‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்
காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை
‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர் வேலரசு (எ) தமிழரசன், தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். நூலைப் படித்துப் பார்த்தபோது, இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது என்று தோன்றியது.
மறைந்த தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள், குறள் வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ”பார்த்தால் குறள், படித்தால் பொருள்” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால் குறள். படித்தால் பெரியார்’ என்று அமைந்துள்ளது.
குறள் என்பது யாப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பா வடிவத்தின் பெயர்தான். ஆனால் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்தால், திருக்குறளுக்கு மட்டுமே உரிய சொல்போல ஆகிவிட்டது. இங்கும் நண்பர் தமிழரசன் யாப்பில் குறள் வடிவத்தை எடுத்துக் கொண்டு, பெரியாரின் சிந்தனைகளை எளிமையாக வடித்துத் தந்துள்ளார். பெரியாருக்கும் பாட்டன் வள்ளுவன்தான் என்பதால், வள்ளுவரின் கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பெரியாரோடும் இந்நூல் நின்றுவிடவில்லை. பெரியாருக்கும் தெரியாத ‘ஆணவக்கொலை’ போன்ற காட்டுவிலங்காண்டிக் காலக் கொடுமைகளையும் கண்டித்துள்ளது.
44 அதிகாரங்களில் 440 குறட்பாக்கள் இந்நூலுள் அமைந்துள்ளன. அது என்ன 44 என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. நண்பர் தமிழரசன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஐயா பெரியார் இறந்து 44 ஆண்டுகள் ஆகின்றன இல்லையா என்றார். “அடடே“ என்று பாராட்டத் தோன்றியது.
பெரியாரை இழித்தும் பழித்தும் இன்றைக்கும் பலர் பேசிக் கொண்டே உள்ளனர். அவர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கிய அந்த வசை, இன்றும் தொடர்கிறது. பல்வேறு தளங்களில் பெரியார் எதிர்ப்பு இன்று நடந்து கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்தையும் மீறி, அவர் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வியப்பு. அவர்கள் பெரியாரைத் திட்டவில்லை, கூர் தீட்டுகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிக் கூர் தீட்டப்பட்ட வாள்களில் ஒன்றாகவே இந்நூல் வெளிவருகின்றது.
எப்போதும் கருத்துகளைச் சுருக்கமாகக் கூறுவது என்பது கடினமானது. அதிலும், குறள் வடிவில், இலக்கணப் பிழையும் இல்லாமல், கவிதையாக்கித் தருவது என்பது மிக மிகக் கடினமானது. அந்தக் கடினமான பணியைத் தோழர் தமிழரசன் எளிமையாகச் செய்துள்ளார்.
குறட்பா வடிவில் எழுதுவது கடினம் என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால் நூலாசிரியரோ, “உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி கூறிட வள்ளுவப்பா தேர்ந்தெடுத்தேன்” என்கிறார். குறட்பா, காலப்போக்கில் வள்ளுவப்பாவாகவே மாறிவிட்டதையும் நமக்கு உணர்த்துகின்றார்.
இறுதி அதிகாரம் பெரியாரில் வந்துமுடிகிறது. இறுதிக்குறள், பெரியாரை எதிர்க்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற செய்தியைத் தருகிறது. அவர்கள் அனைவரும் “முனை மழுங்கிப் போனார்கள்” என்பதே மெய் என்கிறார் தமிழரசன்.
இடையில் உள்ள குறட்பாக்கள் அனைத்தும் சமூகப் பொது வாழ்வு பற்றிய செய்திகளைப் பல்வேறு நிலைகளில் எடுத்துரைக்கின்றன. மதமாய்ப்பு, மூடநம்பிக்கை, தீண்டாமை போன்ற ஒழிக்க வேண்டிய கூறுகள் குறித்தும், தாய்மொழி, துணிவுடைமை, கட்டுப்பாடு போன்ற வளர்க்க வேண்டிய கூறுகள் குறித்தும் தனித்தனி அதிகாரங்களில் ஆசிரியர் தன் கருத்துகளை விளக்குகின்றார்.
வள்ளுவரைப் போலவே காமமும் பாடியுள்ளார். “உழைப்பினால் மட்டுமல்ல மாந்தர்தம் காம அழைப்பாலும் வாழும் உலகு” என்னும் குறள் இயற்கை நிலையின் எதார்த்தம். காமத்தின் படிநிலைகளைபற்றிக் கூறும் ஒரு பாடலும் மிக அருமையாக உள்ளது. “தயக்கம் மயக்கம் முயக்கம் இயக்கமிவை காமப்படிநிலை தான்” என்னும் குறளில்தான் எத்தனை அழகு! முதல் வரியில் அத்தனை சொற்களிலும் எதுகை உள்ளது. ஆனால் எதுகையால் இந்தப்பா சிறப்புப் பெறவில்லை. உள்ளார்ந்த உண்மைப் பொருளே இப்பாவிற்கான சிறப்பாக உள்ளது. காமம் எத்தனை பெரியது! அதனை இத்தனை சிறிய சொற்களால் சொல்லிவிட முடியுமா என்று வியப்பாக உள்ளது.
துப்புரவுத் தொழிலாளர், சலவைப் பணியாளர், செருப்புத் தைப்போர் என்று சமூகத்தின் அடித்தளத்திலும், பொருளாதாரத்தின் அடித்தளத்திலும் வாழும் தோழர்கள் குறித்த குறட்பாக்கள் நம் நெஞ்சைத் தொடுகின்றன.
“ஆணவத்தால் கொல்லாதே, ஆணவத்தைக் கொல்” என்னும் தொடர் ஒவ்வொரு வீட்டிலும் எழுதிவைத்துக் கொள்ளத் தக்கதாக உள்ளது. அறிவுரைகளாக மட்டுமின்றிச் சில இடங்களில் போர்க்குணத்தோடும் தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார். ஓரிடத்தில், “நீ தாழ்ந்தான் நானுயர்ந்தான் என்றெவரும் சொன்னாலும், கால்கீழ்ச் செருப்பா லடி” என்று எழுதும்போது, அவருக்கு மட்டுமில்லை, நமக்குமே கோபம் கொப்பளிக்கிறது.
இந்நூல் நண்பர் தமிழரசன் தமிழுக்கு வழங்கியுள்ள நற்கொடை! இதற்கு என்னிடம் அணிந்துரை கேட்டதன் மூலம், என்னைப் பெருமை கொள்ளச் செய்துள்ளார். நன்றியும், வாழ்த்துகளும்!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
Leave a Reply