சீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு
பகுத்தறிவுச்சுடர், சமூக நீதிச் சிற்பி, தன்மானச்சிங்கம், திராவிட இயக்க வைர விழுது, ஆதி திராவிடர்களின் பாதுகாவலர், சுயமரியாதைச் சுடரொளி என்றும் மேலும் பலவைகயாகவும் சிறப்பிக்கப்பெற்ற சீர்திருத்தச்செம்மல் சு.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் 16.09.1884. அதை முன்னிட்டு அவர்செய்த எண்ணற்ற பணிகளுள் இரண்டை இங்கே நினைவுகூர்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்குத் தனி விடுதி ஏற்படுத்தி ஒப்பற்ற செயல் செய்தார். எனினும் அங்குள்ள மாணாக்கர்களுக்கு முடிதிருத்துநர், முடி திருத்த மறுத்து விட்டார்கள். அதனால், மன்னருக்கும் தனக்கும் முடி திருத்திய தொழிலாளியை வரவழைத்து ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு முடி வெட்டச்செய்தார்.
சிவகங்கை நீதி மன்றத்தில் பிராமணர்களுக்கு என்று தனியாகக் குடிநீர்ப்பானையும் மற்ற சாதியருக்குத் தனியாகக் குடிநீர்ப்பானையும் இருந்துள்ளது. சிவகங்கை வழக்குரைஞரான இராமச்சந்திரனாரின் வழக்காடி ஒருவர் பிராமணர்களுக்கான குடிநீர்ப்பானையில் தண்ணீர் எடுத்து அருந்தி விட்டார்.இதனால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். இதைக் கேள்வியுற்றதும் இராமச்சந்திரனார் நீதி மன்றம் சென்று பிராமணர்க்கான குடிநீர்ப்பானையை எடுத்துப்போட்டு உடைத்து விட்டார். அதற்குப்பிறகு யாருக்கும் தனித்தனித் தண்ணீர்ப் பானை வைக்கத் துணிவு வரவில்லை.
இவைபோல் எண்ணற்ற பணிகளை இச்சான்றோர் செய்துள்ளார். இவைபோல் திராவிட இயக்கத்தினர் ஆற்றிய பணிகளை மறந்து விட்டும் அவற்றால் பயனடைந்துவிட்டும் திராவிடக்கட்சிகள் என்ன செய்துவிட்டன என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தண்ணீரிலும் காட்டிய சாதிப்பாகுபாடுகளை ஒழித்தது திராவிடச்சிந்தனையாளர்கள்தாம் என்பதை இப்பொழுதுள்ளோர் உணரவேண்டும்.
சிவகங்கை இராமச்சந்திரனார் என்னும்தலைப்பில் கவிஞர் கொடைக்கானல் காந்தி ஒரு நூல் எழுதி உள்ளார். அந்நூலில் இருந்து மேற்குறித்த இரு நிகழ்வுகள் பற்றிய செய்திகளைக் கீழே காண்க.
Leave a Reply