தலைப்பு-தகுதியற்றனவற்றை ஏற்கும் நீதி மன்றம்-இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_semmozhivazhakku_thakuthiyatrana-thiru

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம்

 – செம்மொழி வழக்கில் தீர்ப்பு

தமிழுக்குக்  குரல் கொடுக்கும் காந்தி

தனித்து விடப்படலாமா?

 

  உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது.  விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர்.  செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது போல்வதன்று! தகுதியின்அடிப்படையில் வழங்கப்பட வேண்டியது. ஆனால்,  தனித்து இயங்கும் வல்லமை யற்ற கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாள மொழிகளுக்கும் மத்திய அரசுசெம்மொழித் தகுதியேற்பை வழங்கியுள்ளது.

  இந்த முடிவை எதிர்த்து மூத்த வழக்குரைஞர்  ஆர்.காந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இதனை உசாவிய உயர்நீதிமன்றத் தலைமைநீதிபதி எசு.கே.கவுல்,  நீதிபதி மகாதேவன் ஆகியோரைக்கொண்ட முதல் அமர்வு தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

மாற்று மொழியின் வளர்ச்சியிலோ வீழ்ச்சியிலோ வேறொரு மொழியின் வளர்ச்சி இருக்காது. கலை, இலக்கியத்துக்கான பங்களிப்பு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு மொழிக்கான  முதன்மை இருக்கும். அந்தக் குழுவின் முடிவு இந்த நீதிமன்றத்தில்  அளிக்கப்பட்டது. அதைப் பார்க்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.”  எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 இது ஒருவகையில் சரி என்றாலும் சூழ்நிலைக்கேற்பத்தான் அமையும்.  ஒரு மொழியின் ஆதிக்கம் பிற மொழிமேல் ஏற்படுமேல் பாதிப்பிற்குள்ளாகும் மொழிஅழிவைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சான்றாக இந்தியத்துணைக்க்ணடம் முழுவதும்  கோலோச்சிய தமிழ்மொழி சமற்கிருதத்தின் ஆதிக்கத்தால் சிதைந்து பல்வேறு மொழிகளாக உருவெடுத்துத் தன் ஆட்சிப்பரப்பில் சுருங்கியுள்ளது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் இந்திய மொழிகள் பலவும்  வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் நன்கு வளர்ச்சியடைந்த மொழிகளும் இன்றைக்குக் காணாமல் போனதன் காரணமும் இதுதான்.  தீர்ப்பில் குறிப்பிட்டவாறு பயன்பாட்டின் அடிப்படையில்தான் மொழியின் முதன்மை இருக்கும்  ஆனால், ஒரு மொழி ஆதிக்கம் பிற மொழியின் பயன்பாட்டைக் குறைக்கின்றதே! அல்லது இல்லாமல் ஆக்கிவிடுகின்றதே ! தமிழ்நாட்டில்  சமற்கிருதம், தெலுங்கு, ஆங்கில மொழிகளின் பயன்பாடுகள் தமிழின் பயன்பாட்டை நாளும் குறை்து வருகின்றனவே!  எனவே, தனித்து ஆராயாமல் பொதுவாக இவ்வாறு கூறுவது சரியல்ல. என்றபோதும் இப்போது இதுவல்ல  முதன்மையானது.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)

என்பதே பின்பற்றவேண்டிய அறநெறி. அஃதாவது, அரசு பொதுத்தன்மையில்  ஒரே சீராக நோக்காமல் தகுதிக்கேற்ப சிறப்பிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

  அப்படியாயின் செம்மொழி அறிந்தேற்பிற்கு ஒத்த தன்மையில் முடிவெடுக்காமல் தகுதியடிப்படையில்தானே நோக்கவேண்டும். அவ்வாறு நோக்கவில்லை என்றுதான் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தமிழ்உலகின் சார்பில் வழக்கு தொடுத்துள்ளார்.

  அவ்வப்பொழுது பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதியேற்பு வழங்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக, நீதிப்பேராணை எண்கள் 28334/2008, 18810 / 2008, 27405/2014, 5813 & 5814 / 2015, ஆகியவற்றின் வழக்குகளும் தொடர்பான  பல்வகை முறையீடுகளும் சேர்த்து உசாவப்பட்டு  ஆடி 24, 2047 / ஆக.08, 2016 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதி  கொடுக்கக்கூடாது என்பதல்ல. அரசு வரையறுத்த விதிகளுக்கு மீறான மொழிகளுக்குச் செம்மொழி அறிந்தேற்பு வழங்கக்கூடாது என்பதுதான். இதன்படிப் பிற மொழிகள் அறிந்தேற்பிற்குத் தகுதியற்றவைதாம். எனினும் நேரடியாக அவ்வாறு வழக்கு தொடுக்கவில்லை.

  மத்திய அரசு, சாகித்திய அகாதமி மட்டுமல்லாமல், கருநாடக அரசு,  ஆந்திர அரசு, தெலங்கானா அரசு, கேரள அரசு, ஒரியா அரசு, எனப் பிற அரசுகளும் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. ஒரு மாநில அரசு என்றால், அதன் தலைமைச்செயலர், உள்துறைச்செயலர், கலைபண்பாட்டுத்துறைச் செயலர் எனப்பலர் இணைந்துள்ளனர். தனியர் சிலரும் இணைந்துள்ளனர். எனவே, இவர்கள் சார்பில் பெரும் வழக்குரைஞர் பட்டாளமே வழக்கிற்கு எதிராக அணிவகுத்து நின்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்குரைஞர் காந்தி மட்டும்தனித்து விடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இவ்வழக்கில்  இணைத்துக்கொள்ளவில்லை. தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் வழக்கில் இணைவது குறித்து வழ.காந்தியுடன் பேசியுள்ளோம். தன்னிடம் விலை பேசுவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும், ஏதேனும் ஓர் அமைப்பு இதில் இணைந்து கொண்டு  பிறகு அச்சத்தால் விலகினால் நான்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். எனவே,  அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவர்கருத்திற்கு மதிப்பளித்து இணையவில்லை. எனினும் பிற மாநில அரசுகள் வழக்கில் இணையும்பொழுது தமிழக அரசு ஏன் தூங்கியது?

  செம்மொழி அறிந்தேற்பிற்குத் தி.மு.க.வும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசும் பாராட்டப்படவேண்டியவையே! அதே நேரம், காலவறையரைக் குளறுபடிகளுக்குக் காரணமும் இவைதான்! எனவேதான் வழக்கில் அமைதி காத்துள்ளன. “எல்லா மாநிலங்களிலும் எங்கள் கட்சி உள்ளது. எனவே குறிப்பிட்ட மொழிக்குச் சார்பாக அல்லது சில மொழிகளுக்கு எதிராக இருக்கமாட்டோம்” எனப் பேராயக்கட்சி கருதுவது தவறு. நடுவுநிலைமை என்பது உண்மையின் பக்கம் இருப்பதுதான். “உனக்குக்  கேட்டது கிடைத்துவிட்டதே! அடுததவனுக்குக் கிடைத்தால் உனக்கு என்ன” என்பது தி.மு.க. எனவே அதுவும் வழக்கில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான்,  பிற மொழிகளுக்குச் சார்பாகப் பலர் இருக்கையில் தமிழின் சார்பாக வழ.காந்தி மட்டும் நிற்கும் அவலம் நேர்ந்துள்ளது.

  நீதிபதிகளும்  மொழிகளின் சமநிலையைப் பற்றி எண்ணியுள்ளார்களே தவிர,  மொழிகளின் தகுநிலை குறித்து எண்ண வில்லை. தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் செல்ல உள்ளார்; இந்த நேரத்தில் மொழிப்பாகுபாடு காட்டியதாகப் பெயர் வரக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறில்லை என நம்புவோம். ஆனால், எல்லா மொழி வளர்ச்சியையும் சமமாகத்தானே கருத வேண்டும் என எண்ணியுள்ளார்கள். போலியான வரலாற்றுச் செய்திகள் அடிப்படையில் அயல் மொழியான சமற்கிருதத்திற்குப் பிற எல்லா மொழிகளுக்கும் செலவழிப்பதைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதையும் இலக்கிய வளமையும் பண்பட்ட தன்மையும் இல்லா இந்திக்கு  அளவு கடந்து செலவழிப்பதையும்    பிற மொழிகளுக்கு அநீதி விளைவிக்கும் மொழிப்பாகுபாடாக எண்ணவில்லை.  வரையறை அடிப்படையில் உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்குச் செய்யும் சிறப்பைப் பிறமொழிகளுக்கும் வழங்கினால் என்ன எனத் தவறாக எண்ணி விட்டனர். .

  உலகாளவிய ஓட்டப்போட்டிகளில்,  முதலிடத்தில் வந்தவரை  விட அடுத்து வந்தவர்,  ஆயிரத்தில் ஒரு  நொடி குறைந்து வந்தாலும் முதலாமவருக்கு இணையாகமாட்டார் என்பதே உண்மை.  பிற போட்டிகளிலும் இதுதான் நடைமுறை. உலக(ஒலிம்பிக்கு)ப் போட்டி நடைபெற்று முடிந்ததே. அதில், வெற்றி வாய்ப்பை இழ்நதவர்கள் வாகையருக்கு இணையாகத் தங்களையும் கருத வேண்டும் எனக் கோரிக்கை வைக்கக்கூடாது. அவ்வாறு இருக்க இப்போட்டிகளில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள், தங்களுக்கும் வாகையருக்கு இணையான சிறப்புவேண்டு மெனக் கோர இயலுமா?  பைத்தியக்காரத்தனம் எனப் பிறர் எள்ளி நகையாடமாட்டார்களா?

 ஆனால், 1.தொன்மை, 2.முன்மை, 3.எண்மை (எளிமை),4.ஒண்மை (ஒளிமை), 5.இளமை,6.வளமை, 7.தாய்மை, 8.தூய்மை, 9.செம்மை, 10.மும்மை, 11.இனிமை, 12.தனிமை, 13.பெருமை, 14.திருமை, 15.இயன்மை, 16.வியன்மை முதலான பாவாணர் வறையறுத்த பண்புகளும் பிற பண்புகளும் கொண்டு உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு இணையாகஇவற்றில் ஒன்றுமில்லாத அல்லது ஒன்றோ இரண்டோ உள்ள மொழிகளும் செம்மொழித்தகுதி  கோரியதும் மத்திய அரசு அவ்வாறு அறிந்தேற்பு வழங்கியதும் எவ்வகையில் சரியாகும்?

தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற் றானாராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழி யேயாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோடொருங் கெண்ணுதல் தவிர்க்க வேண்டும் என்று

1903-இல் பரிதிமாற் கலைஞர்தமிழ்மொழியின் வரலாறு’எனும் நூலில்   கூறியது .இன்றைக்கும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டிய பொன்மொழியாகும்.

  தமிழுக்கான செம்மொழி  அறிந்தேற்பு அறிவிப்பிற்குப்பின் மத்திய அரசின் போக்கை உணர்ந்து, செம்மொழிப்பட்டியல் என எல்லா  மொழிகளையும் சேர்ப்பதுதான் மத்திய  அரசின் நோக்கம்; தமிழுக்குத் தனிச்சிறப்பு அளிக்கக்கூடாது என்பதும் அதன் நோக்கம் எனச் சொல்லி வந்தோம். அதைத்தான் அதன் செயல்பாடுகள் காட்டி வருகின்றன. எந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் நிதியுதவி அளிப்பதற்கு எதிராக நாமில்லை. ஆனால், செம்மொழித்தகுதி என்ற பெயரில் அத்தகுதியற்ற மொழிகளுக்கு வழங்கக்கூடாது என்பதுதான் அறமாகும்.

  அவ்வாறு  அனைத்து மொழிகளையும்செம்மொழி எனஅறிவிக்கும் எனில்,  தமிழை உயர்தனிச்செம்மொழியாக அறிவிக்க   வேண்டும்

  தீர்ப்பில் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறாமல் உரிய அதிகார மையத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளனர். என்ற போதும் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்ய வேண்டும்.

   தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.

  இதற்கான பொறுப்பைப் பொதுநலவழக்குகளில் ஈடுபட்டு வரும் தமிழார்வலர் வழ.கரூர் இராசேந்திரன் தமிழறிஞர்கள், தமிழமைப்புகள் சார்பில் மேல்முறையீட்டில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவர் தன்னியல்பில் மேல் முறையீடு செய்யாமல்

  1. மூத்த வழ.காந்தி அவர்களிடமும் கலந்து பேச வேண்டும்.
  2. தமிழறிஞர்களிடம் வழக்கிற்குத் தேவையான கருத்துகளைத் திரட்ட வேண்டும்.
  3. தமிழார்வலர்களும் தமிழமைப்புகளும் வழக்குநிதி தருவதற்கு வாய்ப்பாகத் தனிக்கணக்கு தொடங்கித் தெரிவிக்க வேண்டும்.
  4. தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.

  .

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழக்கில் இணைவதில்   நடைமுறைச் சிக்கல் இருக்கும். ஆனால், சாகித்திய அகாதமிக்கும் மத்திய அரசின் உரிய துறைகளுக்கும் செம்மொழித் தகுதி வரையறை குறித்தும் அதற்கிணங்கக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா (ஒடியா) முதலான மொழிகளுக்கு அறிந்தேற்பு வழங்கியது தவறு என்பது குறித்தும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

 தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பிற்குப் பெருமை கொண்டாடும் தி.மு.க. அதனை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

  பேராய(காங்கிரசு)க்கட்சியுடன் நீக்கமறப் பிணைப்பு உள்ளதால் அக்கட்சியையும் தனியே மேல்முறையீடு செய்யத் தி.மு.க. ஆற்றுப்படுத்த வேண்டும்.

  செம்மொழி என்றால்  கலைஞரின் சொத்து என எண்ணிப் பாராமுகமாக இராமல் தமிழக அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அனைத்து மொழிகளுக்கும்  உதவுக!

தகுதிகளுக்கேற்பச் சிறப்பித்திடுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை,  அகரமுதல 148, ஆவணி 05, 2047 / ஆக.21, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo