தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 11. சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!

 (முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! தொடர்ச்சி)

தமிழ்நாட்டிலுள்ள உணவகங்களில் தமிழைத் தேடும் நிலைதான் உள்ளது. இதனை முன்பே, “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!” என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் இப்பொதுத் தலைப்பில் அதனையும் குறிப்பிட வேண்டும் என்பதற்காகக் குறிப்பிடுகிறோம்.

முன்பெல்லாம் பெரும்பாலான உணவகங்களின் பெயர்களைக் ‘கிளப்’ எனக் குறிப்பிட்டனர். பாவேந்தர் பாரதிதாசன் தமிழியக்கத்தில்,

உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்’பெனவேண்டும் போலும்!”

எனக் கேட்டிருப்பார். ‘கிளப்’ என்பது குறைந்திருந்தாலும் ‘ஓட்டல்’ என்பதே எங்கும் காணப்படுகிறது. இதனை ஓட்டவேண்டாவா?

உணவகங்களின் பெயர்ப்பலகைகள் 1. பெரும்பாலும் ஆங்கிலத்தில் 2. சிறுபான்மை தமிழிலும் ஆங்கிலத்திலும், ஆனால் ஆங்கிலத்திற்கு முதன்மை அளித்து உள்ளன. சில உணவகப் பலகைகள் தமிழில் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும் உணவக விவரம், முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில்தான் குறிப்பிட்டிருப்பர். பெயர்ப்பலகைகள் பற்றித் தனியாகக் கூறித் தீர்வும் கூற இருப்பதால் இங்கே விவரிக்கவில்லை.

முகப்பில் இன்றைய சிறப்பு அல்லது உணவு ஆயத்தமாக உள்ளதா என்பன போன்ற அறிவிப்புகள் ஆங்கிலத்தில்தான், ஆங்கில ஒலிபெயர்ப்பில்தான் இருக்கும்.

உணவகத்திற்குள் நுழைந்தவுடன்  காசாளர் குறிப்பிருப்பின் ஆங்கிலத்தில் இருக்கும். கை கழுவுமிடம் இருப்பதைக் குறிக்கும் கைகாட்டி அறிவிப்பு ஆங்கிலத்தில்தான் இருக்கும். கை கழுவுமிடமும் ஆங்கிலத்தில்தான் குறிக்கப்பெற்றிருக்கும்.

கை கழுவி விட்டு அல்லது கழுவாமல் மேசையில் அமரப்போனால் சில மேசைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை ஆங்கிலத்தில்தான் குறிப்பிட்டிருப்பர். உணவு விலையைப் பார்க்கலாம் எனச் சுற்றிலும் பார்த்தால் ஆங்கிலத்தில்தான் உணவுக் கட்டண விவரம் குறிக்கப்பெற்றிருக்கும். அன்றன்றைய சிறப்பு உணவும் ஆங்கிலத்தில்தான் குறிக்கப்பட்டிருக்கும். தமிழில் குறிப்பிட்டால் வரும் ஆங்கிலேயர்கள் விவரம் அறியாமல் சாப்பிடாமல் சென்று விட்டால் என்ன செய்வது!?

 அமர்ந்ததும் நம்மிடம் கேட்கும் உணவு ஆணையும் ஆங்கிலத்தில்தான்  அல்லது தமிழ் இணைப்புச் சொற்களுடனான ஆங்கிலத்தில்தான் இருக்கும். பரிமாறுநர் வந்து உணவு நிரலைத் தருவார். பார்த்தால் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். சிலர் தமிழிலும் குறித்திருப்பர். என்றாலும் அது தமிழாக இருக்காது. பெரும்பாலும் ஒலி பெயர்ப்பில் இடம் பெற்றிருக்கும். உணவுப் பெயர்கள் தமிழில் இருக்காது. உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலிய அனைத்துப் பெயர்களும் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் எழுத்திலான இந்தியில் குறிக்கப்பெற்றிருக்கும். தோசை, வடை முதலான தமிழக உணவுகளும் தோசா, வடா என ஆங்கிலத்தில்தான் குறிக்கப்பெற்றிருக்கும்.

எந்த உணவகத்திலும் தண்ணீர் என்று கேட்டாலும் சோறு என்று கேட்டாலும் பரிமாறுநருக்குத்  தெரிவதில்லை. சோறு என்பதை உணவகங்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் அறிந்தது வெள்ளைஅரிசி/ஒயிட்டு (இ)ரைசு மட்டுமே. (இ)ரயித்தா (இ)ரைத்தா), ஆலூ, பப்பயா முதலானவற்றைத்தான் உணவகங்கள் அறியும். இவர்களுக்குத் தயிர், பச்சடி, கிழங்கு, பப்பாளி முதலியன அறியப்படாதவை.

தமிழில் கேட்கும்பொழுது “எந்த மொழியில் கேட்கின்றீர்கள்” என்று கேட்பவர்களும் உண்டு.  தமிழில் சொன்னால் புரியாது என்று சொல்பவர்களும் உள்ளனர். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உணவுப்பெயர்களைக் குறிப்பிட்டு அச்சொற்களை மக்கள் நாவில் நடமாடச் செய்பவர்களால், தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால், அவற்றையும் மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற எண்ணம் ஏன் வரவில்லை? எனத் தெரியவில்லை.

 விதிவிலக்காகச் சானகிராமன் உறைவகங்கள் (பாளையங்கோட்டை, திருநெல்வேலி) ‘தெரிந்த உணவு தெரியாத பெயர்’ எனக் காய்,கனி, பானங்களுக்கு வழக்கிலுள்ள சொற்களைக் குறிப்பிட்டு பச்சைப் பூக்கோசு(பிராக்கோலி), இன்முறுக்கு(சிலேபி), வெதுப்பி(பிரெடு), பாற்சாறு(மில்க்(கு) சேக்(கு)), மென்குழம்பு(சாம்பார்) என்பனபோல் நல்ல தமிழ்ப்பெயர்களைக் குறிக்கின்றன. ஆனால் இவர்களின் உணவு நிரலும் ஆங்கிலத்தில்தான்.

உண்டு முடித்ததும் நம்மிடம் கொடுக்கும் கட்டணச்சீட்டும் ஆங்கிலத்தில், நாம் பண அட்டைக் கொடுத்தால் கிடைக்கும் பணப்பெறுகைச் சீட்டும் ஆங்கிலத்தில். நன்றியறிதலுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள் தமிழர்கள் என உலகம் கூறுகிறது. ஆனால், நாம் ‘நன்றி’ மறந்து ஒரு தலைமுறையாகிவிட்டது. எனவே, உணவகத்தில் இருந்து வெளியேறும் போது நம்மிடம் “தேங்க்கியூ சார்/மேடம்”தான் சொல்லப்படும். ஐயாவையும்  அம்மாவையும்தான் நாம் கைவிட்டுவிட்டோமே! எனவே, வெளியேறிய பின்னர்க் காவலர்கள் வாயில் வருவனவும் தமிழல்ல என்பதில் வியப்பில்லை.

சில உணவகங்களில் பொன்மொழிகள், சுற்றுலாத் தலங்கள் குறிக்கப்பெற்றிருக்கும். இவையும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ?

நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் இடங்களில், மரக்கறி உணவா? இறைச்சி உணவா? என அறிந்து கொள்ள “சைவமா? அசைவமா?” எனக் கேடடால் “அப்படி என்றால் என்ன” என்று கேட்பவர்களாகத்தான் உணவகப் பணியாளர்கள் உள்ளனர்.

இன்னும் மிகுதியாகக் கூறலாம். எடுத்துக்காட்டிற்குச் சிலவற்றைக் கூறியுள்ளோம்.

தமிழைப் பயன்படுத்தாதவர்களைத் திட்டினால் தமிழ்ப்பற்று என எண்ணுவோர் உணவுப்பட்டியல்களைத் தமிழில் அளித்துத் தமிழில் குறிக்கச் சொல்வதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால் உணவகங்களிலும்  தமிழை எதிர்பார்க்கலாம்.

“உணவுச்சுவையுடன் தமிழ்ச்சுவையும் வழங்க வேண்டியவர்கள்,  தமிழில்லாத இடமாக உணவகத்தை ஆக்குகின்றனர்.”

“உணவுவிவர-விலைப்பலகைகளில் உணவுகளைத் தமிழிலேயே குறிப்பிடுங்கள்! உணவு நிரல்களில் தமிழிலேயே  தெரிவியுங்கள்!”

“இன்றைய வாழ்விற்கான சுவையான உணவு தர விரும்பும் நீங்கள், நிலைத்த வாழ்விற்கான சுவையான தமிழைத் தர மறுக்காதீர்!”

என முன்பே குறித்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

புரட்சிக்கவி பாரதியார், “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்றார். நாமோ தமிழ்ச்சொற்களைச் சொல்ல மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாம். என்று திருந்துவோம் நாம்? அரசு துணிந்து நடவடிக்கை எதுவும் எடுத்து விடியலைக் காணச் செய்யுமா?

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள் 644)

– இலக்குவனார் திருவள்ளுவன்