(தந்தை பெரியார் சிந்தனைகள் 20 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 21

 3. சாதிக்கொள்கை

தமிழர் வாழ்வில் எப்படியோ புகுந்தவிட்ட ‘சாதிக்கொள்கை’ யைச் சாடுவதை ஆய்வு செய்வதற்கு முன்பு பண்டைய தமிழ் இலக்கணங்களில் இக்கொள்கைகைபற்றி வரும் குறிப்புகளை முதலில் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று கருதி அவற்றை முதலில் காட்டுவேன்.

களவுக்காலத்தில் தலைவன் பிரிவு வகைகளைக் கூறும் இறையனார்களவியல்,

ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி
ஆங்க ஆறே அவ்வுயிற் பிரிவே [குறிப்பு 2]

என்ற நூற்பாவில் அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. அவை: ஓதற்பிரிவு, காவல்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தர்க்குற்றுழிப்பிரிவு, பொருட்பிணிப்பிரிவு, பரத்தையர் பிரிவு என்ற ஆறு ஆகும். இந்த ஆறுபிரிவுக்கும் காலவரையறையும் தொல்காப்பியத்தில் கூறப்பெற்றள்ளது. கல்வியின்பொருட்டுப் பிரியும் பிரிவு மூன்றாண்டுகாலம் எனவும் ஏனையபிரிவுகட்கு ஓராண்டுக் காலம் எனவும் கூறப்பெற்றுள்ளன [குறிப்பு 3]. தொல்காப்பியத்திலேயே அந்தணர், அரசர், வணிகர்[குறிப்பு 4], வேளாளர் என்ற சாதி வேறுபாடு கூறப்பெற்றுள்ளமையால், அவர்களில் இன்னின்னாருக்கு இன்னின்ன பிரிவுகள் உள்ளன என்றும் கூறிச்செல்லுவர். ஆசிரியர் இப்பிரிவு இவர்க்குரியது என்று நூற்பா செய்து காட்ட வில்லை. எனவே, பிறப்பு காரணமாகத் தொல்காப்பியர் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற கொள்கையைக் கூறினார் அல்லர் என்பது ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. தமிழ்மறை அருளிய வள்ளுவர் பெருமானும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 672)

என்று கூறியுள்ளதை நாம் நன்கு அறிவோம். தவிர, உலகியலில் இன்னார்தான் போர்க்காரணமாகப் பிரியவேண்டும். இன்னார்தான் பொருளீட்டுவதற்குப் பிரியவேண்டும் என்ற நியதியும் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை.

இன்று எல்லாச் சாதியினரும் எல்லாத் தொழில்களையும் செய்து வருவது கண்கூடு. பார்ப்பனர் போரில் ஈடுபடு கின்றனர்;[குறிப்பு 5] அரசு அலுவல் பார்க்கின்றனர்; வாணிகம் செய்கின்றனர்; உழவுத்தொழில் செய்கின்றனர். அங்ஙனமே, வேளாளர் மறையோதுகின்றனர்; அரசு அலுவல்களில் அமர்ந்துள்ளனர்; வாணிகத்தில் ஈடுபடுகின்றனர். ஏனைய சாதியினரும் எல்லாவிதத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் தொழில் செய்யும் பொழுது, செய்யும் தொழில் காரணமாக அந்தந்தச் சாதியினராகின்றனர் என்று கோடலே பொருந்தும்[குறிப்பு 6]. பண்டும் இந்த நிலையே வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். நான் ஆசிரியத்தொழிலிலிருப்பதால் நான் பார்ப்பனன். என் மைந்தருள் ஒருவன் வணிகம் செய்தால் அவன் வாணிகன்; இன்னொருவன் உழவுத்தொழிலில் ஈடுபட்டால் அவன் வேளாளன்[குறிப்பு 7] ஓதல், பகை, தூது என்ற பிரிவிற்கு நிமித்தம் கூறும் தொல்காப்பியம்.

அவற்றுள், ‘ஓதலும் தூதும் உயிர்ந்தோர் மேன’[குறிப்பு 8]

என்று கூறும்பொழுது ‘உயிர்ந்தோர்’ என்று பொதுப்படையாக இருப்பது சிந்திக்கத் தக்கது. பிறப்பினால் உயர்வு உண்டு என்ற கொள்கையில் அழுந்திய உரையாசிரியகள் ‘உயர்ந்தோர்’ என்பதற்குத் தத்தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தனர். இளம்பூரணர், ‘நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர் அரசர்’ என்றும், நச்சினார்க்கினியர் ‘அந்தணர் முதலிய மூவர்’ என்றும் பொருளுரைத்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனப்பான்மைக் கேற்றவாறு ஒவ்வோர் அளவுகோல் (Norms) கொண்டனர். இங்ஙனம் உரையாசிரியர்கள் சாதிப்பிரிவையொட்டி ‘உயர்ந்தோர்’ என்று கூறியிருப்பது இக்காலத்திற்குச் சிறிதும் ஏற்காது; எக்காலத்திற்கும் ஏற்காது; ஏற்கவும் முடியாது. எனவே, ‘உயர்ந்தோர்’ என்பதற்கு ‘அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் சீலத்தினாலும், பண்பாட்டினாலும் உயர்ந்தோர்’ என்ற கோடலே பொருந்தும்; அஃதே அறிவுடைமையுமாகும். மேற்குறிப்பிட்ட நூற்பாவினை அடுத்து வரும் நூற்பாக்களிலும் பிரிவுகளைப்பற்றிப் பொதுப்படையாகவே கூறியிருப்பது இதனை வலியுறுத்தச் செய்யும்.

சாதிபற்றிய பெயர்கள்: இனி, நால்வகைச்சாதி பற்றிய மரபுகளை நோக்குவோம். தொல்காப்பியத்தில் அகத்திணையொழு கலாற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக்கூறிய நிலையிலும், புறத்திணையொழு கலாற்றில் வாகைத்திணைப் பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை ஆசிரியர் தொல்காப்பியனார் அவர்கள் வாழும் நிலத்தாலும்[குறிப்பு 9] அவர்கள் மேற்கொண்ட தொழில்வகையாலும் பகுத்துரைத்தனரேயன்றிப் பிறப்பு வகையால் அன்று என்பது பெறப்படும். திருவள்ளுவரின் கருத்தும் இதுவே என்று மேலே காட்டப்பெற்றது.

(1) சாதி: சாதிப்பற்றிய பெரியார் சிந்தனைகளைக்காண்போம்:

(1) மனிதன் திருடுகிறான்; பொய்பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; சாதியைவிட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் சாதியைவிட்டுச் சாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளப் பெறுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

பெரியார் காலத்தில் இருந்த இந்த நிலை இன்று இல்லை. சிற்றூர்களில்கூட இல்லை என்பது சிந்திக்கத்தக்கது.

(2) கோயிலைக் கட்டிவைத்துக் கல்தச்சருக்குச் காசு கொடுத்துச் சிலை செய்யச் செய்து பூசைக்கு மானியம்விட்ட நம் மக்கள் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனர் கூறுகிறார்களே! காரணம் இழிசாதி என்கிறான். இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்களே, மானம் ஈனம் இருந்தால் செய்வார்களா?

வடநாட்டில், குறிப்பாகக் காசியில் இந்த நிலை இல்லை; காசி விசுவநாதர் கோயிலில் எவரும் இலிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். (1958-இல் நான் வாரணாசியில் தங்கியிருந்தேன்)

(3) நீங்கள் என்னைப் பெரியார் என்று கூறலாம். பண்டார சந்நிதிகள், இராசா சர். அண்ணாமலை(ச்செட்டியார்) கோடீசுவரராயும் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உட்பட நாம் சூத்திரர்களாக இந்தக் கடவுள்களால்தான் ஆக்கப்பெற்றிருக்கிறோம். சிந்தியுங்கள்; பத்துத்தடவை சிந்தியுங்கள்; நாம் ஏன் சூத்திரர் என்று? வழிபிறக்கும்.

இன்று இந்நிலை இல்லை. எவரையும் பொதுஇடத்தில் இப்பெயரிட்டு வழங்குவதில்லை. பார்ப்பனக் குடும்பத்திற்குள் இத்தகைய பேச்சு ஒருவேளை அடிபடலாம். அது பற்றி நமக்குக் கவலை வேண்டா.

(4) சாதி வகை என்பது பிறவியால் வருவது இல்லை. யாருக்குப் பிறக்கிறதோ அவரது சாதியைச் சொல்லுகிறார்களே ஒழியப் பிறக்கும்போது சாதிமுத்திரையோடு எந்தக் குழந்தையும் பிறப்பது இல்லை.

(5) சாதி மாடுகளை அடையாளம் காட்டலாம்; சாதி நாய்களை அடையாளம் காட்டலாம். சாதிப்பெண்களை எவ்வித அடையாளமுமின்றி அம்மணமாக நிறுத்தினால் இவர்களை இந்தச் சாதிப்பெண் என்று அடையாளம் காட்டமுடியுமா? -என்பது ஐயா அவர்களின் சவால் வினா.

தாழ்த்தப்பட்டோர்: இந்த வகையினரைப்பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்:

(1) உங்களை யாராவது சிற்றூர்வாசிகள் இழிவாக நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் நகர்ப்புறங்களுக்குச் சென்று அங்குக் குடியேறவேண்டும். அங்குப் பிழைப்புக்கு வழி இல்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விடவேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணிவு இல்லா விட்டால் உங்கள்மீது சுமத்தப்பெற்ற இழிவு எளிதில் ஒழியாது என்றே சொல்லுவேன்.

(2) தாழ்த்தப்பட்டுக் கொடுமை செய்யப்பெற்ற மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவி கொடுப்பதன்மூலம்தான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர வேறு செயல்களால் அல்ல.

இன்று பட்டியல்(ST/SC) சாதியினர் பெரியவேலைகளில் அமர்த்தப் பெற்று வருகின்றனர். காலப்போக்கில் மெதுவாக சாதிபற்றிய கொடுமை ஒழியும். ஆனால் சாதிப்பெயர்கள் மாறாமலேயே அப்படியே இருக்கும். அரசும் இதைப்பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

(3) தாழ்த்தப்பெற்றவர்களாகிய நீங்கள் காங்கிரசு, மதம், கோவில், சாமி ஆகியவற்றையெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகலஉரிமையும் தாமாக உங்களைத் தேடிக்கொண்டு வரும் என்பார் பெரியார்.

நடைமுறையில் இது சாத்தியமல்ல. இதனால் வன்முறை தலையெடுக்குமாதலால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இராது. இந்த யோசனை வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பது என் கருத்து.

(4) தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அஃது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அடித்தளத்தின்மீது கட்டப் பெற்றுள்ளது.

பெரியாரின் இத்தகைய சிந்தனையின் பலத்தால் அத்திவாரம் ஆட்டம் கொடுத்து விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் முன்னுக்கு வந்து கொண்டுள்ளனர்.

(5) ‘பறையர்கள்’ என்ற பட்டம் மாறி ‘ஆதி திராவிடர்கள்’ ஆகி இப்போது ‘அரிசனங்கள்’ என்கிற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமெயொழிய இழிவு நீங்கிவிடாது. விபசாரிகளுக்கும் குச்சுக்காரிகளுக்கும் ‘தேவதாசி’ ‘தேவர்அடியாள்’ என்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

இது கடுமையான சிந்தனைதான். பெயர்கள் இருந்தால்தான் விகிதாச்சாரப்படி அலுவல்கள் கிடைக்கும். பெயர்களும் மாறவேண்டும். மக்களின் மனநிலை மாறவேண்டும். காலப் போக்கில் மாறலாம்; மாறாமலும் இருக்கலாம். மக்களாட்சியில் எதுவும் விரைவாக நடைபெறாது. சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றின் உறுப்பினர்களில் மூன்றில் ஒருபாகம் மகளிர் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணப்படி தயாரிக்க பெற்ற சட்ட வரைவு (Bill) இன்னும் நிறைவேற்றப்பெறாமல் தடைக் கற்கள் எழுப்பியவண்ணம் இருத்தலே இதற்குச் சான்றாகும். மகளிர் மன்றம் ஏறினால் தங்கள் குற்றங்களை எடுத்துச் சந்தி சிரிக்க வைக்கலாம் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகலாம்.

(6) எவனாவது உங்களைப் பார்த்து ‘ஒதுங்கிப்போ’ என்று சொன்னால் ‘ஏனப்பா, நான் ஒதுங்கவேண்டும்? என் காற்றுப் பட்டால் உனக்கு என்ன வாந்தி பேதியா வந்து விடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப்போய்விடுவான்.  எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால் அவனையும் விடாதீர்கள். ‘என்னப்பா, என்னைப் பார்த்துத் தவளைபோல் குதிக்கிறாயே? நான் என்ன மலமா? தொட்டால் நாற்றமடிக்க; அல்லது நான் என்ன நெருப்பா? தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா, இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைத்தொட்டால் கூடக் கைகழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்லுகிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள்!’.

பெரியார் காலத்தில் இருந்த இந்நிலை இன்று இல்லை. எவ்வளவோ மாற்றம் அடைந்துவிட்டது. இந்த யோசனைக்கு இன்று வேலை இல்லை.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்புகள்

2.நூற்பா- 35

3.தொல். பொருள்-கற்பியல்-47, 48, 49.

4. வணிகர்- ‘வாணிகம் ’ செய்வோர் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களிலும் ‘வாணிகம்’ என்று போடவேண்டிய இடத்தில் ‘வணிகம்’ என்று போடப்படுகிறது. சன் தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதியும் திருத்திக்கொள்ளாமை வருந்தத்ததக்கது.

5. பாரதத்தில் துரோணர், கிருபர், அசுவத்தாமா போரில் ஈடுபட்டிருந்ததை ஈண்டு நினைவு கூரலாம். இவர்கள் பார்ப்பனர்.

6. இதுதான் தந்தை பெரியாரின் வினாவாக இருந்தது. வள்ளுவர் கருத்துக்கும் ஒத்துள்ளதாக அமைகின்றது. இக்கருத்து ‘தீண்டாமை’ என்ற தலைப்பின்கீழும் வந்துள்ளது.

7. ஆந்திரநாட்டில் இன்றும் ஆசிரியத் தொழிலிலுள்ளவரை ‘அய்யவொரு’ (அய்யா) என்று வழங்குவதை அறியலாம்.

8. அகத்திணை-நூற்பா-28

9. முல்லை, குறவஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற அடிப்படையில்