காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி
காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி
அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18.
நினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்!
வீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி.
‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி குப்புசாமி அவர்கள் ஆடி 17, 1964 தி.பி. / 1.08.1933 ஆம் நாளில் பிறந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர் மானிடவியல் ஆய்வில் பட்டயமும் பெற்றவராவார்.
பூ.அர.கு. தமது 12ஆவது அகவையிலேயே அவரது தமையனார் முயற்சியால் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அந்தச் சிறு பருவத்திலேயே ‘திராவிட நாடு’, ‘பகுத்தறிவு’ ஏடுகளை ஊன்றிப் படித்து அதிலிருந்த செய்திகளை உடன் பயிலும் மாணவர்களிடத்தில் தீவிரமாகப் பரப்புரை செய்தார். தி.க. நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக ஒருமுறை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மார்க்சிய அறிமுகம் கிடைத்த பிறகு, தி.க.விலிருந்து வெளியேறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1956-60களில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய ‘புதுக்கோட்டை இலக்கிய மன்றம்’, பிற்காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டுதலில் கலை இலக்கியப் பெருமன்றம் உருவெடுக்க மூல வேராகத் திகழ்ந்ததாக, பூ.அர.கு. பெருமையுடன் குறிப்பிடுவார்.
சென்னை சட்டக்கல்லூரியில் 1960லிருந்து 1963 வரை பயின்ற காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலத் தலைமையோடு நெருங்கி உறவாடும் வாய்ப்பைப் பெற்றார். தோழர் சீவா அவர்களின் அன்பைப் பெற்ற நெருக்கமான தோழர்களில் பூ.அர.கு.வும் ஒருவர். இக்காலக்கட்டத்தில் இக்கட்சியின் மாநிலத் தலைமை தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும் பிராமணியச் சாய்வோடும் இருப்பதை உணர்ந்து கொண்டார். இப்போக்கிற்கு எதிராக இடைவிடாது உள்கட்சி விவாதங்களை நடத்தி வந்தார். 1964இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்ட போது இ.பொ.க.விலேயே தொடர்ந்தார். ஆயினும் ‘சீன ஆதரவு தீவிரவாதிகள்’ என்ற பெயரில் அக்கட்சித் தலைமை அரசுக்கு நீட்டிய 100 பேர் பட்டியிலில் பூ.அர.கு. பெயரும் இருந்தது. உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்டம் ஆகிய ‘மிசா’ சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு ஏழு மாத காலம் தோழர் பூ.அர.கு. சிறையில் வாடினார்.
இதன் பிறகு, பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் பொதுக்குழுவிலும் இடம் பெற்றார். சில ஆண்டுகளில் அங்கிருந்தும் வெளியேறி தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பேற்றுப் பகுத்தறிவுப் பரப்புரை செய்து வந்தார்.
இராசீவு காந்தி கொலையை ஒட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், தமிழின உணர்வாளர்களுக்கு எதிராகவும் இந்திய – தமிழக அரசுகள் நடத்திய அடக்குமுறைகளையும், கருத்துரிமைப் பறிப்புகளையும் கண்டு கொதித்தெழுந்தார், பூ.அர.கு. இச்சூழலில் நிலவிய இறுக்கமான மெளனத்தை உடைப்பதற்கு உரத்துக் குரல் எழுப்பினார். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து வெளியேறிப் பொது நிலையில் நின்று தமிழின உரிமைக்காக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்துத் தூண்டுதல் பணி செய்வதே தமது வழியாகக் கொண்டார்.
காவிரி, முல்லைப் பெரியாறு, கண்ணகிக் கோட்டம் போன்றவற்றில் ஒவ்வொரு அசைவையும் ஊன்றிக் கவனித்து அதுபற்றி தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடர் உழைப்பையும், பொருட்செலவையும் செய்து வந்தார்.
1991-1992இல் கன்னட வெறியர்கள் நடத்திய கொடுந்தாக்குதல்களில் உயிர், உடைமையை இழந்து, பாலியல் வல்லுறவுக்குள்ளாகிக் கருநாடகத் தமிழர்கள் துன்பப்பட்ட போது அவர்களுக்கு இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நியாயம் கிடைக்கப் போராடினார், தோழர் பூ.அர.கு.
காவிரி ஆற்று மணல், கொள்ளை போவதைத் தடுப்பதற்காக நேரில் போராடியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் பாடாற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணற் கொள்ளையர்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர் நமது பூ.அர.கு. திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யலாறு பாழ்படுத்தப் படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த வழக்கு மாசுபாட்டுக் குறைப்புக்கு அப்போது வழி ஏற்படுத்தியது.
நொய்யல் பாசனத்திட்டக் கால்வாய் வெட்டப்பட்டு பல்லாயிரம் ஏக்கர் பாசனம் பெறுவதற்கு தோழர் பூ.அர.கு. அவர்களின் பெருமுயற்சி அடிப்படையாக அமைந்தது. ‘மன்னரும் மனுதர்மமும்’, ‘மக்கள் புரட்சியும் மாபெரும் கவிஞரும்’, ‘சீவா: மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘காவிரி அங்கும் இங்கும்’, ‘காவிரியும் கலைஞரும்’, ‘தேசிய இனப்பிரச்சினையும் திராவிட இயக்கமும்’ போன்றவை தோழர் பூ.அர.குப்புசாமி எழுதிய நூல்களில் சில.
காவிரிக் காப்புக்குழுவின் தலைவராக இருந்து, தோழர் பூ.அர.கு. ஆற்றிய பணி மகத்தானது. குசரால் வரைவுத் திட்டத்தைக் கைவிடுவதற்கு உச்சநீதிமன்றத்தில் மனு செய்வதற்காகத் தி.மு.க. அரசு சில கருங்காலிகள் துணையோடு முயன்றபோது, அதற்கெனக் கூட்டப்பட்ட உழவர் பேராளர் கூட்டத்திற்கு உரிய நேரத்தில் த.தே.பொ.க. தோழர்களையும் அழைத்தார். நம் தோழர்களின் விடாப்பிடியான முயற்சியால் அன்றைக்கு அச்சதி தற்காலிகமாகவாவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கியவர் பூ.அர.கு. ஆவார். இதன்பிறகு வாசுபாய் முன்னிலையில் கருணாநிதி காவிரி உரிமையைக் கைகழுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது அதனை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்தெறிந்து திறனாய்வு செய்து, அதற்கெதிராகப் பலரையும் இணைக்க பாடுபட்டவர் பூ.அர.கு.
இதற்காகப் பேரணிகள், கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்தார். ‘காவிரிக்குடும்பம்’ என்ற பெயரில் தமிழக இனத்துரோகிகள் கன்னடர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்த கொட்டத்தை எதிர்த்து அவர்களை அடையாளம் காட்டினார் பூ.அர.கு.
காவிரி நீர் உரிமை மீட்பு இயக்கத்தைத் தம் வாழ்நாள் பணியாக ஏற்றுச் செயல்பட்டதற்காக தோழர் பூ.அர.குப்புசாமி அவர்களுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கடந்த 2009 நவம்பர் 8 அன்று, தாயக உரிமை மீட்பு நாள் கருத்தரங்கில், ‘தமிழ்த் தேசச் செம்மல்‘ விருது அளித்துப் பாராட்டியது.
2002 ஆம் வருடம் கரூர் திருமுக்கூடலூர் மணிமுத்தீசுவரர் கோயிலில் பெரும் போராட்டம் செய்யப்பட்டுத் தமிழில் குடமுழுக்கு நடக்க உறுதுணையாக இருந்தார் இவர். தமிழில் குடமுழுக்கு நடத்த தடைகோரி பிராமணர்கள் கரூர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் கடுமையாக எதிர்வாதம் செய்து வழக்கைத் தோற்கடித்தார்.
ஆரியர்கள் இந்திய மண்ணின் மைந்தர்களே எனவும், கைபர், போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்ற கருத்து பொய் எனப் பி.ஒ.நி./பி.பி.சி. கூறுவதாகவும் பொய்யாக இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் தணிக்கையர் குருமூர்த்தி எழுதியபோது, மின்அஞ்சல் மூலம் பி.ஒ.நி./பி.பி.சி. வானொலி நிறுவனத்திடம் தேவையான விளக்கம் பெற்று, குருமூர்த்திக்கு வழக்குஅறிவிக்கை அனுப்பிக், அவரது பொய்யான கருத்தைத் திரும்பப் பெறச் செய்தார்.
இறுதி நாட்களில் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் உடன் நெருங்கிய நட்பு பாராட்டினார்.
இவரது வாழ்வும், பணிகளும் குறித்து, அறிஞர் கோவை ஞானி ஒரு குறும்படம் எடுத்துள்ளார்.
மாசி 02, 2041 தி.பி. / 14.02.2010 அன்று புகழுடம்பு எய்தினார்.
வாழ்க அண்ணாரின் புகழுடம்பு!
தமிழர் கண்ணோட்டம், மார்ச்சு 2010 & கரூர் இராசேந்திரன்
நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா பூ.அர.கு வும் ஒருவர். எண்பதுகளில் அடிக்கடி கலந்துரையாடிய நினைவுகள் நிழலாய் உள்ளன. பல வேளைகளில் அவருடைய வீட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினார். காவிரிச் சிக்கல் குறித்து மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்தவர். அவர் எனக்கு எழுதிய பல மடல்கள் கோப்புகளில் ஆவணங்களாக உள்ளன.
தொடர்ந்து மடல் எழுதுவதும் கருத்து விவாதங்கள் செய்வதும் அவருடையத் தனிச்சிறப்பு.
போராளியை வணங்குகின்றேன்.
வாழ்க ! PRK ( பெரும்பாலோர் இப்படித்தான் அவரை அழைத்து மகிழ்ந்ததுண்டு)
– குமணராசன்