மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.

சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர். சிலம்பொலி, சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய  நூல்கள் மூலமும் சிலப்பதிகாரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துள்ளவர்.

நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையத்தில் சுப்பராயன் – பழனியம்மாள் இணையரின் மகனாக  புரட்டாசி 09, 1959 / 24.09.1928 இல் பிறந்தார். (திசம்பர் 22 1929 இல் பிறந்ததாகச் செய்தித்தாள்களில் குறிப்பு உள்ளது.) மனைவி செல்லம்மாள். ஆண் மக்கள் தொல்காப்பியன், கொங்குவேள் பெண் மக்கள் மணிமேகலை , கெளதமி, நகைமுத்து.

கல்விப்பட்டம்:  கணக்கில் இளமறிவியல் பட்டம். தமிழ் முதுகலை, ஆசிரியப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் ஆய்வுத் தலைப்பு ‘இக்காலக் கவிதை உத்திகள்’ என்பதாகும். செம்மொழி நூல்களோடு ஒப்பிட்டு இன்றைய கவிதை உத்திகள் பற்றி வெளியிடப்பட்ட இவருடைய ஆய்வுகள் மிகச் சிறப்பாக உள்ளன.

கணக்கு ஆசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தமிழார்வம் இவரைத் தமிழ்ப்பணியின் பக்கம் ஈர்த்து விட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றித் தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.

1954 ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் இரா.பி. சேது(ப்பிள்ளை) இவருக்கு வழங்கிய ‘சிலம்பொலி’ பட்டமே இவரின் அடையாளமாக நிலைத்து விட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது(1997), பாவேந்தர் விருது(1999) உட்பட 46 விருதுகள் பெற்ற விருதாளர்.

செம்மொழித் தமிழோடு தொடர்புடைய முயற்சிகளிலும் பழந்தமிழர் மரபினையும் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பல அருவினைகள் நிகழ்த்தியுள்ளார்.

முதல் அருவினை இவர் எழுதியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்கள் மிகவும் குறைவு. அவரை அணிந்துரை நாயகர் என்றே அழைத்துப் பெருமை செய்வதைக் காண்கிறோம். பழைய இலக்கிய மரபில் சொல்வதென்றால், தமிழில் ஆயிரம் அணிந்துரைகள் எழுதியவர் என்று இவருக்கு ஒரு பரணி பாடலாம்.

இரண்டாவது அருவினை இவருடைய தொடர் சொற்பொழிவுகள். இவருடைய தொடர் சொற்பொழிவுகள் பழந்தமிழ் மரபினையும், இன்றைய வளர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும். வகையில் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வருகின்ற புதிய இலக்கியங்கள் வரை அனைத்தையும் நன்கு ஆய்ந்து திறம்பட எடுத்துக் கூறுவதில் பெரும் வல்லமை பெற்றவராவார்.

பொதுவாக இராமாயணம், மகாபாரதம் போன்றவையே தொடர் சொற்பொழிவுகளாகச் செய்யப்பட்டன. ஆனால் இவரோ மற்றவர்கள் பெரும்பாலும் சொல்லாத இலக்கியங்களை எடுத்துத் தொடர் சொற்பொழிவுகளாகச் செய்திருக்கிறார். மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராவண காவியம் , பெருங்கதை, சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சீறாப் புராணம், தேம்பாவணி போன்ற இவருடைய தொடர் சொற்பொழிவுகள் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவர் நிகழ்த்தியுள்ள இலக்கியச் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டும். இந்த அளவு பல்வேறு இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர் சொற்பொழிவாகச் செய்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம். தன்னுடைய 22 ஆவது அகவையிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 62 வருடங்களாகச், சிறிதும் ஓய்வு ஒழிச்சலின்றி, தமிழே மூச்சாக, தமிழே பேச்சாக, இலக்கிய பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தாத அருவினையாக, மிக அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.

சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள்,  சீவக சிந்தாமணி, இராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், இராசநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகியவை தொடர்பான தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இலக்கியங்களை மக்கள் மனத்தில் பதித்தவர் எனலாம்.

குறிப்பாக, மணிமேகலை(18 பொழிவுகள்), சிலப்பதிகாரம்(10 பொழிவுகள்), சங்க இலக்கியம்(18 பொழிவுகள்), சீவக சிந்தாமணி குறித்த தொடர் சொற்பொழிவு-15 பொழிவுகள், பெருங்கதை(25 பொழிவுகள்), பிரபந்த இலக்கியங்கள்(12 பொழிவுகள்), சீறாப் புராணம் (20 பொழிவுகள்), முதலாகப் பல்வேறு இலக்கியங்கள் குறித்து இவர் தொடர்சொற்பொழிவுகள் ஆற்றி மக்கள் மனத்தில் இலக்கிய ஆர்வத்தை விதைத்தார். இராவண காவியம் குறித்து மட்டும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 22 பொழிவுகள்,  நாமக்கல்பாவேந்தர் இலக்கிய பேரவையில் 12 பொழிவுகள், சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் 12 பொழிவுகள் எனத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றித் தமிழ் இனமான உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.

இவை தவிர நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றியுள்ளார். இவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முதன்மைக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறினால் அது மிகையாகாது. இவர் கலந்து கொள்ளாத, சொற்பொழிவாற்றாத தமிழ்மேடை எதுவும் இருக்குமா என்பது ஐயமே.

செம்மொழித் தமிழோடு தொடர்புடைய பழந்தமிழரின் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் இலக்கிய நூல்கள் எழுதி வெளியிட்டமை, ஆய்வு அணிந்துரைகள் வழங்கியமை, செம்மொழி நூல்கள்- காப்பியத் தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்-தொடர் சொற்பொழிவுகள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாலடியார், பெருங்கதை ஆகியவற்றை ஆய்ந்து தெளிவுரை எழுதியமை, எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இவர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் அருவினை ஆற்றியவர்; சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுதிகள்) என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய அணிந்துரைகள் செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக, தமிழியல் வரலாற்று ஊற்றுக்கண்ணாக இன்றியமையாச் சிறப்பினவாக விளங்குகின்றன.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற செம்மொழி நூல்கள்பற்றித் தேன்மழை பொழிந்தது போன்ற அருமையான சொற்பொழிவுகளை நிகழ்த்திச் செம்மொழி ஆர்வத்தை வளர்க்கவும், பரப்பிடவும் வழி செய்தார். கடல்மடை திறந்தது போல் தடையின்றிப் பேசும் பேச்சாலும், கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் சுவைக்கு ஒப்பான சொற்பொழிவுகளாலும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார்.

சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார், ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் ‘இளங்கோ விருது’வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.

http://silambolichellappan.com/  தளத்தில் சிலம்பொலியார் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தொடர்பிற்கு திரு இராகுல் காந்தி – 8695410179