காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா
(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – தொடர்ச்சி)
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4
காக்கைக்கு வழிகாட்டல்
முதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே! நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே! மறையவரே! நானும் ஒரு தமிழனென்று தேனாகப்பேசிப் பெரும் பதவியைப் பெற்றவரே! பதவி வந்தபிறகு ஆசை அறிவை மறைக்க, சாதியைப் போற்றி வளர்த்து, பழந்தமிழைக் குட்டிச் சுவராக்கி, கூறுகூறாக வெட்டி, வெட்டவெளியில் வீசிய வீரரே! உம்முடைய உள்ளத்தைத் தெளிவாக அறிந்துகொண்டோம். உம்மவர்கள் நன்கு வாழ நினைத்துச் செயலாற்றுவீராயினும் எம்மவர்கள் வாழவும் வழி சொல்லுங்கள்’ என்று கேள். பூணூலால் (அதை அணிந்தவர்களால் – ஆகுபெயர்) உலகம் நொடியில் அழியுமென்று அறிவு நலம்படைத்த முன்னோர்கள் சொல்லியதன் உண்மைப் பொருளை இன்று நன்கு அறிந்துகொண்டோம். அறிவிலே மயக்கம்கொண்டாய். அதனாலே, இந்தியெனும் தீய குணங்கள் நிறைந்த பெண்ணிடம் இன்பத்தைத் துய்க்க எண்ணினாய். செந்தமிழ்த்தாயின் திருவுடலுக்குத் தந்திரத்தால் தீங்கிழைத்தாய். இனிமேலாவது, தமிழர்தம் பகையைத் தேடாது இருக்க வேண்டுமென்றால், உடனடியாகச் சிறையில் இருப்பவர்களை நீ விடுதலை செய்வாயாக. அவர்களுடைய பகைக்கு அஞ்சி, ஓடோடிச்சென்று, நீ செய்த தவறுகளுக்கும் கசப்பான உன் பேச்சுகளுக்கும் அவர்களிடத்தே மும்மடங்கு மன்னிப்புக் கேட்பாயாக! அவ்வாறு நீ உன்மீதுள்ள பழியை நீக்கிக்கொண்ட பிறகுதான், இந்த உலகம் உன்னைப் போற்றும். நீயும் வசை நீங்கி இசை பரப்பி முதலமைச்சராய் வாழ்வாயாக!’ என வாழ்த்துவாயாக என்று காக்கையைப் புலவர் அனுப்பிவைக்கிறார் (கண்ணிகள் 98-117). இதற்குச் சான்றாகப் பின்வரும் கண்ணிகள் சிலவற்றைக் காட்டலாம்.
நூலால் உலகம் நொடியின் அழியுமென
மேலோர் உரைத்த விதியறிவோம் – மால்கொண்டே
இந்தியெனுந் தீயாள் இன்பத் தினைவிழைந்து
செந்தமிழ்த் தாயின் திருவுடற்குத் – தந்திரத்தால்
தீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது
தேங்கா தவரைச் சிறையகற்றி – ஓங்குபெரும்
அச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே
மெச்சு மவர்முன் விரைந்தடைந்து – கைச்ச
மொழியுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி
அழியா வுளத்தன்பு பெற்றுப் – பழிபோக்கி (111-115)
போரில் சந்திப்போம்
‘காக்கையே! இராசகோபாலனிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி மன்னிப்புக் கேட்டுப் பிழைத்துக்கொள்ளச் சொல். இல்லையேல், உள்ளத்தால் உயர்ந்த எம் தமிழர்படை, உண்மைவழியிலும் நேர்மைமுறையிலும் போர்புரிய, விரைவாக இசைவு தருவாயாக (கைகுலுக்குவாயாக!) எனக்கேள். இதை உன்னிடம் தெரிவித்துவர, வெண்கோழி என்னை அனுப்பி வைத்தது என்று சொல். ‘கடுமைநிறைந்த வீரப்போரில் சந்திப்போம்’ என்பதை உறுதியாகச் சொல்லி, கைகுலுக்கிவிட்டுத் திரும்புவாய்’என்று காக்கையைத் தூதாக அனுப்பிவைத்தார் புலவர்.
வசைநீங்கி யாரும் வழுத்து மரபால்
இசைபரப்பி வாழுமின் இன்றேல் – நசையினால்
உள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற
ஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச் – செல்லவே
வெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து
வண்போர்க்குக் கைவழங்கி வா (117-119)
இவ்வாறு, இந்திமொழியைக் கட்டாயமாக்கியதோடு அதை எதிர்த்துப் போராடியவர்களையும் சிறையிலடைத்த சிறுமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்துத் தூது நூல் பாடியுள்ளார் வெள்ளைவாரணனார். வழக்கமாக, அகப்பொருள் தூது நூல்களில் தலைவன் கழுத்தில் அணிந்த மாலையை வாங்கி வா என்பதாகத் தூது நூலின் இறுதி அமைக்கப்படும். இது புதுமையாய்ப் பாடப்பட்ட புறத்தூதாகையினால் முடிவையும் புதுமையாகக் ‘கைகொடுத்துக் குலுக்கிவிட்டு வா’ என்று பேராசிரியர் வெள்ளைவாரணனார் அமைத்துள்ளார்.
முடிவுரை
காலத்தின் அருமைகருதி புதுமையாக இத்தூது நூல் படைக்கப்பட்டுள்ளது. இராசகோபாலனார் தமது மதி நுட்பத்தால், சேலம் நகராட்சித் தலைவராயிருந்தபோது, இந்தியாவிலேயே முதன்முதலாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்ய விற்பனை வரியை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்தார். ஆயினும், முதலமைச்சரானபோது இந்தித் திணிப்பைக் கொண்டுவந்ததால் கடுமையான எதிர்ப்பை ஏற்றார். பிற்காலத்தில் உண்மையை உணர்ந்தபிறகு, அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அவரளவிற்;குப் பக்குவமும் முதிர்ச்சியும் அற்றவர்களே, தற்போது அரசாள்வதால், காக்கை கடைசியாகச் சொன்ன சில அடிகளின் பொருளை மனத்தில் நிறுத்துவோம்.
22 மொழிகளைத் தேசிய மொழிகளாகக் கொண்ட நமது நாட்டில், இந்தியை மட்டும் பாராளுமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதே அடாவடித்தனமாகும். இந்தநிலையில் ஐ.நா.சபையில் இந்தியை முன்மொழிவது தான்தோன்றித்தனமாகும். இவற்றையெல்லாம் கண்டு கேட்டும் ஆடாய் மாடாய் அம்மியாய் அசைவற்றிருத்தல் அழகோ என்று எண்ணுவோம்.
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.),
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,
தெப்பக்குளம், மதுரை-09.
மின்னஞ்சல் : lakshmibharathiphd@gmail.com
சான்றெண் குறிப்பு
- திருச்சிராப்பள்ளியின் உறையூரிலிருந்து வெளியான நகரதூதுன் எனும் இதழாசிரியர் ரெ.திருமலைசாமி தலைமையில், 100பேர்களுடன் 01.08.1938இல் புறப்பட்டு 409கல் தொலைவு நடந்து 11.09.1938 அன்று சென்னைக்கு வந்தது. மா.இளஞ்செழியன், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சிந்தனை வெளியீடு, 2012, பக்.94-96
Leave a Reply