தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்!

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரும் தேவையின்றிச் சிறையில் காலவரம்பு கடந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இக்கொலை வழக்கு உசாவல் அதிகாரிகளும் நீதித்துறையினரும் மனித நேயர்களும் இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரே இவர்கள் விடுதலையை வலியுறுத்திய இன்றைய முதல்வர் மு.க.தாலின், அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, குடியரசுத்தலைவருக்கு மடல் அனுப்பியுள்ளார்.

கடந்த மே 20அன்று குடியரசுத்தலைவருக்கு இராசீவு காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய உத்தரவிட மடல் எழுதி நேரில் கொடுக்கச் செய்துள்ளார்.

“எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உண்டு என்று கூறித் தமிழக ஆளுநர் அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.” இதனை மடலிலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் மகுடைத் தொற்றை (கொரோனா) முன்னிட்டுச் சிறைவாசிகளை விடுதலை செய்து வருகின்றனர். பிரான்சு முதலான நாடுகளில் இதற்கெனத் தனிச்சட்டமே இயற்றி விடுதலை செய்து வருகின்றனர். இதற்கேற்பவே மகுடைத் தொற்றுப் பரவலைத் தடுக்க சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. இதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரசாரின் சட்ட அறிவு

தோழமைக்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பல கட்சியினரும் மனித நேயர்களும் இதை வரவேற்றுள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுப்பானேன் என்றும் சிலர் கேட்டுள்ளனர். இருப்பினும் பேராயக்(காங்கிரசு)கட்சியினர் இது குறித்துத் தெரிவிக்கும் கருத்துகள் சட்ட அறிவே இல்லாத இவர்களையா மக்கள் சார்பாளர்களாகத் தேர்ந்தெடுத்து வருகிறோம் என நம் இழிநிலையை உணர வைக்கிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி, “இவ்விடுதலை சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும். எந்த ஒரு குற்றவாளிக்கும், நீதிமன்றம்தான் தண்டனையும், விடுதலையும் வழங்கும் முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெத்த படித்தவரின் மகன் எனப் போற்றப்படும் கார்த்தி சிதம்பரம், “ஆயுள் தண்டனை கைதிகளைச் சில ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யலாம் எனச் சட்டத்தில் இடமிருந்தால் எனக்கு மறுப்பு இல்லை” எனச் சொல்லியுள்ளார்.

இவர்கள் இவ்வாறு கூறுவது முதல் முறையல்ல. திருநாவுக்கரசர் போன்ற பேராயக்கட்சித்தலைவர்களும் இவ்வாறே கூறி வருகின்றனர். இதையறியும் அப்பாவிக் கட்சியினர் சிலரும் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதா எனக் கூக்குரலிடுகின்றனர். ஆனால் இத்தகைய மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுவதற்கும் அவ்வப்பொழுது சட்டப்படியான மறு மொழிகளை அளித்தும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.

அரசுதான் விடுதலை செய்யும்

எந்த நாடாக இருந்தாலும் நீதி மன்றத்திற்குக் கேட்பிற்கு வரும் வழக்கில் குற்றமற்றவராயின் விடுதலை செய்யவும் குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கவும்தான் சட்டப்படியான அதிகாரம் உள்ளது. அதே நேரம் எந்த நீதி மன்றத்திற்கும் தான் வழங்கிய தீர்ப்பைத் திருத்தவோ தண்டனையைக் குறைக்கவோ நீட்டவோ அதிகாரம் இல்லை. எல்லா நாடுகளிலும் சிறை நடைமுறை நூல்களில் தண்டனை என்பது மன்னித்துத் திருத்துவதையும் சேர்த்துதான் எனக் குறிப்பிட்டிருப்பர்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை (திருக்குறள் 579)

என்னும் குறள்நெறி தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களையும் மன்னித்துத் திருத்துவதே சிறந்த பண்பு என்கிறது. இதைத்தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன.

உலகின் எல்லா நாடுகளிலும் தண்டனைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது சிறைத்துறைகளின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசுகள்தான். உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section)என ஒன்று இயங்குகிறது. எனவே, தண்டனைக் குறைப்பு என்பது உலக நடைமுறை.

எனவே, தண்டனைக் குறைப்பு என்பது சிறைத்துறையின் வேலை. இதில் நீதிமன்றங்கள் தலையிட வேலையில்லை. சிறைத்துறையின் பரிந்துரைகளுக்கிணங்க மாநில அரசுகள் ஆணையிடுகின்றன .

உ.பி.யின் பெருமன்னிப்பு

உ.பி.யில் பெருமன்னிப்பு வழங்க அரசமைப்புச்சட்டக் கூறு 161 தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இயோகி ஆதித்தியநாத்து அரசு 2018இல் கொள்கை முடிவு எடுத்து 1500 ஆயுள் தண்டனைவாசிகளை 2019 சனவரியில் விடுதலை செய்தது. இதே அரசமைப்புச் சட்டப்பிரிவின்படியும் குற்ற நடைமுறைச்சட்டம் பிரிவுகள் 432, 433, 433(அ) இன் கீழும் அசாம் அரசும் நூற்றுக்கணக்கான சிறைவாசிகளை விடுதலை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு உட்பட எல்லா மாநில அரசுகளும் இத்தகைய முன்கூட்டிய விடுதலைகளை வழங்கித்தான் வருகின்றன.

உலக நாடுகளில் பொதுவிடுதலை

தாய்லாந்தில் மகா வச்சிரலாங்காரன் அரசரின்(King Maha Vajiralongkorn) 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கிய அரச மன்னிப்பிற்கிணங்க ஆகத்து 2020 இல் 40,000 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கையாகப் பின்னர் 2,00,000 சிறைவாசிகளை விடுதலை செய்தது. இதற்கு முன்னரும் திசம்பர் 2011 இல் தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேசின்(Thailand’s King Bhumibol Adulyadej) 84 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2,700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவரே அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

மொரோக்கோ நாட்டின் ஆறாம் முகம்மது அரசர்(King Mohammed VI) ஏப்பிரல் 2020இல் 5,654 சிறைவாசிகளைச் சிறையிலிருந்து விடுவித்தார். தேசிய, சமய விடுமுறைகளின் பொழுது மன்னிப்பு வழங்குவதற்கேற்பப் பக்குரீத்து எனப்படும் ஈகைத் திருநாளை(Eid Al Adha) முன்னிட்டு, ஆகத்து 2020இல் 752 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதன் தொடர்ச்சியாக அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு விடுதலை அளித்தார். அதே ஆண்டிலேயே மன்னர்-மக்கள் புரட்சியை முன்னிட்டு 550 சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கினார்.

இவ்வாறு வரலாறு நெடுக எல்லா நாடுகளிலும் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டர்களை அரச விடுதலை செய்வதே ஏற்கப்பட்ட நீதியாகும்.

இந்த அடிப்படை அரசியலறிவுகூடப் பேராயக்கட்சியினரிடம் இல்லை என்றால் அவர்கள் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும். அறிந்தே வஞ்சக எண்ணத்துடன் திரித்துப் பேசுகிறார்கள் என்றால் தண்டிக்கப்பட வேண்டும். இராசீவு காந்தி குடும்பத்தினர் மன்னிப்புக் கருத்திற்கு எதிராகப் பேசுபவர்களை அக்கட்சியிலிருந்தே தலைமை நீக்க வேண்டும். அதே நேரம் பாதிக்கப்பட்டர்களின் மன்னிப்பு அல்லது மன்னிப்பு இன்மைக்கேற்ப எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நடைமுறைகளுக்கிணங்கவே முன் விடுதலை வழங்கப்படுகிறது என்பதையும் கிணற்றுத்தவளையாகக் கூக்குரலிடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று அறியாமையுடன் கேட்பதும் அறிந்தே குழப்பம் விளைவிப்பதாகும்.

மன்னர்கள், தலைவர்கள் பிறந்தநாள்களின் பொழுதும் ஆட்சிப்பொறுப்பில் ஏறும்பொழுதும் சிறைவாசிகளை விடுதலை செய்வது உலக நாடுகளில் காலங்காலமாக உள்ள நடைமுறையே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

– மின்னம்பலம்

பகல் 1 ஞாயிறு 30 மே 2021