காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 – கி.சிவா
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல்
1/4
முன்னுரை
தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது நூல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு அணிசேர்த்தனர். இவ்வகையில், இந்தியெதிர்ப்புப் போரின்போது காக்கையைத் தூதாக விடுத்துத் தமிழில் யாக்கப்பட்டுள்ள ‘வெண்கோழியுய்த்த காக்கைவிடு தூது’ எனும் நூல் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
பாரதிய சனதா கட்சியினர் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகியுள்ளன. இச்சூழலில் சமற்கிருதமே உயர்ந்ததென்றும் அம்மொழியில் எழுதப்பெற்று, வருணாசிரமத்திற்குப் பாதுகாவலாயிருக்கும் (மகாபாரதம் எழுத்து வடிவில் ஆக்கப்பட்ட காலத்தில் இல்லாது பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட) பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றும் வெளிவுறவுத்துறை அமைச்சர் சுசுமாசுவராசு கூறினார். மேலுமவர், ஐ.நா.சபையில் இந்தியாவிற்கான மொழியாக இந்தியை முன்மொழிவோம் என்கிறார். ஐ.நா.வில் இந்தியைக் கொண்டுவர 129 உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது. இந்திமொழியில்தான் அனைத்து மாநில அலுவலகக் கடிதங்கள் இருக்க வேண்டுமென்று நரேந்திரர்(மோடி) தலைமையிலான அரசு ஆணையிட்டுப் பிறகு திரும்பப்பெற்றது. 32 ஆண்டுகளுக்குப்பிறகு ‘உலக இந்திமொழி’ மாநாட்டைப் போபாலில் தொடங்கிவைத்தார் (09.09.2015-11.09.2015) நரேந்திரர்(மோடி). “வேலை வாய்ப்பிற்கேற்ற ஒரேமொழி இந்திதான்” என்று மாநாட்டுக் குறிக்கோள் வாசகம் கட்டமைக்கப்பட்டது. “இந்தியை மறந்தால் நாட்டுக்குத்தான் இழப்பு” என்று 10.09.2015ஆம் நாள் மாநாட்டில் நரேந்திரர்(மோடி) பேசியுள்ளார். இந்திதான் இந்நாட்டிலுள்ள ஒரே மொழியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஓகத்தில்(யோகா) உள்ள சூரிய வணக்கத்தை ஏற்காதவர்களும் இராமனை ஏற்காதவர்களும் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சியை உண்பவர்களின்மீது காழ்ப்புணர்ச்சியை- இனவெறியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது நடுவணரசு. உத்திரபிரதேசத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்றும் தின்றார் என்றும் கூறி, இசுலாமிய முதியவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் காட்சி ஊடகங்களில் வெளியாயின. யார் எதைத் தின்ன வேண்டுமென்று முடிவுசெய்யும் அதிகாரம் யாருக்குமில்லை.
மத்திய அரசால், சமற்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதில் தவறில்லை என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த கப்பல்-போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருட்டிணன். பன்மைப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில், சமற்கிருதம் மற்றும் இந்தியைக் காட்டிலும் பழைமையும் இளமையும் கொண்டிருக்கின்ற மொழிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் வழக்கில் இல்லாத, வளர்ச்சியென்பதே இல்லாதுபோன, சமற்கிருதத்திற்குத் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது நடுவணரசு. இந்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறது; இவ்வாறு செய்வதன் மூலம் சமற்கிருதத்தை மீட்டெழச்செய்து மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் பணியைத் துணிந்து செயல்படுத்தி வருகிறது.
இவையெல்லாம் போதாவென்று, தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் அதற்கு எதிராகவும் ஆங்கிலவழிக் கல்வியை, ஆளுகின்ற அரசே நடத்துகிறது. இவ்வாறெல்லாம் தமிழுக்கும் அதன் பண்பாட்டிற்கும் எதிராகப் பன்முனைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்ற இவ்வேளையில், இந்த நூல்குறித்துக் கட்டுரை வரைவதும் பரப்புவதும் பேசுவதும் தமிழர்தம் கடமையாகிறது.
நூலமைப்பும் வரலாறும்
1937-1940 காலப்பகுதியில் சென்னை மாகாண முதலமைச்சராக விருந்த ச.இராசகோபாலாச்சாரியார் அவர்களிடத்தில் காக்கையைத் தூது அனுப்புவதாக ‘வெண்கோழியுய்த்த காக்கை விடு தூது’ எனும் பெயரில், பாந்தளூர் வெண்கோழியார் (க.வெள்ளைவாரணன்) என்பவரால் 1939ஆம் ஆண்டில் இந்நூல் இயற்றப்பட்டது1. இந்நூல் தஞ்சையிலுள்ள கரந்தையைச் சார்ந்த கூட்டுறவு மின்னியக்கப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தூதுநூல் இயற்றுவதற்கென்று இலக்கணிகளால் சொல்லப்பட்ட கலிவெண்பாவினால் 119 கண்ணிகளில் இது யாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்குச் சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள சிவகாமி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு (1987) பயன்கொள்ளப்பெறுகின்றது. இந்தி மொழியைத் தமிழகப்பள்ளிகளில் கொண்டுவந்த இராசகோபாலாச்சாரியாரின் செயலைப் பழிக்கும்வகையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. “காலமாற்றத்திற்கேற்பத் தூதிலக்கியத்தின் பொருண்மை, அமைப்பு ஆகியன இதில் மாற்றம் பெற்றுள்ளன. அகப்பொருள் முதலானவற்றைவிடுத்து, மொழியுரிமையைக் காத்தல், பிறமொழித் திணிப்பை எதிர்த்தல் முதலிய மொழிக்காப்பு வேட்கையோடு இந்நூல் இயற்றப்பெற்றிருப்பது சிறப்பாகும்” (டாக்டர் அ.ஆனந்த நடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1997, ப.125). அவ்வகையில், “தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட அரசியலாரைப் பாட்டுடைத் தலைவாராகக்கொண்டு காக்கையைத் தூது விடுத்துப்பாடியதாக வரும் இந்நூல், தலைப்பு வகையாலும் பொருண்மை நிலையாலும் புதுமையுடையதாக விளங்குகின்றது” (மேலது, ப.174). இந்நூலில், காக்கையின் சிறப்புகள், தமிழ் மொழியின் சிறப்புகள், பாட்டுடைத்தலைவரின் அரசியல் வரலாறு, ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும், இல்லையேல் உண்மைவழிப்போரியற்ற நேரிடும் என்பதைத் ‘தூது சொல்லிவா’ எனும் தூதுரைக்க வேண்டிய செய்தி ஆகியன நிரல்பட சொல்லப்பட்டுள்ளன.
“பாரதநாடு வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறாத நிலையில் அளிக்கப்பெற்ற தேர்தல் உரிமையினையேற்றுத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரசு கட்சி, சென்னை மாநில ஆட்சியுரிமையைக் கைப்பற்றியது. மூதறிஞர் இராசகோபால் (ஆச்சாரியார்) முதலமைச்சராயினார். அக்காலத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப் பெறவில்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. அந்நிலையில் முதலமைச்சர் இராசகோபால் (ஆச்சாரியார்) இந்தி மொழியினைக் கட்டாயப் பாடமாக்கினார். அப்பொழுது தமிழ் விருப்பப் பாடமாகவே இருந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்காமல் அயன் மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலையடிகளார், பேராசிரியர் ச.சோமசுந்தரபாரதியார், தமிழவேள் உமாமகேசுவரம்(பிள்ளை) முதலிய தமிழறிஞர்களும், வயவர்(சர்.)அ.தா.(ஏ.டி.)பன்னீர் செல்வம், தந்தை பெரியார், இளமாண்பர்(இராவு சாகிபு) ஐ.குமாரசாமி(பிள்ளை), கி.ஆ.பெ.விசுவநாதம், அறிஞர் அண்ணா முதலிய தமிழன்பர்களும் எதிர்த்தார்கள். மூதறிஞர் இராசாசி அவர்கள் தமது கட்சிப் பெரும்பான்மையைக்கொண்டு, தமது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்த தந்தை பெரியார் முதலியவர்களும் துறவிகளும் புலவர்களும் பெண்களும் சிறையிலடைக்கப்பட்டனர். அந்நிலையில் பாடப்பெற்றதே இந்நூலாகும். இது, தமிழ்ப்பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்களில் வெளிவந்தது” (இந்நூலின் பதிப்புரை, ப.1).
(தொடரும்)
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-09.
மின்னஞ்சல் : lakshmibharathiphd@gmail.com
சான்றெண் குறிப்பு
- கட்டாய இந்தி குறித்து இராசாசி அறிவித்த நாள் 10.08.1937. கட்டாயமாக்கப்பட்ட நாள் 21.04.1938. இந்தி எதிர்ப்பின் முதல் போராட்டம் 1938 – 1939 காலத்தில் நடந்தது. இராசாசி 27.10.1939 அன்று முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் போராட்டம் கைவிடப்பட்டு, இந்தியெதிர்ப்பு வாரியம் கலைக்கப்பட்டது. 21.02.1940 அன்று சென்னையின் ஆளுநர் இந்தியை விலக்கிக்கொண்டார். 1938இல் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி, 1965இல் இந்தியெதிர்ப்பு அணியில் சேர்ந்தார். இதற்கு முரணாக, 1939இல் இந்தியை எதிர்த்த பெரியார், 1965இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தார். இந்நூல் இயற்றப்பட்ட 1939ஆம் ஆண்டில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் கடுமையானநிலையை எட்டியிருந்தது. சிறைக்குச் சென்றவர்களுள் நடராசன் 15.01.1939 அன்றும் தாளமுத்து 12.03.1939 அன்றும் சிறையிலேயே பலியாயினர். சிறையில் பலரும் நோயுற்றனர்.
Leave a Reply