சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 15

தாமரையும் பெண்ணும்

கூம்பி  விரிதலால், கூடை சுமத்தலால்,
தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும்
வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற
நேசமிவள்  தாமரைக்கு ஒப்பு .

பொருள்

தாமரை

  1.   இரவில் கூம்பிப் பகலில் விரியும்.
    2 )  தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் .
    3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் .
    4 )  பூவிதழ் திறக்கத் தேனிருக்கும் .
    5 )  தன்னைக் கட்டியிருக்கின்ற நாருக்குக் கூட மணத்தை , வாசத்தைத் தரும் .

பெண்

1)  ஊடலில் கூம்பிக் கூடலில் விரியும் முகத்தைப் பெண் பெற்றிருப்பான் .
2)  பெண்கள் கூடைகளில் பொருட்கள் சுமப்பர் .
3 )  துயரில் தேம்பி அழுவார்கள்:  கண்களில் கண்ணீர் வருகிறது.
4)  வாயிதழ் திறக்கத் தேனிருக்கும்.
5 ) தன்னைக் கைப் பிடித்தோன் கட்டியதாலிக்கயிற்றுக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மங்கலம் உடையதாகப் பார்த்துக் கொள்கிறாள் .

எனவே தாமரை மலரும் , பெண்ணின் இயல்பும் ஒத்துப் போகின்றன.

 – கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி

பட உதவி நன்றி: ‌கெல்டிக்கு இசைத் தளம்