செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! – பேரா சிரியர் சி. இலக்குவனார்
செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்!
செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய், செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின் தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.
தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.
திரு.வி.க.வினுடைய எழுத்துகளில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும். அவர் யாத்த நூல்களுள் ‘பெண்ணின் பெருமை’, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது. ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. ‘கடுவன் காட்சியும் தாயுமானாரும்’, அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. ‘கிருத்துவின் அருள்வேட்டல்’, அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.
அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!
தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி. இலக்குவனார்
000
திரு.வி.க.வின் கருத்துத் துளிகள்
தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்
பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு! அன்பின் விளைவு! அன்பின் வண்ணம்!
தமிழ்த்தென்றல் திரு.வி.க.:
திருக்குறள் விரிவுரை: அறத்துப்பால்: பக்கம்.614
000
பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும்
மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்க; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவு என்னும் ஞானம்பெற எவருங் காட்டுக்குப் போக வேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக வாழ்கிறோம்’ என்று எண்ணங் கொண்டு வாழ்வதேயாகும்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. :
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்: பக்கம்.23
000
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது
திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது.
திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம்.
திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
திருக்குறளின்படி ஒழுகுங்கள்!
தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்திபூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியை -பழைய கிராமப் பஞ்சாயத்தை – தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து, வீடுபேற்றை அளிக்கவல்ல ஞான அரசியலைப் பெற முயலுங்கள். இதன் பொருட்டு உங்கள் உடல் பொருளை ஆவி மூன்றையும் தத்தஞ் செய்யவும் சித்தமாயிருங்கள். உங்கள் முயற்சியால் எல்லா நலனும் ஆண்டவனருளால் விளையும்.
–தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
கீர்த்தனையால் விளைந்த நலன்சிறிது; தீங்கோ பெரிது!
தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.
கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத் தாங்க அவற்றால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்:
முல்லை, பாரதிதாசனின் முதல் வெளியீடு,பக்கம் 05
தினச்செய்தி, 26.08.2019
Leave a Reply