தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்
தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன்.
பிறப்பும் தொடக்கக் கல்வியும்
குமரி மாவட்டம் சுசீந்திரம் பக்கத்தில் மயிலாடி என்னும் ஊர் உள்ளது. அதன் அண்மையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சேந்தன்புதூர் என்ற ஊரில் வைகாசி 10, 1975 / 23-5-1944இல் தாயம்மாள் பிறந்தார்.
சித்தாந்த ஆசான், வித்துவான் திரு. பகவதிப் பெருமாள்(பிள்ளை) திருவாட்டி கோமதி இணையரின் ஏழு மக்களுள் ஐந்தாவதாகப் பிறந்தவரே தாயம்மாள். மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை பயின்றார். எட்டாம் வகுப்பு வரை தென்திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப்பள்ளியான மயிலாடியில் உள்ள (இ)ரிங்கல்தெளபே(Ringel taube School, Mylaudy) பள்ளியில் படித்தார். இவரது கல்வியில் பெற்றோர் தணியா ஆர்வம் கொண்டிருந்தமையால் 4 கல் தொலைவில் சுசீந்திரத்திற்கு நடந்து சென்று வந்தே மேற்கொண்டு படித்தார்.
படிப்புடன் அம்மாவிற்குத் துணையாகப் பூப்பறித்து விற்பனைக்குக் கொடுக்கும் வேலையையும் செய்து வந்தார். புகுமுக வகுப்பைத் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் படித்தார். தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் தந்தை இருந்தமையால் இவருக்கும் தமிழ்க் கல்வியில் நாட்டம் ஏற்பட்டது. இந்துக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்தார். திருவனந்தபுரம் சென்று கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையை முடித்தார்.
ஆசிரியப்பணி
பாபநாசத்தில் பேரா.ச.வே. சுப்பிரமணியம், நண்பர்கள் தந்தையுடன் இணைந்து தொடங்கிய திருவள்ளுவர் கல்லூரியில் விரிவுரையாளராக முதல் பணியை ஏற்றார். பத்து மாதப் பணிக்குப் பின்னர் 1969 இல் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.
21-4-1969இல் தாயம்மாளுக்கும் அருணாசலத்திற்கும் திருமணம் நிகழ்ந்தது. அருணாசலமே பின்னர் அறவாணர் ஆனார். கணவர் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பணியாற்றினார். ஓராண்டிற்குப் பின்னர் சென்னைப் பச்சையப்பன் அறக்கட்டளையில் கணவருக்கும் கடலூர் கந்தசாமி(நாயுடு) கல்லூரியில் மனைவிக்கும் பணி கிடைத்தது. பின் சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்குப் பணிமாற்றம் பெற்றார். ச.வே.சு. வழியாக பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து ‘குழந்தை இலக்கியம்-ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் முனைவர் பட்டத்தை முடித்தார்.
அயல்நாட்டில் ஆராய்ச்சியும் பணியும்
செனகால் அதிபர் இலியோ போல்ட்டு செதார் செங்கோர் அழைப்பில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகால் நாட்டிற்கு முனைவர் அறவாணன் திராவிட ஆப்பிரிக்க ஆராய்ச்சிக்காகப் பயணம் மேற்கொண்டார். முனைவர் பட்டம் பெற்ற தாயம்மாளும் 7 மாதங்களுக்குப் பின்னர் செனகால் சென்றார். அங்கே எழுத்துப்பணியில் ஈடுபட்டார். திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு என்ற நூலை எழுதினார். 1987இல் தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு இந்நூலுக்குக் கிடைத்தது. உரல், உலக்கை, முருங்கக்கீரை, சட்டிப்பானை செய்தல், சுடுதல், மருதோன்றி அணிதல், கோலா பாக்கு வாயில் மெல்லுதல், சில்லுக்கோடு ஆடுதல், அரிசி உணவு உண்ணுதல், போன்ற பல பண்பாட்டு நிகழ்வுகளைத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இந்நூலை எழுதியுள்ளார். பதினான்குழி/பல்லாங்குழி என்னும் தமிழர் விளையாட்டுபோல் ஆப்பிரிக்கர்களிடமும் உள்ளது கண்டு வியப்பு எய்தினார். விளையாட்டு முறையை ஒப்பிட்டு ‘பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதினார். நாட்டுப்புற விளையாட்டு நூல்களுள் குறிப்பிடத்தக்க இடம் இந்நூலுக்கு எப்பொழுதும் உண்டு.
இவரது சிறப்பை உணர்ந்த அதிபர் செங்கோர், இவருக்கு ஆப்பிரிக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்க தக்கார்பல்கலைக்கழகத்தில் மொழி ஆசிரியராக நியமன ஆணை வழங்கினார். 1978-82 இல் இங்கே பணியாற்றினார்.
இவர்மீதுள்ள நன்றி உணர்வின் காரணமாக அங்கே பிறந்த பெண்மகவிற்கு அருள் செங்கோர் எனப் பெயரிட்டார்.
பச்சையப்பன் அறக்கட்டளையில் விடுப்பு முடிந்ததால், மீண்டும் சென்னையில் திரும்பிச் செல்லம்மாள் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். களப்பணிகளை மேற்கொண்டு பெண் மொழி, உறவு முறை நூல்களை உருவாக்கினார்.
கணவர் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியேற்ற பொழுது தாயம்மாளும் புதுச்சேரிக்குச் சென்றார். 1970இல் வேலை பார்த்த கடலூர் கந்தசாமி கல்லூரிக்கு மாற்றம் பெற்றார்.
1998இல் தாயம்மாள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பணியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார் பேரா. தாயம்மாள்.
தமிழ்க் கோட்டம்
பேரா. தாயம்மாள் 1982 இல் கணவருடன் இணைந்து ‘தமிழ்க் கோட்டம்’ நூற்பதிப்பகத்தை நிறுவினார். பல நல்ல நூல்களை இதன் வழி வெளியிட்டு வருகின்றார்.
நூல்கள், பரிசுகள்
இவரது புலமையை இவர் எழுதிய நூல்களும் அவை பெற்ற விருதுகளும் பறை சாற்றுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள 4 நூல்களுடன் புதிய கோலங்கள், பெண்ணறிவு என்பது, பெருமையே பெண்மையாய், தையல் கேளீர். தையலை உயர்வு செய், தடம் பதித்தோர், குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு, தமிழ்ச் சமூகவியல்- ஒரு கருத்தாடல், பெண்ணெழுத்து இகழேல், கண்ணகி மண்ணில், பெண் இன்று நேற்று அன்று, ஒளவiயார் அன்று முதல் இன்று வரை, மகடூஉ முன்னிலை-பெண் புலவர் களஞ்சியம், பெண் பதிவுகள், தமிழ்ப்பெண், தமிழ்க்குடும்பம்-1919, ஒளவையார், பெண்ணின் பெருந்தக்கது இல் முதலான 25 நூல்களின் ஆசிரியர். இவரது நூல்களின் தலைப்புகளே அம்மையார் பெண்ணிய உரிமையாளர் என்று நமக்கு அடையாளங் காட்டும்.
ஒளவையார் அன்று முதல் இன்று வரை என்னும் கடும்உழைப்பில் வெளிவந்த நூலுக்குத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புதுநூற்றாண்டுப் புத்தக மனையும் (என்.சி.பி.எச்சு.) இணைந்து இலக்கியப் பரிசு வழங்கின. 2016 ஆம் ஆண்டில் தினத்தந்தி இதழின் சி. பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்றார்.
தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல் என்னும் மன்பதை யியல் நூலுக்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியுள்ளது.
கருத்தரங்கங்களில் பங்கேற்பு
அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் வாசித்தல், கற்பித்தல் தலைப்பில் ஆசிரியப் பணிப்பட்டறையைத்திறம்பட நடத்தியுள்ளார்.
27.10.10இல் உலகச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்று ‘அறியப்படாத பெண்புலவர்’ என்னும் தலைப்பில் கட்டுரை அளித்தார். இவ்வாறு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகப் பங்கேற்றுள்ளார். மாநாடுகளிலும் நூல்கள், இதழ்களிலுமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்துள்ளார்.
சொற்பொழிவாளர்
கட்டுரையாளராக மட்டுமல்லாமல் பெண்ணியப் பேச்சாளராகவும் இலக்கிய உரையாளராகவும் திகழ்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மேலைச்சிவபுரி செந்தமிழ்க்கல்லூரி, பேரூர் சாந்தலிங்கனார் கலைக்கல்லூரி ஆகியவற்றில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
1970 முதல் சென்னை, மதுரை, தூத்துக்குடி வானாலிகளில் எழுத்துரை ஆற்றி வருகிறார். வெளிநாட்டுப் பண்பலை வானொலிகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் தன்மானம், காலமாற்றத்தில் கற்பு, பூப்பு நிகழ்ச்சி முதலான பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். மகளிர் தற்கொலை, முதியோர் சிக்கல்கள்பற்றி ஆய்வு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
விருதுகள்
சிறந்த கல்வியாளர் எனச் சிறப்பித்து, இவருக்கு வாரியார் விருது வழங்கப்பெற்றுள்ளது. சிறந்த பெண் எழுத்தாளர் என்பதற்காகச் சக்தி 2004 விருது பெற்றுள்ளார்.
தமிழக அரசும் கி.ஆ.பெ. விருதை 2009 இல் வழங்கிச் சிறப்பித்தது.
அறிஞர் அறவாணனுடன் அக வாழ்க்கையில்மட்டும் இணைந்திராமல் மண்பதை வாழ்க்கையிலும் இணைந்து தொண்டாற்றுகிறார். எனவே, இராம.வீரப்பன் வழங்கும் இலக்கிய இணையர் விருது 2013 இல் வழங்கப்பெற்றது.
குடும்பம்
மகன் அறிவாளன் த.ஆ.வே.(டி.ஏ.வி.) மேனிலைப்பள்ளியில் இயற்பியல் மேற்கல்வி ஆசிரியராக உள்ளார்., மருமகள் வாணி அறிவாளன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர். 8 நூல்களின் ஆசிரியரான இவர், குடியரசுத்தலைவரின் இளம் செம்மொழி ஆய்வறிஞர் விருது பெற்றவர். இவர்கள் வழி, அருணன், அகிலன் என்ற பேரப்பிள்ளைகள் இருவர். மகள் அருண்செங்கோர் காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்; மருமகன் பொறியாளர் மோ.சீனிவாசன். பெற்றோர் வழிியில் மனித நோய்கள் என்ற நூலை உருவாக்கியுள்ளார். இவர்வழி அமுத யாழினி, அமுதப்பாவை எனப்பேரப்பிள்ளைகள் இருவர் உள்ளனர்.
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
எனப் பாரதியார் வழியில்
தொடர்ந்து மகளிர் நலன்களுக்காகப் பாடுபட்டு, அறியப்படாத பெண்புலவர்களை அறியச்செய்யும் அருந்தொண்டாற்றி வருகிறார்.
மகளிர் நலச் செயற்பாட்டாளர்களில் முன்னெடுத்துக்காட்டாக வாழும் தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் ஆண்டுநூறு கடந்தும் வாழியவே!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச்சி. நான் ஒளவையார் பாடல்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறேன். எனவே, அவரது தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
நித்தியானந்தி
Nithiyanandhi
மகிழ்ச்சி.
முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அலைபேசி எண் – 94440 64568
மகிழ்ச்சி.
முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அலைபேசி எண் – 94440 64568