சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை

கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம் முனைவர் பட்டமும் கல்வியியல் முதுகலைப்பட்டமும் பெற்ற ஆசிரியரே.

தமிழியல், கணக்கியல், கணிணியியல் ஆகிய துறைகளில் பட்டங்கள் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகள்(1964 – 2001) கணக்கறிவியல் துறையில் ஆசிரியப்பணி யாற்றியுள்ளார். இவர் கணக்கில் முதுஅறிவியல் பட்டம் படித்துப் பணியில் சேர்ந்தாலும் பின்னர்(1971-72) இத்துறையில் இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1964 இல் கணக்குப் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தவர் 2001இல் முதுகலைக் கணக்குத் துறையின் தலைவராகப் பணிநிறைவு எய்தினார்.

கல்விமீதும் தமிழ் மீதும் தணியா ஆர்வம் கொண்டுள்ள இவர், தொடர்ந்து மொழியியல் சான்றிதழ்(1978-79), தமிழ் முதுகலை(1980), மொழியியல் முனைவர் பட்டம்(2001) பெற்றுள்ளார். இடையில், கணிணியியலில் பட்டயமும் பட்டமேற்படிப்புப் பட்டயமும் பெற்றுள்ளார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்கப்பட்ட இவரது முனைவர் ஆய்வுப் பட்டத் தலைப்பு: “எழுத்துத் தமிழின் மொழியியல் கூறுகளின் புள்ளிவிவரப் பகுப்பாய்வு – தொல்காப்பியம் முதல் இக்காலம் வரையிலான கால முறைப்படியும் ஒத்தக் காலத்தின்படியுமான மொழியியல் கூறுகள் ஆய்வு (A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – A diachronic and synchronic study of linguistic features starting from tolka:ppiyam and up to modern times.)” என்பதாகும்.

இக்காலக்கட்டத்தில், விடுதிக்காப்பாளர்(1983-86), கணிணிச் செயல்பாட்டிற்கான பட்டமேற்படிப்புப் பட்டயக்கல்வியின் மாலைநேரப் படிப்பிற்கான இயக்குநர்(1986-1995), கணிணி அறிவியல் துறைத் தலைவர்(1991-1995),கணிணி சார் புலத்தலைவர்(1995-97), துணை முதல்வர் (1997-98) எனப் பல பொறுப்புகள் மூலம், கல்விநலனிலும் மாணாக்கர் நலனிலும் சிறப்பாகக் கருத்து செலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றார்.

சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் (Coining of Technical words in Sangam literature) என்னும் இவரது முதல் கட்டுரை அறிவியல் இதழான கலைக்கதிரில் வெளிவந்தது. தொடர்ந்து செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கணம் சார்ந்து, தமிழ் இலக்கணத்திற்கு வளம் சேர்க்கும் வகையிலும் தமிழ்க்கணிணிப் பயன்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையிலும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பதினெட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்குக் கட்டுரைகள் அளித்துள்ளார்.

தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகம் நடத்திய  கணக்கு-புள்ளியியல் கலைச்சொற்கள் புனைவு, திரட்டல், தொகுத்தல் கருத்தரங்கத் தலைவராக இரு முறை (6/1984,6/985) இருந்து வழிநடத்தியுள்ளார்.

இவரது குறிப்பிடத்தக்கப் பணி தமிழ் இலக்கியத் தொடரடைவு(Concordance for Tamil Literature) என்னும் இணையப்பதிப்பாகும். சங்க இலக்கியச்சொல்லடைவு வையாபுரியாராலும் பிறராலும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆசியவியல் நிறுவனம், செருமானிய அறிஞர்கள் தாமசு இலெகுமண், தாமசு மிலிடென் ஆகியோரைக் கொண்டு  பழந்தமிழ்ச்சங்க இலக்கியச் சொல்லடைவை வெளியிட்டது(A word index of old Tamil caṅkam literature / by Thomas Lehmann and Thomas Malten, 1992). முனைவர். பெ. மாதையனை நூலாசிரியராகக் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் சங்க  இலக்கியச் சொல்லடைவு வெளியிட்டுள்ளது(2003). தமிழ் இணையக்கல்விக்கழகமும் சங்க இலக்கியச் சொல்லடைவினை இணையத்தில் பதிப்புள்ளது. பேரா.காமாட்சி முதலான அறிஞர்களும் இப்பணியில் இறங்கி உள்ளனர். எல்லாப்பணிகளுக்கும் தலைமை நிலையில் உள்ளதாகப் போற்றத்தக்கது இவரது இணையவழியிலான தொடரைவுப்பணியாகும்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை), பதினெண்கீழ்க்கணக்கு, (திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்), திருக்குறள்(மட்டும் – தனியாக), ஐம்பெருங்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், கம்பராமாயணம், நளவெண்பா, பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, வில்லி பாரதம் (புதியது), பக்தி இலக்கியம், கூட்டுத்தொடரடைவுகள்,  இடம் பெற்றிருக்கும்.

மேலும், படிப்போருக்குப் பயன்தரும் வகையில் சொற்பிரிப்பு நெறிகள் குறித்தும் அருமையாக விளக்கியுள்ளார்.

தொடரடைவில் குறிப்பிட்ட சொல், எந்தெந்த இடத்தில் வருகிறது என்பது வரிசைப்படியாகத்தரப்படுகின்றன. ஒரே சொல், வெவ்வேறு பொருளில் வருவதை இதன் மூலம் அறிய இயலாது. சொற்களை வகைப்படுத்தி, அந்த வகைகளுக்கேற்ற முறையில் சொல்வகுப்புத் தொடரடைவு  அளித்துள்ளார். எனவே, படித்துப்புரிந்து கொள்வதற்கு எளிதாகும்.

சான்றுக்கு ஒன்று: அகல் என்னும் சொல் வினைச்சொற்களாகவும் பெயர்ச்சொற்களாகவும்  நீங்கு, விலகு அகன்ற, அகலமான, அகலமான இடம் என்னும் பொருள்களில் வருவதை வகைப்படுத்தித் தருகிறார்.

இந்தத் தொடரடைவுகளை tamilconcordance.in என்ற இணையதளத்தில் காணலாம்

சொல்லடைவுகளைப் பயன்படுத்தும் பொழுது  சொற்களுக்கான பொருள்களை வேறு நூல்களிலோ வேறு தளங்களிலோ தேடாமல், இங்கேயே அறிய வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் வரும்.

அந்த எண்ணத்தை ஈடேற்றும் வண்ணம் இப்போது முனைவர் பாண்டியராசா உருவாக்கி யுள்ளதுதான் சங்கச்சோலை < sangacholai.in > என்ற இணையதளத்தில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற பகுதி.

“சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூற்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, தேவையான இடங்களில் படங்களையும் கொடுத்து, விளக்க முற்படும் தளம் இது”.

இப்போது ‘அ’ முதல் ‘ஔ’ முடிய உள்ள உயிர் எழுத்துக்களுக்குரிய 495 சொற்களும்

                ‘க’ முதல் ‘கௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 352 சொற்களும்

                ‘ச’ முதல் ‘சோ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 250 சொற்களும்,

                ‘ஞ’,’ஞா’,’ஞி’,’ஞெ’,’ஞொ’- வுக்குரிய 40 சொற்களும்

                ‘த’ முதல் ‘தௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 440 சொற்களும்,

                ‘ந’ முதல் ‘நௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 315 சொற்களும்,

                ‘ப’ முதல் ‘பௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 795 சொற்களும்

                ‘ம’ முதல் ‘மௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 641 சொற்களும

              ’ய’,’யா’,’யூ’ – வுக்குரிய  24 சொற்களும்

              ’வ’,’வா’,’வி’,’வீ’,’வெ’,’வே’,’வை’’வௌ’-க்குரிய 610 சொற்களும்

ஆக மொத்தம் 3962 சொற்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

தேவையான சொல்லின் முதல் எழுத்தைத் தட்டினால், அந்த எழுத்தில் தொடங்கும் எல்லாச் சொற்களும் இடது பக்கம் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும். அதில் நாம் தேடும் சொல்லைச் சொடுக்கினால், அச் சொல்லைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

இணைய வழியிலான பல்வேறு அகராதிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக உள்ளது தமிழ்ப்புலவர் அகராதி  < https://www.tamilpulavar.org/ > யாகும். இதில் பொதுச்சொற்கள், கலைச்சொற்கள், முதலான வகைகளுடன் ஆங்கில அகராதிகளும் இடம் பெற்றுப் பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றில் நாம் சொல்லைக் குறிப்பிட்டுப் பொருள்காண வேண்டும். தொடரடைவில் சங்க இலக்கியம் முதலான நூல்களில் உள்ள அனைத்துச் சொற்களும் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து வரும் இடத்தைக் காண முடியும். சங்கச்சோலையில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்தில், சங்க இலக்கியத்தில் உள்ள அரிய சொற்களை அவற்றின் பொருளுடன் காண முடியும்.

எவ்வாறு இஃது அமைந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று.

அஃகு – (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, become minute, shrink, be reduced in size, quantity etc.,

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து

இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 551,552

பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும்,

‘இல்லை’ என்று விரித்த கையினையும் உடையோராய்;

நல்லகம் நயந்து, தான் உயங்கிச்

சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8

நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி

அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான் .

இவ்வாறு சொல்லின் தமிழ்ப்பொருள், ஆங்கிலப்பொருள், சொல் இடம் பெற்றுள்ள இலக்கிய அடிகள், நூலின் பெயர், பாடல் / அடி எண் முதலியவை நமக்குக்கிடைக்கின்றன.

ஏறக்குறைய ஈராண்டுகளில் இவ்வருவினைப் பணியை முடித்துள்ளார்.  மீளாய்வு செய்து, விட்டுப்போன சொற்கள், கிடைக்கக்கூடிய தேவையான படங்கள், சொற்களுக்கான இணைப்புகள் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, விடுபாடு, தேவைப்படும் மாற்றம் முதலியவற்றைத் தெரிவிக்க வேண்டி யுள்ளார்.  நானும் ‘அர்’ விகுதியில் உள்ள சொல்லின் ‘அன்’ விகுதிச்சொல்லையும் சேர்த்து அஃது இடம் பெறும் இடங்களைக் குறிக்க வேண்டும்  என்றும் இடம் பெற்ற சொல்லில் பயன்பாட்டு இடம் ஒன்று விட்டுப்போனைதயும் தெரிவித்துள்ளேன். இதுபோல் அனைவரும் தெரிவிப்பின் அவர் எண்ணப்படி இதனைத்  தனி இணையதளமாக மாற்றிச் செவ்வையாய்த் தர இயலும்.

இன்றைய அவரின் 77ஆம் பிறந்தநாளின் பொழுது அவர் நலம், வளம்,புகழ் நிறைந்து தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்நன்னாளில் அவரின் செயற்கரிய பணிகளைக் குறிப்பிடுவதன் காரணம்,  தமிழ் மாணாக்கர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சொல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலான அனைவரும் இவரது தளத்தை நன்கு பயன்படுத்திப் பிறருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்குத்தான்.

மேலும், தமிழக அரசு இவரது பணிக்கான செலவினைவிடக் கூடுதல் தொகையைப் பரிசாக அளித்து இவரைப் போற்ற வேண்டும்! அஃது இதுபோன்ற பணிகளில் ஈடுபடத் தமிழ் ஆர்வலர்களுக்கு உந்துதலாக அமையும். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் நல்கைத் தொகை வழங்க வேண்டும்! வாய்ப்புள்ள கொடை உள்ளம் கொண்ட நல்லோரும் உதவலாம்!

தமிழ்ச்சொற்கள் தேடுகருவியை அளித்துள்ள முனைவர் பாண்டியராசா, பைந்தமிழுக்கு மேலும் வளம் சேர்ப்பாராக!

[முனைவர் பாண்டியராசாவை வாழ்த்துவதற்கு:

மனைபேசி: மதுரை 0452-2537931 ; சென்னை 044-22201244

அலைபேசி: 99944 89388

மின்வரி: ppandiyaraja@yahoo.com

இலக்குவனார் திருவள்ளுவன்