கருத்துக் கதிர்கள் 09-11 

[09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]

09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை.

 பா.ச.க.வின் கடந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தமிழர்களுக்கு உரிய முதன்மை தரவில்லை. இப்பொழுது அடியோடு பங்களிப்பு தரவில்லை. பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் இருவர் அமைச்சரவையில் இருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகச் சிறிதும் கருத இயலாது.  இன்றைய நிதியமைச்சர் முன்பு பதவி உறுமொழியைக் கன்னடத்தில் எடுத்துவிட்டுத் தன்னைக் கன்னடப் பெண்ணாகத் தெரிவித்த அவர் மொழி யுணர்வைப் பாராட்ட வேண்டும். எனினும் அவரைத் தமிழ்நாட்டின் பா.ச.க.வில் கருத்து செலுத்தக் கூடியவராகக் கருதலாமே தவிர, தமிழ்நாட்டு நலனில் கருத்து செலுத்த வாய்ப்புள்ளவராகக் கருத முடியாது. வெளியுறவு அமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனில் கருத்து செலுத்த போதிய நேரம் ஒதுக்க வாய்ப்புள்ளவராகக் கருத இயலாது. தமிழ்நாட்டு மக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்குத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எனவே, பா.ச.க.அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பங்களிக்க வேண்டுகிறோம்.

10.  இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை.

பா.ச.க. கூட்டணி அமைத்துப்போட்டியிட்டாலும் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, கூட்டணி அமைச்சரவைதான் அமைக்க வேண்டும் என்ற தேவையில்லை. எனினும் கூட்டணி அறத்தை மதித்தும் வருங்காலக் கூட்டணியின் நிலைப்புத் தன்மையைக் கருதியும் கூட்டணிக் கட்சியினரையும் அமைச்சரவையில் சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கும் பொழுது ஒரு கட்சிக்கு ஒரே ஓர் உறுப்பினர் என்ற அளவுகோலை வைத்துள்ளது. இதனை ஏற்காததால் ஐக்கிய சனதா தளம் அமைச்சரவையில் சேரவில்லை. தமிழ்நாட்டில் பா.ச.க.வின்  பதவி ஒதுக்கீட்டுக் கொள்கைக்கிணங்க ஓர் அமைச்சர் பதவியை மட்டும் அ.தி.மு.விற்குத் தர முன் வந்ததாகச் செய்திகள் வந்தன. மாநிலங்களவையில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் பொழுது இளையவருக்குக் கொடுப்பதா என எதிர்ப்பு வந்ததால் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கின்றனர்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் இரவீந்திரநாத்துகுமார் பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒரே உறுப்பினராவார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. யாரும் அமைச்சராகப் பிறப்தில்லை. முதன் முதலில் அமைச்சர் பொறுப்பேற்ற பின்பு பட்டறிவு பெற்றுச் சிறப்பாகச் செயல் படுவோர் பலராவர்.

தோல் இருக்கப் பழம் விழுங்கிகளான மூத்தவர்கள் இருக்கும் பொழுது இளையவருக்குக் கொடுப்பதில் தப்பில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற வழி  பிற அரசியல்வாதிகளும் கடைப்பிடிக்கும் வழிதான். எனினும் அமைச்சர் ஆனால், மூத்தவர்கள் கண்கொத்திப் பாம்பாக இருந்து தவறு நேராதிருக்க உதவவும் வாய்ப்புள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகச்  செயல்பட்டுத் தமிழகநலன்களைப் புறக்கணிக்கும் பா.ச.க.  அ.தி.மு.க.விற்கு இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்குவதே நல்லது.

11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே!

 அ.தி.மு.க.விற்கு வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என அ.தி.மு.க.வின் மதுரை வடக்குச.ம.உ. இராசன் செல்லப்பா குரல் கொடுத்துள்ளார். இப்பொழுது அ.தி.மு.க.வில் இருப்பது கூட்டுத் தலைமை அல்ல.

தலைவர், செயலர் இணைந்து ஒப்பமிடுவது முறைதான். ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒப்பமிட வேண்டிய தேவையில்லை. இணைந்து கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். சரிதான். ஆனால், ஒருங்கிணைப்பாளர் தனித்தே அறிக்கைகள் முதலானவற்றில் ஒப்பமிடுவதே முறையாகும். அரசு நிகழ்ச்சிகளிலும் இணந்தே இருப்பதுபோன்ற தோற்றம் காட்ட முயல்வதும் தேவையில்லை. ஒருங்கிணைப்பாளரே ஒற்றைத் தலைமையாகச் செயல்படலாம். அல்லது கூட்டுத் தலைமை வேண்டுமென்றால்  தலைமைக் குழு எனக் குறிப்பிட்டு இருவரும் இணைந்து செயல்படலாம். அல்லது இராசன் செல்லப்பா வேண்டியவாறு வலுவான ஒற்றைத் தலைமையை ஏற்படுத்திக் கட்சியை வலுவாக்கலாம். அதே நேரம் இம்முயற்சியால் கட்சியில் மேலும் பிளவு வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்