தலைப்பு-சேரனின்தவறு- மன்னிப்போம்- இல.திருவள்ளுவன் ;thalaippu_seranthavaru_mannippoam_ila.thiruvalluvan

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு!

இருப்பினும் மன்னிப்போம்!

  இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104)

 நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை  அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக் கொள்ள வேண்டும். பயன்பெறுவோர்தாம் பிறரது சிறு உதவியையும் பேரளவாகக் கருதி  மதிக்க வேண்டும். ஆனால், பலரும்  தாம் செய்யும்  சிறிய உதவியைக்கூடப் பிறருக்கு மிகப்பெருமளவு உதவி செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர். கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டியவையே உதவிகள். ஆனால், தாம் செய்யும் தினை அளவு உதவிக்கு, உதவி செய்யப்பட்டோர் தம் வாணாள் முழுவதும் நன்றிக்கடனாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே நேரம் இத்தகையோர் பிறர் தங்களுக்குச் செய்யும் பேருதவிகளைக்கூட ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. உலக இயற்கை இதுதான்.

  இதற்குத் தானும் விதிவிலக்கல்ல எனச் சேரன் நடந்து கொண்டார்; “யாகாவாராயினும் நா காக்க (திருவள்ளுவர், திருக்குறள் 127)   என்பதையும் மறந்து விட்டார்.

  கன்னா பின்னா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன் தனக்கான மன அழுத்தங்களுக்கான காரணங்களை அறிந்து அவற்றைக்  களையாமல் அறிவு தடுமாறிப் பேசியுள்ளார்.

  “தமிழ், தமிழன் என்று நாம் சொல்கின்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுகிறது. ஆனா அந்தத் தமிழன்தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கொண்டுள்ளான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமாகப் படத்தை இணையத்தளங்களில் வெளியிடுகிறவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக நாம்-திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்துப் போராடி இருக்கிறோம். எங்களுடைய பலவற்றை இழந்துவிட்டுப் போய் அவர்களுக்காகப் போராடி இருக்கிறோம் ஆனால் அதைச் சார்ந்த சிலர்தான் இதைச் செய்கிறார்கள் என்று  கேள்விப்படுகிறபோது, ஏனடா இவர்களுக்காக இதைப் பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது”  என்பனதாம் அவர் உதிர்த்த முத்துகள்.

  அப்படியாயின், இராசீவுகாந்தியைக் கொன்றவர்கள் ஈழத்தமிழர்கள் எனச்சொல்லி ஈழத்தமிழினத்தையே கருவறுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும் மத்திய அரசிற்கும் தன்னை ஈழத்தமிழ் உணர்வாளனாகக் காட்டிக் கொள்ளும் சேரனுக்கும் என்ன வேறுபாடு?

 சிலர்  செய்யும் தவறுகளுக்காக ஈழத்தமிழினத்தையே குற்றம் சொல்லும்சேரன், திரைப்படம் வெளியாகும் முன்னரே, பாடல், படக்காட்சிகள், முன்னோட்டக் காட்சிகள் முதலானவை  வெளியாவதற்கும் இவர்கள்தாம் காரணம் என்கிறாரா?

  உலகச்சந்தையில் தமிழ்த்திரைப்படடம் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள்தாமே! புலம்பெயர் ஈழத்தமிழர்களால்தான் படைத்திருட்டு நடக்கின்றது என்றால், படங்களை அயல்நாடுகளில் முதலில் வெளியிடுவதேன்? தமிழ்நாட்டில் வெளியிட்ட சில நாள் கழிந்தபின்னர் அங்கு வெளியிடலாமே! அப்படிச் செய்தால் பண அறுவடை சிறப்பாக இராதே!

    சேரன், திரையிலிருந்து மனை (சி டு எச்) என்னும் திரைப்படங்களை வீட்டிலிருந்து பார்க்கும் வகையில் படப்பேழை வழங்கும் நிறுவனம் நடத்துகிறார். அவர் மகள் நிவேதா பிரியதர்சினியும் காணொளிப் பேழை வழங்கும் நிறுவனம் நடத்துகிறார். வைப்புத்தொகையைத் திரும்ப அளிக்காச்சூழலில் இவர் தந்த காசோலை திரும்பி வந்த வழக்கில் தருமபுரிமாவட்ட வழங்குநர் பிரசன்னா வழக்கு தொடுத்துள்ளார். அழைப்பாணைகளை மதிக்காமல் உரிய நாள்களில் நீதிமன்றம் செல்லாததால் இவர் மகள் கைதுசெய்யப்பட்டார். மகளின் காதல் சிக்கலால் மனம் கலங்கியிருந்த சேரன். இந்நேர்வுகளில் நீதிமன்றம் சென்றது முதலான மானக்கேட்டுச் சிக்கல்களால் தடுமாறியுள்ளார் என்றே  அவர்பால் அன்பு உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால்,  “பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா (திருவள்ளுவர், திருக்குறள் 417) அரும் பண்புடையவராக அல்லவா சேரன் விளங்க வேண்டும்? அவருக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சிலர் குற்றம் இழைத்திருப்பினும் அதனை இனத்திற்கே பொதுவாகக் கருதிக் குற்றம் சொல்லக்கூடாதல்லவா? பின்னர் சமாளிப்பதாகக் கூறிய உளறலில் அங்குள்ள 200 அல்லது 300 ஈழத்தமிழர் குடும்பங்கள்தம் மீது அன்பு  கொண்டு உள்ளதாகவும் தன்னைப்பற்றித் தவறாகக் கருதவில்லை என்றும் சொல்லியுள்ளார். தான்  சொல்லும் குற்றச்சாட்டு தன் மீது அன்பு செலுத்தும் அக்குடும்பத்தினர் மீதும்தான் என்பதை உணரவில்லையே! அவர் கூறக்கூடிய திரைத்திருட்டாளர்களைப்பற்றிய விவரங்களை அவர்களிடமே கூறித் தடுக்கச் செய்திருக்கலாமே! ஏதோ சில கூட்டங்களில் உணர்வு பொங்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப்பேசிவிட்டால் அவர்களைப்பற்றி என்னவெல்லாமும் கூறலாம் என உரிமை படைத்தவராகக் கருதுகிறாரே!

   உயிர் ஈகம் செய்த செங்கொடி முதலானவர்களின் கால்தூசுக்கு  ஈழ ஆதரவுப்பேச்சு இணையாகுமா?

  இனப்படுகொலையில் தப்பியவர்களுக்குச் செயற்கை உறுப்புகள் அளித்தும், கல்வியுதவி அளித்தும் பிற வகையில் அறக்கொடை வழங்கியும் தொண்டாற்றுகிறார்களே, பலர்! அவர்களெல்லாம் இப்படித்தான் எண்ணுகின்றனரா?

  உற்றார் உறவுகளை, உறுப்புகளை, உடைமைகளை, தாய்மண்ணை இழந்து அல்லறும் ஈழத்தமிழர்களுக்கு இப்பேச்சால் சிறிதளவேனும் பயன் விளைந்திருக்குமா? இவ்வாறு பேசும் நமக்கும் தெரியும் அடிமைகளான நம் பேச்சால் எந்தப் பயனும் விளையாதுஎன்று. எனினும் அரசுகளின் கவனங்களைக் கவர்கிறோம் என ஓர் ஆறுதல்! நட்டாற்றில் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இதனால் எப்பயனும் விளையாது என்று தெரியும். எனினும்,  நம் பின்னால் தமிழ் உறவுகள் நிற்கிறார்கள் என்று தேறுதல்!

   சேரன், தம் மகளின் காதல் சிக்கலால் மனம்குலைந்தபொழுது பொய்க்காதல் குறித்துத் திரைப்படம் எடுப்பதாகக் கூறினார். இனிமேல் எடுக்கலாம். அவ்வாறு எதுவும் ஈழத்தமிழர் உரிமை யிழந்து அல்லறுவது குறித்தோ இங்கே அவர்கள் முகாம்களில் தாங்கும் இன்னல்கள் குறித்தோ எதுவும்  திரைப்படம் எடுத்து, அல்லது நூல் படைத்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினாரா? ஒன்றுமில்லையே!

  ஈழத்தமிழர்களுக்காக மக்களை ஒன்று திரட்டிப்பெரும்போராட்டம் நடத்துவதாகக் கூறினாரே! அப்படி எதுவும் நடத்தினாரா? திரைப்படமாயையில் சிக்கியுள்ள  தமிழர்களுக்கு அவர்கள் வழியில் திரைப்படக் கலைஞர்களை ஒருங்கிணைத்து  மத்திய மாநில அரசுகளை ஈழத்தமிழர்நலன்பால் திருப்பியிருக்கலாமே!

 மனப்பூர்வமாகவோ விளம்பரப்புகழுக்காகவோ உணர்ச்சிபொங்கப்பேசினால் பேச்சுக்குரியோர் தமக்குக் கடமைப்பட்டவர் என எண்ணும் போக்கு சரிதானா?

  இத்தகைய எண்ணங்களுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஒரு காரணம். அவர்கள் உண்மையாகப் பாராட்டப்பட வேண்டியவர்களை அழைக்க மாட்டார்கள். விளம்பரப்புகழுடையவர்களையும் ஆரவாரப் பேச்சினரையும் அழைத்துச் சிறப்பிப்பார்கள்.

  காற்றில் உயரப்பறந்து கோபுரத்தில் ஒட்டிக்கொள்ளும் தாளினால் கோபுரமே அழகாக விளங்குகிறது என  யாரேனும் கூறினால் சிரிக்கமாட்டோமா? ஆனால், விளம்பரக்காற்றில் உயரப் போகிறவர்களை நாம் கொண்டாடுகிறோமே! உண்மைத் தொண்டர்களைப் புறக்கணிக்கின்றோமே!

 எனவே, ஒன்றும் செய்யாதவர்களுக்கும் தாங்கள் மிகப்பெரும் அருவினை ஆற்றியதுபோன்ற எண்ணம் வந்துவிடுகிறது.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 220)

பொதுநலனுக்கு நாம் உதவுவதால் நமக்குக் கேடு விளைந்தால்,அக்கேடு தன்னை விற்றாவது பெறும் தகுதிக்குரியதாகும்.

  அதே நேரம், தனக்கு வேறு எதனாலோ  கேடு வருவதைப், பொதுநலனில்  ஈடுபட்டதால் வந்ததாகக் கருதுவது அறியாமையாகும். உண்மையிலேயே சேரன் ஈழத்தமிழர்களுக்கு உதவி, அதனால்  கேடு விளைந்திருந்தது எனில் அது குறித்துப் பெருமையடைய வேண்டும்; தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக்கூடாது.

  சேரன், தான் பேசியது தவறு என வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனமின்றித் தன்னைப் பெருந்தன்மையாளராகக்காட்டிக்கொள்வதாக எண்ணி ஏதேதோ சொல்கிறார். நடுநிலையுடன் சிந்தித்துப்பார்த்து ஈழத்தமிழர்கள் மீது சுமத்திய பெரும்பழிக்கு நாணி உள்ளத்தளவிலாவது வருந்த வேண்டும் அவர். படிப்படியாக உயரும் சிறப்புடைய சேரன் வருந்துவார் என எண்ணி நாமும் மன்னிப்போம்!

-இலக்குவனார் திருவள்ளுவன்