lawyer01

kalaicho,_thelivoam01

வழக்குரைஞரும் தொடுநரும்

 

பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் (பட்டினப்பாலை :169 – 71)

பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையைடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும், என உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர்.

எனவே, உறழ்(3) என்பது வாதிடுதல் என்னும் பொருளில் வந்துள்ளதை உணரலாம். இப்பொழுது நாம் வழக்குரைஞர் என்னும் சொல்லையே பொதுவான சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறோம்.

ஆட்சியியல், மனைஅறிவியல், சட்டவியல், ஆகியவற்றில் advocate என்பதற்கு வழக்குரைஞர் என்றும் ஆட்சியியல், வங்கியியல், வரலாற்றியல், சட்டவியல்ஆகியவற்றில் lawyer என்பதற்கு வழக்குரைஞர் என்றும் ஆட்சியியலிலேயே attorney என்பதற்கும் வழக்குரைஞர் என்றும் ஆட்சியியலில் prosecutor என்பதற்குக் குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் என்றும் வழக்குதொடுப்பவர் என்றும் இதே சொல்லிற்குச் சட்டவியலில் அரசுதரப்புவழக்குரைஞர் என்றும் கையாளப்படுகின்றன. ஆட்சியியலில் pleader என்பதற்கு முறையீட்டு வழக்குரைஞர் என்றும் சட்டவியலில் pleader என்பதற்கு வாதுரைஞர் என்றும் பயன்படுத்தப்பெறுகின்றன.

வங்கியியலில் attorney என்பதற்குப் பகரஅதிகாரம் என்றும் சொத்துமேலுரிமை என்றும் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு நாடுகளில் வழக்குரைஞர் என்பதைக் குறிக்கும் சொற்களை இந்தியாவில் வெவ்வேறு பணிநிலைகளில் குறிப்பதால் பொருட்குழப்பம் தோன்றுகின்றது. குறிப்பிட்ட ஒரே சொல்லையே அரசு வழக்குரைஞர், முதனிலை வழக்குரைஞர், தலைமை வழக்குரைஞர் போன்ற எல்லா நிலைகளிலும நாம் கையாள வேண்டும். தமிழில் தெளிவாக இருந்து அதனையே ஆங்கிலப்படுத்த வேண்டும் என்ற நிலையைக் கொணர வேண்டும்.

அட்டர்னி – attorney என்றால் ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்பிற்குப் பகரமாகப் பேசுநர்-பகராள் எனறுதான் பொருள். ஆனால் நீதிமன்றத்தில் இவ்வாறு பகராளாக வாதிடுபவரை முதன்மைப்படுத்தி நாம் வழக்குரைஞர் என்கிறோம்.

 பகர்(2), பகர்ந்து(5), பகர்ந்தேம்(1), பகர்நர்(5), பகர்பு(1), பகர்வர்(1), பகர்வு(1), பகர(5), பகரும்(7) எனச் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பகர் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் விலை பகர்தலை அடிஒற்றியே அமைந்துள்ளன.

விலை கூறுதலைக் குறிக்கும் இச்சொல் ஒருவரின் விளைபொருளை மற்றொருவர் அங்காடியில் விலை சொல்லி விற்கும் முறை வந்ததால் ஒருவருக்கு மாற்றாக மற்றொருவர் உரைப்பதைக் குறிப்பதாக மாறி உள்ளது. எனவே விலை சொல்லுதல் என்னும் பொருளுடைய பகரம் என்னும் சொல் ஒருவருக்கு மாற்றாக மற்றொருவர் உரைத்தல் என்னும் பொருளில் விரிவடைந்துள்ளது.

பழம்ஊழ்த்துப் பயம்பகர்வுஅறியா (புறநானூறு381 8/9)

என்ற அடியில் பழம் கனிந்து விலையின் பொருட்டு அல்லது வேறுபயன் பொருட்டு யாவராலும் கொள்ளப்படாததைக் குறிக்கின்றது.

ஆறறிஅந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து (கலித்தொகை1.1.)

என்னும் இடத்தில் அறத்தாறு(அறவழி) அறிந்த அறவோர்க்கு அரிய மறைபொருள்கள் பலவற்றையும் தெரிவித்து என்னும் பொருள் வருகிறது. (அறத்தாறு, நல் லாறு,என்பன போன்று அறவழியைப் பின்பற்றுவோரே-அறத்தாறு அறிந்தவர்களே-ஆறு அறிந்த அறவோராகிய அந்தணர். சாதி அடிப்படையில் தரும் விளக்கங்கள் யாவும் தவறேயாகும்.)

இங்கெல்லாம் விலை கூறுதல் என்னும் நிலைமாறி உள்ளதை உணரலாம். எனவே, மாற்றாக உரைத்தல் என்னும் பொருளில் விரிவடைந்த சங்கச்சொல்லான பகரம் என்பதன் அடிப்படையில் ஒருவருக்கு மாற்றாகச் செயல்படும் உரிமை அளிக்கப்பட்டவரைப் பகரஆள்-பகராள்எனலாம்.

பவர்ஆப்அட்டர்னிpower of attorney  என்னும் பொழுது பகராளுக்கு உரிமை தருவதைக் குறிக்கின்றது. எனவே பகரஉரிமை ஆணை எனலாம்.

பகரஉரிமைஆணை > பகராணை- power of attorney

வாதி(1) என்னும் சொல்லுடன் இணைத்துப் பகரவாதி என்றும் வழக்குரைஞரைச் சொல்லலாம்.

பகரவாதி- attorney

இவ்வாறில்லாமல் பொருள் மாறுபாட்டை விளக்கும் கலைச்சொற்களைப் பயன்படுத்தலே நன்று. plaint என்பதற்கு ஆட்சியியலில் வழக்குரை, வழக்காடல், எடுத்துரைப்புவழக்குரை, வழக்காடல், எடுத்துரைப்பு என்றும் சட்டவியலில் வாதிடல், வாதுரை, வாதம் என்றும் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

நோட்டரிபப்ளிக்(கு)/ notary public  என்பதற்குச் சட்டநிருவாக அருஞ்சொல் திரட்டு சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞர் என்கிறது. ஆட்சியியலிலும் வங்கியியலிலும் சான்றுறுதி அலுவலர் என்றும் மனையறிவியலில் பதிவுரிமை அதிகாரி என்றும் சட்டவியலில் சான்றுறுதி அதிகாரி என்றும் பயன்படுத்துகின்றனர்.

‘பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்’

என்னும் அகநானூற்று (௭௭.௮) அடிக்கு உரை எழுதுவோர் இவர்களை ஆவணக்களரி என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்கள்தாம் நோட்டரிபப்ளிக்கு/notary public எனப்படுவோர். எனவே, இச்சொல்லையே நாம் பயன்படுத்தலாம். எனினும் சுருக்கம் கருதி, ஆவணச்சான்றர், ஆவணர் என உரைக்கலாம்.

வழக்குரைஞர்- lawyer

வாதுரைஞர்- pleader

வழக்குத் தொடுநர்/வழக்காளர்- prosecutor

ஆவண மாக்கள் / ஆவணச்சான்றர் /ஆவணர்- notary public

lawyer_symbol01

  – இலக்குவனார் திருவள்ளுவன்