கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு
பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு!
பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால் அந்தந்த நாட்டில் உள்ள பரம்பரைத்தொழில்கள் முடக்கப்படுகின்றன.
தமிழகத்தில் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது பூட்டுத் தொழிற்சாலைகள்தான். இருப்பவர் வீடு முதல் இல்லாதவர் வீடு வரை அனைத்திலும் அங்கமாகத் திகழ்பவை பூட்டுகளே. பண்டைய காலம் முதல் இன்று வரை பூட்டு இல்லாமல் தன்னுடைய செல்வத்தை அல்லது பொருளைப் பாதுகாக்கமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். புவிசார்குறியீடு பெறும் அளவிற்கு வளர்ந்த திண்டுக்கல் பூட்டு தற்பொழுது வினைநல(smart)நகர அளவிற்கும் உயர்ந்தாலும் இத்தொழிலாளர்கள் வாழ்க்கைக்குப் பூட்டு போட்டுத்தான் வருகிறது தாரளமயமாக்கக் கொள்கை. திண்டுக்கல் பூட்டு தரமான, உறுதியான பூட்டு உருவாக்கத்தில் புகழ்பெற்றது. திண்டுக்கல்லில் ஆக்கப்படும் இப் பூட்டு தேசியஅளவிலும் உலக அளவிலும் விற்பனை ஆனது. திண்டுக்கல்லில் இரும்புப் பெட்டி, பூட்டு முதலியனவற்றை 1942 வரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே செய்து வந்தனர். அதன்பின்னர் அத்தொழிலை அனைவரும் செய்து வருகின்றனர். அரசாங்க அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும், பண்ணையார் வீடுகளிலும் திண்டுக்கல் பூட்டே மிகச்சிறந்த பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அரசுத்துறையால் நடத்தப்படும் பூட்டுத்தொழிற்சாலை இங்குதான் உள்ளது என்பது சிறப்பிற்குரியதாகும்.
தற்பொழுது சீனா முதலான வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் திண்டுக்கல் பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு போடப்பட்டு வருகிறது. இதனால் பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் என்னும் திறவுகோலைத் தேடி அலைந்து வருகின்றனர். திண்டுக்கல்லில்; மாங்காய்ப் பூட்டு, இழுவைப்பூட்டு, பேழை(அலமாரி)ப்பூட்டு எனப் பலவகை பூட்டுகள் புகழ்பெற்று விளங்கின. பண்டைய காலத்தில் திண்டுக்கல் சீமையில் 26 பாளையங்களில் நிலக்கோட்டையும் ஒன்று. மதுரையில் விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க மரபின் ஆட்சியைத் தொடங்குவதற்கு முன்னரே விசயநகரத்தில் இருந்து ஒருவர் இங்கு பாளையம் ஏற்படுத்தினார். அவர் கட்டிய மண் கோட்டையின் இடிபாடுகள் கூளப்பநாயக்கன் கோட்டை என்ற பெயரில் வழங்கி வருகிறது. அக்கோட்டையில் பழங்காலத்தில் சாமி சிலைகளைப் பாதுகாக்கப் பூட்டு ஒன்று அழகிய வேலைப்பாடுடன் செய்யப்பட்டு காலத்தின் சுவடாய் இன்றும் நமக்குக் காட்சியளிக்கிறது.. தமிழ்நாடு அரசு அறிவியல்-தொழில்நுட்பக்குழு பூட்டுத்தொழிலுக்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினால், திண்டுக்கல் சிறப்பான பூட்டுத்தொழில் நகரமாகத்திகழும். இல்லையெனில் அழிக்கப்படும் தொழில்களில் பூட்டுத்தொழிலும் இடம் பெறும்.
-வைகை அனிசு
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-626 601.
தேனி மாவட்டம்
பேசி: 9715795795
Leave a Reply