கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]
கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.
- தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா போட்டியிலிருந்தார். அவர் தலைவராயிருந்தால் பா.ச.க. இருக்கும் இடம் தெரியாமல் எப்பொழுதோ போய் இருக்கும். இப்பொழுதும் எப்படியும் அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். பா.ச.க. தலைமை மரு.தமிழிசையை அமைச்சராக்குவதே அதற்கு நல்லது.
- நாங்குநேரிக்கு ம.தி.மு.க.: இடைத்தேர்தல் வந்தால், அத் தொகுதியில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிக்கே அந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும். இதுவே முறையாகும். ஆனால் இதற்கு முன்னர்த் தி.மு.க. இதனை மீறியுள்ளது. இப்பொழுதும் பொதுநலன் கருதி மீறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.விற்கு ஒற்றைத் தொகுதி (+மாநிலங்களவை) ஒதுக்கியிருந்தும் அவரும் அக்கட்சியினரும் கட்டுக்கோப்பாகத் தி.மு.க.கூட்டணிக்காக உழைத்தனர். தமிழகச் சட்டமன்றத்தில் ம.தி.மு.க. குரல் ஒலிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் விலகியதால் ஒழிவிடமான நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியை ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும். இதனைப் பேராயக்(காங்.)கட்சியும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3.மாநிலங்களவைக்குச் சுப.வீ., வேல்முருகன் அனுப்பப்படவேண்டும்:
வழக்குரைஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் முகநூலிலும் பகிரியிலும் குறிப்பிட்டவாறு தமிழ்நாட்டு நலன் கருதி தமிழக நலப் போராளிகளான பேரா.சுப.வீரபாண்டியன், வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல் முருகன் ஆகிய இருவரையும் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். கூட்டணித் தோழர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
4.தமிழ்நாட்டிற்குப் பா.ச.க. அரசு உதவாதெனில் அதற்குத்தான் இழிவு:
நாடாளுமன்றத்திற்குப் பா.ச.க.ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறும் வாய்ப்பைத் தமிழக மக்கள் அளிக்கவில்லை. ஓரிடம் நீங்கலான அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணியால் பயனில்லை எனப் பேசுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் பொழுதுதான் கட்சிச்சார்பு. வென்ற பின்னரும் அரசு அமைத்த பின்னரும் கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவருக்கும் உரியவர்களே. எனவே, பா.ச.க.அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் கட்சிச்சார்பில் அணுகுமுறையை மேற்கொண்டால் அதற்குத்தான் இழுக்கு. எனவே, பா.ச.க. நடுவுநிலையுடன் நடந்து மக்கள் நலனில் – திழக மக்கள் நலனில் கருத்து செலுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் பொறுப்பு கிடைக்வில்லை என்று கவலைப்படாமல் சோர்ந்து போகாமல் தமிழக நலன்களுக்காகக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும்! தமிழ் மொழியின் காவலர்களாக இருக்க வேண்டும்!
- காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை: இராகுல் காந்தி தன் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், கட்சியின் பிற பொறுப்பாளர்களும் தலைவர்களும் அவரே தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். அடுத்தவர்களின் அழுத்தத்திற்கு அவர் இணங்கினால் இதுவரை நாடகமாடியதான அவப்பெயர்தான் வரும். அதேநேரம் அக்கட்சிக்கும் அவர் தலைவரவாக நீடிப்பது நல்லதுதான். எனவே, இரண்டிற்கும் இணக்கமாக இராகுல்(காந்தி)யும் இணைந்த கூட்டுத்தலைமையைப் பேராயக்(காங்.)கட்சிக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் காரமாக இரு தரப்பார் கருத்திற்கும் மதிப்பளித்ததாக இருக்கும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply