  அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை,  திரைப்படத்துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தைத் தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டா என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கமல்ஃகாசன் தனது ஒட்டுமொத்தச் சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில்  தன்ஆதாயத்திற்காகத், தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமல்ஃகாசன். அப்போது,  அந்தச் சிக்கலைத் தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

  மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் தமிழக அரசால் தவறாகக் கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் தன்னாதாயம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஃகாசன் விலைபோய்விட்டாரோ என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

  வெள்ளத் துயரீட்டு நிதியை வழங்குமாறு தனியாருக்கு அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் துயரீட்டு உதவி வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்துயரீட்டுநிதிக்குத் தாங்களாகவே முன்வந்து நிதியுதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் ஏற்படும்போது பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப்பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமல்ஃகாசன் அறியமாட்டாரா? எடுத்துக்காட்டாகத் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்சுன் சென்னை வெள்ளத் துயரீட்டுக்கு உரூ.25 இலட்சம் வழங்குவதாகத் தெரிவித்து, தனது சுட்டுரை(துவிட்டர்) தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையைத் தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

  தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய்த் திகழும் முதல்வர் செயலலிதாவின் அரசு, கமல்ஃகாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை.

  கமல்ஃகாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரி, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசு மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.