(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி)

“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு


சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும் இடத்தில் விளக்குக் கம்பத்தைக் குறிக்கிறது. ஆனால் இதே சொல் check post என்னும் இடத்தில் தணிக்கைச் சாவடியைக் குறிக்கிறது. இந்த வேறுபாடுகளைப் புரிந்தே கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் என்கிறார்.

ஆங்கிலத்தில் ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. எ. கா. Bill என்பது பறவையின் அலகு என்பதையும் பொருள் வாங்கும்போது தருகின்ற விலைப்பட்டியலையும் குறிக்கிறது. ஆனால் தமிழில் இடத்துக்கு ஏற்ப, பொருளுக்கு ஏற்பத் தனித்தனிச் சொற்கள் கையாளப்படுகிறன. இதுவும் தமிழுக்கு உரிய சிறப்புகளில் ஒன்றுதான்.

இற்றை நாளில், தமிழில் சொல்லாழமிக்கக் கட்டுரைகளை வரைவதில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முன் நிற்கிறார் எனக் கருதுகிறேன்.


எடுத்துக்காட்டாக, இக் கட்டுரையின் 32 ஆம் பக்கம்: “கூட்டுச் சொற்கள் நீளமாக அமைகின்றன”.

“மூலச் சொல்லை நாம் பழக்கத்தின் காரணமாகச் சுருக்கிப் பயன்படுத்தி வருகிறோம்.”

“ஆனால் சொல்லாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது மூலக் கூட்டுச் சொல்லைத்தான் கருத்தில் கொள்ள வேண்டி வரும்.”

போன்ற பல இடங்களில் எடுத்துக் காட்டுகள் தேவைப்படுகிறன என்பதைக் கட்டுரை ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையை நுனிப்புல் மேய்வதுபோல் படித்தால் விளங்கிக் கொள்ள முடியாது. மாறாக நிதானமாக, ஆழ்ந்து, பொருள் புரிந்து படித்தால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.

சங்க இலக்கியக் கலைச்சொற்களின் மீள் பயன்பாடும் – மீளாக்கமும்” என்னும் நான்காம் கட்டுரையில் கலைச் சொற்களைப் பயன்படுத்துவோரின் தமிழ் அறிவு பற்றி ஆசிரியர் பேசுகிறார்.

வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள் தங்களது தமிழ் நூல்களில் கலைச்சொற்களை ஆர்வத்தோடு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குச் சரியான தமிழறிவு இன்மையால் சரியான கலைச்சொற்களைப் பயன்படுத்தாமல் ஒலிபெயர்ப்புச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையுமே பயன்படுத்துகின்றனர் என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கும் இவர், கலைச்சொற்களைப் பயன்படுத்தும் ஆர்வலர்களுக்குக் கலைச்சொற்களைப் பற்றியும் கலைச்சொற்களைப் பயன்படுத்தும் முறை பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் கலைச்சொற்கள் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் தமிழுக்கு ஏற்படும் இழுக்கு பற்றியும் பழஞ் சொற்களின் மீள் பயன்பாடு பற்றியும் மீளாக்கம் பற்றியும் இக்கட்டுரையில் விதந்தோதுகிறார்.

சங்க இலக்கியச் சொற்களில் இருந்து கலைச் சொற்களைத் தெரிவு செய்தலும் வேண்டும்; மீட்டுருவாக்கம் செய்தலும் வேண்டும். தேடுதல், அறிதல், பொருத்தல், ஆக்கல் என்பன கலைச்சொல்லுக்கு அடிப்படையாகும்.

தமிழ்ப் பயன்பாட்டில் ஆர்வம் உள்ளதாக வெளிப்படுத்திக் கொள்ளும் பலர் எளிமை கருதிப் பிற சொற்களைப் பயன்படுத்துவதே சரி என்னும் நிலைப்பாட்டில் உள்ளனர். இத்தகையோர் தமிழ்ப் பகைவர்களைவிடக் கொடியோர் எனலாம்.

விலை மதிப்பில்லாத் தமிழ்ச் சொற் செல்வங்கள் நமது மொழியில் ஏராளமாக உள்ளன. இதனை விடுத்து, நம்மைவிட வறிய மொழியிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? என்னும் வினாவை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் எழுப்புகிறார். இந்த வினாவுக்கு யாரால் விடையளிக்க முடியும்? வினா நியாயம்தானே?

தமிழ்ச் சொல் வளத்திற்கு வங்கியாகப் பெரிதும் உதவுவது சங்க இலக்கியச் சொற்களே யாகும். சங்க இலக்கியத்திலிருந்து வேளாணியற் சொற்கள், வானியற் சொற்கள், ஆட்சியியற் சொற்கள், மருத்துவ இயற் சொற்கள், கணக்கியற் சொற்கள், பிற அறிவியற் சொற்கள் போன்ற பல்வேறு இயற் சொற்களை அடையாளம் காண வேண்டும். இச் சொற்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

நம்மிடையே ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற தனித்தனிக் கலைச் சொற்கள் இருக்கின்றன. அவ்வாறு உள்ளபோது ஒரு சொல்லையே பல பொருள்களில் பயன்படுத்தும் போக்கினை மாற்ற வேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் வலியுறுத்துவதை யாரும் குற்றப் பார்வையுடன் பார்க்க மாட்டார்கள்.

ஐந்தாவது கட்டுரை, “ஒரு சொல் – பல் பொருள் கலைச் சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல்” என்பதாகும்.

ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் பிற மொழிகளைப் போலவே தமிழ் மொழியிலும் உண்டு. ஆனால் தமிழில் இது மிகுதியாக உள்ளது. இதனைத் தவிர்க்க வேண்டும். கலைச்சொல்லாக்கம் செய்பவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு சொல்லுக்கும் இடத்திற்கேற்ப வெவ்வேறு பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, Police, Security, Warden, Warder போன்ற பல ஆங்கிலச் சொற்களுக்கும் பொதுவாக நாம் காவலர் என்னும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். இதற்கு மாறாகக் காவல் என்னும் அடிப்படையில் வெவ்வேறு சொற்களை உருவாக்க வேண்டும் என்கிறார்.

Police                – காவலர்              
Warder              – அரணாளர்
Warden             – பேணாளர்
Guard                – காப்பாளர்
Guardian         – ஓம்புநர்
Security           – பாதுகாக்குநர்
Gate- keeper     – வாயிற்காப்போர்
Watchman         – காவலாள், காவலாளி

இவ்வாறு நாம் வகைப்படுத்திக் கொண்டால் எளிமையும் சொற் சிக்கனமும் இருக்கும் என்று ஏராளமான ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற கலைச் சொற்களை உருவாக்கிக் காட்டுகிறார்.

இவ்வாறு உருவாக்கித் தந்து, எப்படிக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும், ஏன் உருவாக்க வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் யாவை போன்றவற்றை மிக அழகாக விளக்கிச் செல்லுகிறார். இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி தமிழ்ச் சொற்களஞ்சியத்தை நிரப்ப வேண்டும் என்று கட்டுரையை முடிக்கிறார்.

மிக அருமையான கட்டுரை. புதிய புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சொல்லாய்வு அறிஞர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இக்கட்டுரையைத் திரும்பத்திரும்பப் படிப்பது பெரும் பயனைத் தரும்.

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!” என்பது ஆறாவது கட்டுரையாகும்.

அறிவியல் என்றால் ஆய்வகத்தில் ஆய்வு செய்வது மட்டும் அல்ல; “கூர்ந்து நோக்குவதாலும் ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாமும் அறிவியலே என்பது இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கோட்பாடாகும். இந்தக் கோட்பாடு சரியே என்று தோன்றுகிறது.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் தொல்காப்பியரின் கூற்றுக் கிணங்க பொருள் குறித்து அமையும் சொற்கள் யாவும் அறிவியல் தன்மை கொண்டிருப்பதுதான் தமிழுக்கு உள்ள சிறப்புத் தன்மை. ஆனால் காலம் செல்லச் செல்ல பல சொற்களின் அறிவியல் தன்மை நமக்குப் புரியாமல் போய்விட்டது. எனினும் இன்னும் நம்மிடையே வழங்கும் பல சொற்கள் அறிவியலை உணர்த்துவதை உணர முடியும் என்று கூறி சில சான்றுகளையும் தருகிறார்.

(தொடரும்)

நன்றி : தமிழணங்கு, மலர் 1: இதழ் 3, பக்கங்கள் 39-49

திறனாய்வாளர்:

முனைவர் புதேரி தானப்பன், புது தில்லி

நூற்பெயர்: “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்

ஆசிரியர்: ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். பேச: 9884481652.

வெளியீடு: மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை. பேச: 7401292612.

பக்கங்கள்: 124; விலை உரூ. 120/-