“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன்
“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா?
இக்கட்டுரை பிராமணர்க்கு எதிரானதல்ல. அவ்வகுப்பிலும் பிற வகுப்பார்போல் நல்லாரும் உள்ளனர்; பொல்லாரும் உள்ளனர். மாந்தர் இயற்கை இது. சிலர் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் சேர்ந்த வகுப்பையோ பிற பிரிவையோ நாம் பொதுவில் குற்றமாகச் சொல்ல இயலாது. அதேபோல் அவ்வகுப்பைச்சேர்ந்த நண்பர்களும் எனக்குண்டு. சாதிவேறுபாடு பார்க்காத மனித நேயர்களும் அவர்களுள் உள்ளனர். ஆனால் மத்திய அரசும் அதன் நிழலரசும் சாதிவேறுபாட்டில் குற்றவாளிகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதால் இதை எழுதவேண்டி உள்ளது.
சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்
என்றார் பாட்டரசன் பாரதியார். இன்றும் அச்சதிதான் நிறைவேறுகிறது.
பாரதியார் காலம்வரை தண்டச்சோறுண்ணும் பிராமணர் வாழ்ந்துள்ளனர். ஆள்வோரைக் கைகளுக்குள் போட்டுக்கொண்டு சாதிக்கொரு நீதி என நடைமுறைப்படுத்தி உள்ளனர். எனவே, அவர் மனம் நொந்து பாடியுள்ளார். சாதிகளில்லையடி பாப்பா என அறிவுரை கூறியதுடன் நில்லாது சாதிக்கொரு நீதிமுறையையும் சாடியுள்ளார். இப்பொழுது பிராமணர்கள், கல்வியாளர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பணியாளர்களாக, தொழில் முனைவோர்களாக எனப் பல நிலைகளிலும் வாழ்கின்றனர். இருப்பினும் பிராமணியத்தை வளர்ப்பதெற்கென்றே ஒரு கட்சி உள்ளதால் சாதிக்கொரு நீதி என்னும் பாகுபாடு இன்றும் உள்ள கொடுமை தொடர்கிறது. இதனால் சமூகநீதி காக்கும் பிராமணர்களுக்கும் அவப்பெயர் வருகிறது.
பிராமணியத்தை எதிர்க்கும் பலரும் பிரமாணர்களை எதிர்ப்பதில்லை. எனவேதான் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, மூதறிஞர் இராசாசியுடன் நட்பு பூண்டிருந்தார். கலைஞர் கருணாநிதி உயர் பாெறுப்புகள் பலவற்றிலும் பிராமணர்களை நியமித்தார். பிராமணியம் என்பது ஆரியத்தின் சாதிபாகுபாட்டு (வருணாசிரம)க் கொள்கைப்படி உயர்வு தாழ்வு கற்பிப்பதும் அவற்றை வலியுறுத்துவதும்தான்.
இருநாள் முன்னர் (புதுக்கோட்டை மாவட்டம்) திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், உயர்நீதிமன்றத் தடைக்கிணங்க மேடைபோட்டுப்பேச காவல்துறையினர் மறுத்துள்ளனர். பாரதிய சனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்சு. இராசா அதற்கு ஒத்துழைக்காமல் காவல்துறை, உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எதிராக இழிவாகப் பேசியுள்ளார். மத வெறி நடவடிக்கையைத் தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது. அவரது பேச்சைக் கேட்ட அனைவருமே அது கண்டு அதிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். அவரது கட்சியினரும் இத்தகைய அவரது பேச்சால் கட்சியில் உள்ள பிறருக்கும் அவப்பெயர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். மக்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு திருமயம் காவல்நிலையத்தில் இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
பாசக இதுபோன்ற கொடுமைகளைத் தூண்டிவிடாமலும் வேடிக்கை பார்க்காமலும் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறாகப் பேசுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள்மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு உதவ வேண்டும். பாசக குறுக்கிடாவிட்டால் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும். மாறாக ஊக்கப்படுத்துவது தனக்குரிய புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.
இதன் தொடர்பில், அமைச்சர் இராசேந்திர பாலாசி, சோஃபியாவையும் இராசாவையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வது உண்மை. ஆனால் காரணத்தை மாற்றி, “இராசா ஏதோ கோபத்தில் வெடித்துப்பேசிவிட்டார்” என்கிறார்.
மாணவி சோஃபியா எதிர்பாராமல் வானூர்தியில் தமிழிசையைச் சந்தித்தபொழுது தூத்துக்குடி படுகொலைகள் நினைவால் “பாசசிச பாசக ஒழிக” என்று முழக்கமிட்டார். ஆனால், இராசாவிற்கு இவ்வாறு கடுமையாகப் பேசுவதே வழக்கம். நீதிமன்றத் தடையை அறிந்தவர் வேண்டுமென்றே மாவீரன்போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நீதித்துறையையும் காவல் துறையையும் கடுமையாகப் பேசியுள்ளார். அஃதாவது அரசைத்தான் எதிர்த்துப் பேசியுள்ளார். ஆனால் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாசக தரும் அழுத்தத்தால், அதனைச் சினத்தில் வெடித்துப்பேசியதாக மழுப்புகிறார். மாணவி சோஃபியாவிற்குத் தீவிரவாத முத்திரை குத்துவோர் பிராமணிய அதி தீவிரவாதத்தைக் கண்டிக்க அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை.
ஆனால், எச்சு.இராசா பேச்சால் மனம் குமுறியோருக்கு ஆறுதலளிக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் உசாவல் நடந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதிகள் செல்வம், நிருமல் குமார் ஆகிய இருவரும் தாமாக வழக்கை எடுத்துக் கொண்டதுடன் மக்களாட்சியின் தூணான நீதித்துறைக்குக் களங்கம் கற்பிப்பது பாசிசத்தையும் நக்சலிசத்தையும் வளர்ப்பதாக அமையும் என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். நீதித்துறையின் கண்ணியத்தைக் காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை என்பதால் தாமாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். கடமை தவறாமல் நடவடிக்கை எடுக்கும் அவர்களுக்குப் பாராட்டுகள்!
இராசாவின் ஒவ்வொரு பேச்சிற்குமே குண்டர்சட்டத்தில் அவரைப்போடலாம். தகாதவற்றை எழுதுவது; கேட்டால் எனக்குத் தெரியாமல் என் நிருவாகி பதிந்ததாகக்கூறுவது; வன்முறை வெறிப்பேச்சைப் பேசிவிட்டு, வேறுயாரோ தான் பேசியதுபோல் வெட்டி ஒட்டிக் காண்பிப்பதாகக் கூறுவது என்பனவற்றைத் திறமையாகக் கருதுகிறார். அடுத்து, வெறித்தனமாகப் பேசிவிட்டுப் பேசியது தானல்ல; நடிகர் ஒருவரை நடிக்க வைத்து ஒளிபரப்பியுள்ளார்கள் என்று சொன்னாலும் சொல்வார்.
இவரது பேச்சுகள் சாதி, மதக் கலவரங்களுக்குத் தூண்டுதலாக அமையும் என அறிந்தும் அரசு அமைதி காப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்பாவிகளை எல்லாம் உடனே கைது செய்யத் தெரிந்த அரசிற்கு அவர்கள் மீது வன்முறைச் சட்டங்களைப் பாய விடும் அரசிற்கு எச்சு.இராசா, எசு.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கத் தடையாய் இருப்பது நூல்தான் என்றால் அதைவிட இழிவானது வேறில்லை. ஆதலின் ஆட்சியாளர்கள் அரசிற்கு அவப்பெயர் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுத்து அரசின்மீதான அவப்பெயரை நீக்குவார்களாக!
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 550)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
//மாணவி சோஃபியாவிற்குத் தீவிரவாத முத்திரை குத்துவோர் பிராமணிய அதி தீவிரவாதத்தைக் கண்டிக்க அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை// – நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! ஒருவேளை பிராமணிய அதி தீவிரவாதம் மிக ஆதித் தீவிரவாதம் என்பதால் அஞ்சுகிறார்களோ!