களப்பிரர் காலத்தில் புது வகைப் பாக்கள் – மயிலை சீனி. வேங்கடசாமி
களப்பிரர் காலத்தில் புது வகைப் பாக்கள்
களப்பிரர் காலத்துக்கு முன்பு கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் தமிழில் நான்கு வகைப் பாக்களே இருந்தன. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை.
ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே
என்று தொல்காப்பியம் கூறுகிறது (தொல்காப்பியம், செய்யுளியல் 101).
கடைச்சங்க இறுதிக்காலம் ஏறத்தாழ கி.பி.250 என்று கொள்ளலாம். அதற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன சமயமும் பௌத்த மதமும் தமிழகத்தில் பரவலாகவும் விரைவாகவும் வளர்ந்தன. அவர்களுடைய ‘தெய்வ பாடை’ பிராகிருத மொழி. சைன சமயத்தாரின் ‘தெய்வ பாடை’ சூரசேனி என்னும் பிராகிருதம். பௌத்த மதத்தாரின் ‘தெய்வ பாடை’ பாலி என்னும் பிராகிருதம். பிராகிருத மொழிகள், சமக்கிருதம் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னமே இந்தியாவில் வழங்கி வந்தன. சமண சமய நூல்களும் பௌத்த மத நூல்களும் முறையே சூரசேனி, பாலி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. ஆகவே, அந்த மதத்தவர் தங்கள் மத நூல்களைச் சூரசேனியிலும் பாலியிலும் ஓதினார்கள். அந்த மதங்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகப் பரவின.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பிராகிருத மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ப் பா வகையில் புதிய செய்யுட்கள் தோன்றத் தொடங்கின. பிராகிருத மொழிகளோடு சமற்கிருத மொழியும் அக்காலத்தில் அந்த மதத்தவரால் பயிலப்பட்டது. இந்த மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ச் செய்யுள் வகையில் புதிய பாவினங்களை உண்டாக்கினார்கள். புதியனவாகத் தோன்றிய பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தம் எனப் பெயர் பெற்றன.
மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு
Leave a Reply