(சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

791. Administration Bondபணியாட்சிப் பத்திரம்

பிணை முறி விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அல்லது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சொத்துரிமை விண்ணப்பத்தில் நீதிபதியால் கோரப்பட்ட பிணையர்கள் உறுதிமொழி.

உடைமையின் பணியாட்சியரால்,  விருப்புறுதி/இறுதி முறிக்கேற்பச் செயற்படுவதற்கான உறுதி மொழி அளிக்கும் பத்திரம்.இந்திய மரபுரியமையர் சட்டம் 1925(Indian Succession Act, 1925)
792. Administration Of Justice    நீதிப் பணியாண்மை  

நீதிப் பணியாண்மை என்பது அரசின் முதன்மைச் செயல்பாடாகும்.

இது பொதுவாக உரிமையியல் நீதிமன்றப் பணியாண்மை, குற்றவழக்கு நீதிமன்றப் பணியாண்மை என இரு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.   குற்றவழக்கு நீதிப் பணியாண்மை என்பது, தவறு செய்தவர்களைத் தண்டிப்பது. குற்றவாளிகளைத் தண்டிப்பது அரசுதான்.
793. Administration Suits   பணியாண்மை வழக்குகள்.  
பணியாண்மையால் ஏற்படும் சிக்கல்கள், பாதிப்புகள், தீய விளைவுகள், கேடுகள் தொடர்பான அல்லது அவற்றிற்கு எதிரான வழக்குகள்.
794. Administration, Letters Of    பணியாண்மை ஆவணங்கள்.  

letter  என்பது பொதுவாக மடலைக் குறித்தாலும், நடைமுறையில் எழுதப்பட்டுள்ள எதையும் குறிக்கும். எனவே, இந்த இடத்தில் ஆவணம் என்று பொருள்படும். சிலர் பத்திரம் என்பர். பொறுப்பு அமர்த்தல் ஆணையைப் பத்திரம் எனச் சொல்வதைவிட ஆவணம் என்பது பொதுவானதாக அமையும்.

விருப்புறுதியாளரின் இறுதி முறி அல்லது விருப்ப முறி இல்லாத பொழுது, அவருடைய சொத்தின் பணியாண்மைப் பொறுப்பை ஏற்பதற்கு அல்லது அதனைக் கையகப்படுத்துவதற்கு அல்லது அதனை முடிவு கட்டுவதற்கு குறிப்பிட்ட ஒருவரை அமர்த்தும் சட்ட முறையான ஆவணம்.
795. Administrative Adjudicationபணியாட்சித் தீர்ப்பு

நிருவாக நீதிமுறைத் தீர்மானிப்பு

துறைக்குள்ளேயே பகுதி நீதித்துறைபோல் செயல்பட்டு  உசாவல் மேற்கொண்டு அளிக்கப்படும் தீர்ப்பு.

வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை முதலான பல துறைகளில்  துறையுடன் பிணக்கு உள்ள பொதுமக்களுக்கும்  பொதுவாகத் துறைகளில் துறைப்பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளில் அந்தந்தத் துறைத்தலைமையும் உசாவித் தீர்ப்பளிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களும் ஒன்றிய அரசும் பணியாட்சித் தீர்ப்பிற்கென் தீர்ப்பாயங்கள் வைத்துள்ளன.

இந்திய அரசு, பணியாளர்கள் பொதுக் குறைகள் ஓய்வூதிய அமைச்சகம், பணியாளர் – பயிற்சித் துறை, பணியாட்சித் தீர்ப்பாயங்கள் சட்டம் 1985 (மத்திய சட்டம் 13/1985) கீழ் 12.12.1988 முதல் தமிழ்நாடு மாநிலத் தீர்ப்பாயம் செயல்பட்டது.  சில ஆண்டுகளில் தமிழ்நாட்டரசின் பரிந்துரைக்கிணங்கக் கலைக்கப்பட்டது.  
796. Administrative Body   பணியாண்மைக் குழாம்  

பணியாளுமையை மேற்கொள்ளும் பணியாளர், அலுவலர் தொகுதி.  

உள்நாட்டு/வெளிநாட்டு/தேசிய/கூட்டாட்சி/மாகாண/மாநில/நகராட்சி/ பிற உள்ளாட்சிகள்/ அல்லது ஒழுங்குமுறை அமைப்பு, மற்றும் எந்த ஒருகோட்டம்/பிரிவு/ முகவாண்மை/ அமைச்சு/ ஆணையம்/ வாரியம் அல்லது அதிகாரத்துவம் அல்லது அரசு சார் அமைப்பு அல்லது தனியார் அமைப்பு அல்லது பன்னாட்டு நீதி மன்றம்/நீதித்துறை அதிகார அமைப்பு/ தீர்ப்பாயம்/பணியாண்மை நீதிமன்றம்/ ஆணையம்/கழகம்/நிறுவனம் அல்லது முற்கூறியவற்றின் கீழ்ச் செயல்படும் அமைப்பின் அலுவலகத்தை நடத்தும் குழு.  

அலுவலக ஆட்சியைக் கவனிப்பதைப் பணியாட்சி என முதலில் குறித்திருந்தேன். மேலாண்மை என்பதுபோல் பணியாண்மை என்பது ஏற்றதாக இருக்கும் என்பதால் பணியாண்மை எனக் குறித்துள்ளேன்.   நிருவாக அமைப்பு என்பர். நிருவாகம் என்பதைவிடத் தமிழ்ச்சொல்லான பணியாண்மையே ஏற்ற சொல்லாகும்.  பணியாண்மையிலேயே அமைப்பு முறையும் அடங்கி விடுகிறது. எனவே, தனியாக அமைப்பு என்று சொல்ல வேண்டா. Body என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அமைப்பினைச் செயற்படுத்தும் குழுவைக் குறிப்பதால் பணியாண்மைக் குழு எனலாம்.
797. Administrative Decision          பணியாண்மை முடிவு  

பணியாண்மை முடிவு என்பது, உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தீர்மானித்தல், புறநிலைத் தரங்களைப் பயன்படுத்துதல், ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி விதிமுறைகளைச் செயற்படுத்துதல், பணியாண்மை செய்தல் அல்லது நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.
798. Administrative Discretion       பணியாண்மை உளத்தேர்வு  

பணியாண்மையில் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் கொண்டுள்ள பணியாண்மை உளத்தேர்வு உரிமை ஆகும்.  

முடிவெடுக்க ஒருவருக்கு இருக்கும் அளிக்கப்படும் உரிமையும் அதிகாரமும் பொதுவாக விருப்புரிமை அல்லது தன் விருப்புரிமை எனப்படுகிறது. விருப்பு வெறுப்பற்று ஆராய்ந்து வழங்கப்பட வேண்டிய தீர்ப்பை விருப்பின் அடிப்படையில் வழங்குவதாகக் கூறுவது சரியாக அமையாது. தீர்ப்புரிமை என்பது பொதுவான சொல்லாக அமையும்.   தனக்கு ஏற்றதாகக் கருதப்படுவதைத் தெரிவிக்கும் உரிமை என்ற பொருளில் தனக்கேற்புமை என்கின்றனர். இதனையே தன் மனம் / உள்ளம் தேர்ந்தெடுக்கும் முடிவினை அறிவிப்பதால் மனத்தேர்வு/ உளத்தேர்வு என்கின்றனர்.   இருவகையில் எவ்வகை முடிவு சரி எனத் தெளிவு இல்லாத பொழுது மனம் தேர்ந்தெடுக்கும் கருத்தினைத் தெரிவிக்கும் உரிமை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது சட்ட முறையான ஒன்றாகும்.
799. Administrative Finality         பணியாண்மை அறுதி முடிவு  

பணியாண்மையில் மேற்கொண்டு முடிவு எடுக்கவோ கருத்து தெரிவிக்கவோ வழியில்லா நிலையில் எடுக்கப்படும் இறுதி முடிவாகும்.
800. Administrative Law    பணியாண்மைச் சட்டம்  

பணியாண்மைச் சட்டம் என்பது, அரசின் பணியாண்மை நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட அமைப்பு ஆகும்.  

செயலாண்மையால் அல்லது இதன் துணை அமைப்புகளால் செயற்படுத்தப்படும் முறைகேடான அதிகாரப்  பயன்பாட்டிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் செயன்மை(நிறைவேற்று) அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்கும் பணியாண்மைச் சட்டம் உறுதுணையாய் அமைகிறது.