சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 831-840
831. Advantage, Collateral | கூடுதல் ஆதாயம் ஓர் ஒப்பந்தத் தரப்பார், தம் வலிமையான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தித் தனக்கு /தமக்கு ஆதாயமான/சாதகமான கூறுகளைச் சேர்த்துக் கொள்வது. பெரும்பாலும் விகிதச் சமமற்ற முறையில் அவருக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு மேல் கூடுதலாகப் பெறும் வகையில் விகிதத்தைச் சேர்த்துக் கொள்வது. இவ்வாறு பெறும் கூடுதல் ஆதாயம். |
832. Adverse Comment | எதிர்மக் கருத்து யாரைப்பற்றியோ / எதைப்பற்றியோ சொல்லப்படும் அல்லது எழுதப்படும் எதிர்மறையான கருத்து. எதிர்மக் கருத்து என்றால் ஆர்வமுள்ள தரப்பினரால், வழக்கு தொடர்பில் எழுத்து மூலமாக அளிக்கப்படும் மறுப்பு அல்லது எதிர்ப்பு அல்லது பிற எதிர்மறையான கருத்து. நேரிய (fair) முறையில் வழங்கும் கடன், நுகர்வோர் பாதுகாப்பு, குடிமை உரிமைகள் தொடர்பில் மன்பதை மறுமுதலீட்டுச் சட்டத்தின்படி (Community Reinvestment Act /CRA) உரிய மண்டல இயக்குநரோ அதிகாரியோ தெரிவிக்கும் கருத்துகள் எதிர்மக் குறிப்பிற்குள் வரா. adverse என்பதை எதிரான, எதிரிடையான, கெடுதலான, நேர்மாறான, கேடான, தீங்கான, பாதகமான, விரோதமான எனப் பலவகையிலும் குறிக்கின்றனர். பின்னிரு சொற்களும் தமிழில்லை. ஒருவரைப்பற்றிய எதிரான குறிப்பை அல்லது கருத்தைத் தெரிவித்துள்ளார் என்றால் கூறுபவர் கூறப்படுபவருக்கு எதிரானவர் என்ற பொருள் வருகிறது. கூறுபவர் நடுநிலையுடன் கூறும் கருத்து கூறப்படுபவருக்குக் கேடு விளைவிக்கலாம் அல்லது அவருக்கு எதிரானதாக இருக்கலாம். இங்கே எதிரிடை முதலான சொற்கள் கூறப்படுபவர் குறித்த கருத்து மதிப்பீடே தவிர, கூறுபவர் அவரை எதிரியாகக் கருதித் தெரிவிப்பதாகப் பொருளல்ல. எனவே, பொதுவாக எதிர்மக் கருத்து எனலாம். இதற்கு எதிரான positive remark என்பது சார்மக் கருத்து ஆகும். |
833. Adverse Easement | எதிர்மத் துய்ப்புரிமை பிறருக்கு உரிமையான நிலத்தில் குறிப்பிட்ட சில வரையறைக்கு உட்பட்டு வைத்திருக்கும் பயனுரிமை துய்ப்புரிமை எனப்படுகிறது. உரிமையாளருக்கு எதிரான பயனுரிமையர் போக்கு எதிர்மத் துய்ப்புரிமை எனப்படுகிறது. |
834. Adverse Enjoyment | எதிர்ம நுகர்வு நில உடைமையை அல்லது பயன்பாட்டைச் சொத்துஉரிமையாளருக்கு எதிராக வைத்திருத்தல் எதிர்ம நுகர்வு ஆகும். |
835. Adverse Party | எதிர்த்தரப்பு எதிர்த்தரப்பு என்பது வழக்கின் மறுபக்கம்/எதிர்ப்பக்கம் உள்ள ஆள், ஆட்கள், அமைப்பு, அரசு, போன்றவை. |
836. Adverse Possession | எதிர்ம உடைமை ஒருவர், மற்றொருவரின் உடைமைக்குச் சட்டபூர்வ உரிமை கொண்டாடல் அதற்கு அவர், குறிப்பிட்ட காலம் அச்சொத்தின் உடைமையாளாக அல்லது இடத்தின் வசிப்பாளராக இருந்திருக்க வேண்டும். பொதுவாகச் சொத்து என்பது நிலத்தையே குறிக்கிறது. எதிர்ம உடைமை கோருநர் அ) எந்த நாளில் உடைமையாளரானார் ஆ) உடைமைத்தன்மையின் இயல்பு என்ன? இ) உடைமையாக இருந்த விவரம் மறு தரப்பிற்குத் தெரியுமா? ஈ.) எத்தனைக்காலம் உடைமை நிலை தொடர்ந்துவருகிறது? உ.) அவர் உடைமைத் தன்மை வெளிப்படையாகவும் இடையூறின்றியும் இருந்தது என்பவற்றை ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும். அத்துமீறி நுழைபவர், சட்டத்தின் கண்களுக்குக் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்திற்கு எதிரான 12 ஆண்டுக்கால எதிர்ம உடைமை சட்டமுறையான உரிமை பெற வழி வகுக்கிறது. அத்து என்பது எல்லை என்னும் பொள் கொண்ட தமிழ்ச்சொல்லே. மெது என்பது மெத்து என ஆனதுபோல் அது என்பதிலிருந்து அத்து வந்ததாகச் செ.சொ.பி.அகரமுதலி கூறுகிறது. ஆனால் முடிவு என்னும பொருள் கொண்ட அற்றம் என்னும் சொல்லே அத்தம் ஆகி அத்து ஆனது. |
837. Adverse Remarks | எதிர்மக் குறிப்புகள் ஓர் அதிகாரியின் பணித்தரம், அவரின் பணியிலுள்ள குறைகள், தகுதிக் குறைபாடுகள், செயல்திறனின்மை ஆகியவை குறித்த மேலலுவலரின் குறிப்புகள் எதிர்மக் குறிப்புகள் எனப்படுகிறது. adverse remark என்பது குறையுரை, எதிரான குறிப்புரை, குறைதெரி குறிப்புரை எனக் கூறப்படுகின்றது. எதிர்மக் கருத்து/adverse comment காண்க. அதில் குறிப்பிட்டவாறு எதிர்மக் குறிப்பு எனலாம். |
838. Adverse Title | எதிர்ம உரிமையம் எதிர்ம உரிமையம் வைத்திருப்பவர், அதனை உரிமையின்றி வைத்துள்ள(ஆக்கிரமித்துள்ள)வருக்கு எழுத்து மூலமான அறிவிக்கை அளிப்பதன் மூலம் பின்னவரின் உரிமையத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும். – மார்லோ எதிர் இலிட்டர்[Marlow v. Liter, 87 Mo. App. 584, 589 (Mo. Ct. App. 1901)] மற்றோர் உரிமைக்கு எதிராக உள்ள உரிமையம் எதிர்ம உரிமையம். பாதக நிலையில் உள்ள உரிமையமும் எதிர்ம உரிமையம் ஆகும். தொழில் அல்லது வருவாய் தரும் செயலைத் தொடங்க உரிமை அளிப்பது உரிமம்(license). நில உடைமைக்கு உரிமை அளிப்பது உரிமையம்(பட்டா/title). |
839. Adverse Witness | எதிர்ச்சான்றர் எதிர்ச்சான்றர் என்பவர் எதிர்த்தரப்புச் சான்றர் அல்லர். ஒரு தரப்பு சான்றர் எதிர்த்தரப்புடன் இணைந்து அவர்பக்கம் சாய்ந்து சான்று கூறுபவராக மாறுவது. இதனால் பிறழ் சான்றர் (hostile witness) என்றும் கூறப்படுகின்றார். பிறழ் சான்றரைக் குறுக்கு உசாவல் செய்யும் உரிமையும் கண்டனச்சாட்டு தெரிவிக்கும் உரிமையும் முறையான உசாவலுக்கும் உரிய வழக்காடலுக்கும் இன்றியமையாதன. மேலும், முன்னெடுப்பு வினாக்களால் பிறழ்சான்றரை உசாவலாம். |
840. Advice | அறிவுரை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தெரிவிக்கும் நல்லுரையே அறிவுரை. வழக்குரைஞர்களின் சட்ட அறிவுரைகள் வழக்கு தொடுப்பவருக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கும் இன்றியமையாதவை. தேவைப்படும் சூழல்களில் நீதிபதிகளும் வழக்காளிகளுக்கு அறிவுரை கூறுவது இயல்பான ஒன்றாகும். ஒருவர் இயல்பாகத் தானாகவும் தான்செய்ய வேண்டியது குறித்த கருத்திற்காகத் தானாகவும் மற்றொருவரிடம் அறிவுரை பெறலாம். ஒருவர் மற்றொருவர் கேட்டும் உரிமை அடிப்படையில் கேளாமலும் அறிவுரை வழங்கலாம். இன்ன வகைகளில் செயல்பட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கப்படுவதால் வகையுரை என்றும் கூறுவர். எனினும் பொதுவாக அறிவுரை என்ற சொல்லையே கையாளலாம். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply