கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துக் கதிர் 1.20
அவரும் தவறு! இவரும் தவறு!
மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தலைவர், அமைச்சர், துணை முதல்வர், எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இப்பொழுதும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையிலும் மக்கள் சார்பாளராகச் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியினரிடமும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு முடிவெடுத்துச் செயல்படுத்தலாம். ஆனால், மக்களின் குறைகளை எதிர்க்கட்சியினர் மூலமும் அறிந்து குறைகளைவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் என்ன தவறு? மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே அரசியல் நடத்தும் போக்கில் இருந்து மாறுபட்டு எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும்போக்கைப் பல நேரங்களில் வெளியிட்டுள்ளார். அவ்வாறிருக்க மக்கள் நலன் கருதி, எதிர்க்கட்சியினரைக் கலந்து பேசமறுப்பது தவறுதான்.
ஆட்சிப்பொறுப்பில் உள்ள முதல்வருக்கு அதிகாரிகளையும் தொடர்புடைய வல்லுநர்களையும் சந்தித்துப் பேசுவது கடமைதான். அதைப்பொதுக்கூட்டம் போல் கருதி எதிர்ப்பதும் எதிர்த்து வீணுரை பேசுவதும் தவறு. முதல்வர் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டாவிட்டாலும் எதிர்க்கட்சித்தலைவர் தம் தோழமைக்கட்சித் தலைவர்களைக் கூட்டினார். ஆனால் அதன் பயன் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு அரசைக் கேள்வி கேட்பதைக் குறைத்து விட்டு மக்கள் அரசைக் கேள்விகேட்கும் வண்ணம் மாற்ற வேண்டும். மகுடைத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் மீட்கவும் நிறைவான நல்வாழ்விற்கும் ஒல்லும் வகை தொண்டாற்றிட வேண்டும்.
மகுடைத்தொற்றுக்கு(கொரானாவிற்கு) எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என நாளும் பொழுதும் சொல்லும் அரசு தானே முன்னெடுத்துக்காட்டாக இருக்க வேண்டாவா? எனவே, பிறரை – அதுவும் ஆட்சிப்பட்டறிவு உள்ள எதிர்க்கட்சித் தலைவரையும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் தலைவர்களையும் – சந்திப்பதை இழுக்காக எண்ணாமல் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் அவர்களைக் கலந்து பேசி இணைந்து பணியாற்றினால் அவருக்குப் பெருமைதான் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பிறரின் இடித்துரைகள் கசப்பாக, ஏற்றகத்தக்கனவாக இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 389)
இலக்குவனார் திருவள்ளுவன்
ஐயா! தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என்பது என்னைப் போன்றவர்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாளை முதல் ஊரடங்கு. எனவே யாரும் வெளியில் வராதீர்கள் என்று அறிவித்து விட்டு, அடுத்த வரியிலேயே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்து தேர்வை எழுதி விட்டுச் செல்லுங்கள் என்று சொன்ன உலகப் பெருமேதைகளின் ஆட்சி இது. இவர்களுக்குப் போய் நீங்கள் இப்படித் திருக்குறளிலிருந்தெல்லாம் எடுத்துக்காட்டுச் சொல்லி அறிவுறுத்துவது செவிடன் காதிலில்லை செத்தவன் காதில் ஊதும் சங்குக்கு ஒப்பாகும்.
இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்கரீதியில் செயல் படாது மெத்தனமாக இருப்பது ஏன் எனப் புரியவில்லை.