(தந்தை பெரியார் சிந்தனைகள் 24 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 25

 

4. பொதுவானவை


சமூகம் பற்றிய சிந்தனைகளில் பொதுவான சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

(1) மதுவிலக்கு:

(அ) மதுபானத்தால் பொருளாதாரக் கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையேயொழிய இயற்கையால் அல்ல.

(ஆ) பொதுவாக மதுஅருந்துவதையே குற்றம் என்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாகும்படியானதும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் ‘மதுவிலக்கு’ என்பதேயொழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.

(இ) ஓர் இடத்தில் கடைகளை மூடிவிட்டு மற்ற இடத்திற்கு ஓடவிட்டு அவர்களை நாசமாக்குவதும், அத்தொழிலில் இருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு வேறு தொழில் இல்லாமல் செய்வதும் ஒரு நாளும் கள்ளை நிறுத்திவிடாது. வெளிப்படையாய்ப் பிழைக்க வழி இல்லாதவர்கள் திருட்டுத்தனமாய்ப் பிழைத்துத் தீரவேண்டியது இயற்கை விதி.

(ஈ) மதுவிலக்குத் திட்டம் என்பது மக்களை மயக்கும் அரசியல் பித்தலாட்டமேயாகும். மது விஷயத்தில் மக்கள் நலம் கருதினால் அதற்கு மதுவிலக்கு என்ற பேரே இருத்தல் கூடாது. ‘மதுக்கெடுதி ஒழிதல்’ என்ற பேர் இருத்தல் வேண்டும். அதற்குச் செயற்கையாக அரசு மது வணிகம் செய்யக்கூடாது என்பதுதான் இருக்க வேண்டும்.

(உ) மதுவிலக்கு என்பதே சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியர் மூளையின் அதிசயக் கண்டுபிடிப்பு. வெள்ளையர் ஆட்சியில் கல்விக்கு ஆகும் செலவுக்கு மதுத்துறை வரும்படியை ஒதுக்கிவைத்தனர். மதுத்துறை வரும்படி குறைந்தால் கல்விக்குச் செலவிடப் பணம் குறைந்துவிடும். ஆதலால் மக்களுக்குக் கல்வி அளிப்பதைக் குறைத்து விடலாம் என்று கருதியே இந்த மதுவிலக்குத்திட்டம் சூழ்ச்சிகரமாக நிருமாணத்திட்டத்தில் சேர்க்கப்பெற்றது.

(ஊ) இந்த முட்டாள்தனமான கொள்கையால் (மதுவிலக்குக் கொள்கையால்) அரசாங்கத்துக்குக் கிடைக்கும் ஏறத்தாழ இருபது கோடி உரூபாய் இழப்பாகிறது. இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

இவை பெரியார் காலத்து அரசியல்நிலையை அனுசரித்துச் சிந்திக்கப் பெற்றவை. இன்றைய நிலையில் இவை ஏட்டுச்சுரைக்காயாகிவிட்டது.

(2) புதுமை வேட்கை: இதுபற்றியும் பெரியாரின் சிந்தனைகள்:

(க) முன்னோர்கள் செய்து வைத்தவற்றை மாற்றக்கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அநுபவசாலிகள் ஆவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் மிக்க அநுபவசாலிகளேயாவார்கள்.

(ங) முன்னோர்கள் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்! நெருப்பென்பதே என்னவென்று தெரியாதகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன்-அந்தக்காலத்துக் கடவுள்தான், அந்தக் காலத்து எடிசன் தான்; அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்தபிறகு எவனாவது சிக்கிமுக்கிக் கல்லைத் தேடிக்கொண்டு திரிவானா நெருப்பு உண்டாக்க? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் மதிக்கும்?

(ச) பழமையை யார் அலட்சியம் செய்யாமல் இருக்கிறார்கள்? பழமை என்பதற்காக எதைவிடாமல் அப்படியே கையாண்டு வருகிறார்கள்? பழமை என்பதால் இன்னும் கட்டைவண்டியில் பயணம் செய்கிறோமா? இல்லையே?

(ஞ) நம்மக்கள் வேட்டி, சட்டை முதலியவை கொஞ்சம் பழசானாலும் வேறு புதியவைகளை மாற்றிக்கொள்ளுகிறார்கள். உணவு, உடை, வீடு இவற்றையெல்லாம் நமது வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளுகிறோம். இப்படி மற்றவற்றின் புதுமையைக் கருதும் நாம் நமது தன்மானத்தில் பழமையை நோக்கியே சென்று கொண்டுள்ளோம்.

(ட) மருத்துவச் சிகிச்சையில் நோய்க்குத்தக்க மருந்தை வயிற்றுக்கு அனுப்பி அங்கு அது செரிமானக்கருவி மூலம் செரிக்கச் செய்து சக்கை மலத்தின் மூலம் கழித்துச் சத்தைக் குருதியோடு கலக்கும்படிச் செய்து நோயை குணமாக்க முயற்சி செய்வதைவிட, மருந்தில் உண்மையான சத்தை எடுத்து நேரே குருதியில் சேர்த்து வேலை செய்யும்படி (ஊசிமூலம் செலுத்தி) செய்வதுபோல ஒழுக்கத்தையே நேரடியாகக் கற்பிப்பதால் என்ன இழப்பு?

(3) மூடநம்பிக்கைகள்: இவற்றைப்பற்றி அதிகமாகச் சிந்தித்தவர் நம் ஐயா அவர்களே.

(அ) மூடநம்பிக்கை என்பது ஒரு பெருநோயேயாகும். இதனால் சிலருக்கு மேல்சாதித் தன்மையும், வயிற்றுப் பிழைப்புக்கு வழியும் இருந்து வருவதால், இருகூட்டத்தினரும் தங்கள் சுயநலத்திற்காகவே மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி நீண்ட நாட்களாகப் பயன்பெற்று வந்திருக்கவேண்டும்.

(ஆ) தனது புத்திக்கும் பிரதியட்ச அநுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் மூடன்.

(இ) புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பெற்றுள்ளனர். சிறுகுழந்தைப் பருவத்தில் நமக்குப் புகுத்தப் பெற்றவிசயங்களையே ஆராய்ச்சியின் மூலம் அறிவின்மூலம் கண்ட முடிவு என்று கருதி அதற்குத் தலை கொடுத்துக் கொண்டுள்ளோம்.

(உ) நம் மக்கள் மாறுதலில் அறிவு செலுத்தமுற்பட்டாலும், சமுதாயப் பழக்கவழக்கங்கள் எனப்படுபவனவற்றில் முட்டுக் கட்டைபோன்று இடையூறுகள் விளைவிக்கப் பெறுகின்றன. நாம் அறிவை, உணர்ச்சியை, ஊக்கத்தை இழந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பெற்று மிரட்டப்பெற்று, அடக்கப்பெற்று வந்துள்ளோம்.

(ஊ) கடவுள்: மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும், அரசனுக்குக் குருவும் ஏற்பட்ட பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா கடவுள்[குறிப்பு 1] வேதம், மதம், முனிவர்கள், மகாத்மாக்கள் ஆகியவற்றைக் கற்பித்தும் பிறகு அவைமூலம் கடவுள் செயல், முற்பிறப்பு, பிற்பிறப்பு, கருமம் (வினை) பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம், தீர்ப்புநாள், மோட்சம், நரகம் ஆகியவையும் கற்பிக்க வேண்டியதாய் விட்டன. கடவுள், மதம் இவைபற்றி நேற்றைய பொழிவில் விளக்கப்பெற்றன. விட்டுப்போன சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்.

(அ) ஆத்துமா: இதுப்பற்றி தந்தை பெரியார் சிந்தனைகளைக் காண்போம்:

(க) ஆத்துமா என்பது ஒரு பொருளல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலியவற்றை உடையதல்ல என்பதோடு அது பெரிதும் பொருள் என்றே நமக்குக் காரணப்பெறுகின்றது. [குறிப்பு 2]

(ங) ஆத்துமா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பெற்றுள்ளதே. உடல் உருவம் இல்லாத ஒன்றுக்கு நாம் பார்ப்பனரிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடைப்பம் ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்துமா எப்படி அநுபவிக்க முடியும்.

(ச) இறந்தவர்கட்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்தவர்களின் ஆத்மாவைப்பற்றி மூன்றுவிதமாகச் சொல்லப் பெற்றுள்ளது. (1) இறந்த சீவனின் ஆத்துமா மற்றொரு உடலைப் பற்றிக்கொண்டு விடுவதாக, (2) இறந்த சீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக (பிதிர்லோகத்தில் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ?), (3) இறந்த சீவனின் ஆத்துமா அதனதன் செய்கைக்குத்தக்கபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அநுபவித்துக் கொண்டிருப்பதாக. ஆகவே இந்த மூன்றில் (மூன்று விசயத்தில்) எது உண்மை? எதனை உத்தேசித்துத் திதி கொடுப்பது?

(ஞ) மனிதன் மரித்தபிறகு ஆத்துமா என்பது ஒன்று பிரிந்து சென்று தண்டனை பெறுகின்றது என்பது பெரும் பித்தலாட்டம். ஆத்துமா என்பது பார்ப்பனர்கள் கட்டிவிட்டது. பொதுவாக இந்தச் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. ஆத்துமா என்பது வடமொழிச்சொல். இதற்குத் தமிழில் சொல்லே இல்லை. அதுமட்டுமல்ல; வேறு மொழியில்கூட ஆத்துமா என்பதற்குச் சொல் இல்லை.[குறிப்பு 3] எனவே பார்ப்பனர்களால் ஏற்பட்டதாதலால் வடமொழியில் மட்டும் இச்சொல் உள்ளது. [குறிப்பு 4]

(ட) ஆத்துமா என்பது பொய், மதக்கற்பனைக்கு ஒரு பொய் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலைநாட்ட பல பொய் பேச வேண்டியிருப்பது போல, மதத் தத்துவம் என்ற பொய்யை நிலைநிறுத்தவோ ஆத்துமா, தருமம் என்பதாகப் பொய்க்களஞ்சியங்களை உற்பத்தி செய்யவேண்டியதாயிற்று.

(ண) ஆத்துமாவைப்பற்றிப் பேசவேண்டுமானால் அறிவையும் அநுபவத்தையும் தூரவைத்துவிட்டு வெறும் நம்பிக்கைமீதே ஒப்புக்கொண்டு பேசவேண்டியதாக உள்ளது.

(ஆ) சோதிடம்: சோதிடம் பற்றியும் தந்தையவர்கள் சிந்தித்துச் சிந்தனைகளை வடித்துள்ளார்கள். அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் வைப்பேன்:

(1) பொதுவாக ஒரு பகுத்தறிவுவாதி சோதிடத்தின் தன்மையை ஊடுருவிப் பார்த்தால் அதனை ஒரு மதசம்பந்தமான கொள்கை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மத சம்பந்தமான கொள்கைகள் அநேகமாக மூடநம்பிக்கைகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே சோதிடமும் மூடநம்பிக்கையாகவே உள்ளது.

(2) முட்டாள்தனமும் பித்தலாட்டமும் (அயோக்கியதனமும்) சரிபாதியாகக் கலந்ததே சோதிடம் என்பது.

(3) மனிதன் செய்யும் காரியங்கள் எல்லாம் சாதகப்படியும், சாதகப்பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதியெல்லாம் முற்பிறவி பலன்படியும் நடப்பதாயிருந்தால் பாவம், புண்ணியம் என்ற பாகுபாடும் நற்செய்கை, துர்ச்செய்கை என்ற பெயரும் எப்படிப் பொருந்தும்?

(4) பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் “சாதகம் பார்க்கிறேன்” என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னால், ‘இது குதிரைச் சாதகம்’ ‘இது கழுதைச் சாதகம்’ என்று கூறமாட்டானே! உடனே பொருத்தம் பார்த்துச் ‘சரியாக இருக்கிறது’ என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்திற்கு வேறுபாடு தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூறமுடியும்? என்று நம் மக்கள் கொஞ்சம்கூட சிந்திப்பதில்லையே!

(5) நாள், கிழமை, மாதம், ஆண்டு, நேரம், காலம், சோதிடம், சகுனம் முதலிய மற்றும் எத்தனையோ துருநாற்றங்கள் மக்களைக் கவ்விக்கொண்டுள்ளன. இவற்றிலிருந்து மக்களை விலகச் சொல்ல வேண்டுமானால் பூகம்பம், வெள்ளம், புயல், விசநோய் முதலிய சாதனங்களால்தான் முடியுமே அல்லாமல் அறிவைப் புகட்டித் திருத்துவது என்றால் நினைக்கும் போதே பயமாக உள்ளது.

(6) சோதிடம் என்பது வடமொழிச்சொல். தமிழ்மொழியில் அதற்குப் பழஞ்சொல்லே இல்லை. கிரகங்களின் பெயர்களும் வடமொழிச் சொற்களேயாகும். அவற்றிற்குத் தமிழில் பழஞ்சொற்கள் இல்லை. வருடங்கள்கூட வடமொழிச்சொற்கள் தாம். சாதகம் முதலியசொற்களும் வடசொற்களே. சோதிடக்கலை என்பது தமிழனுக்கு இல்லாத கலையேயாகும். மற்றும், சகுனம், இராகுகாலம், குளிகை, எமகண்டம், முதலிய சொற்களும் பஞ்சபட்சி சாத்திரம் என்ற சொற்களும் வடமொழிச் சொற்கள்தாம். தமிழர்களில் வடவர்கள் கலாச்சாரங்களைப் பின்பற்றித் தங்களைச் சூத்திரர்களிலேயே கொஞ்சம் பெரியசாதி என்று கருதிய, ஆக்கிக்கொண்ட சிலரால் தமிழர்களுக்கு வந்த நோய்கள் தாம் இவை.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1  சைவம் இதனைப் ‘பதி’ என்றும், வைணவம் ‘ஈசுவரன்’ என்றும் பேசும்

குறிப்பு 2  சைவம் இதனைப் ‘பசு’ என்றும் வைணவ தத்துவம் ‘சித்து’ என்றும்கூறும்.

குறிப்பு 3  ஆங்கிலத்தில் soul என்பது ஆத்மாவைக் குறிப்பது.

குறிப்பு 4  தத்துவங்களை நிறுவியவர்கள் கண்ட சொல் இது. அனைத்தையும் பார்ப்பனர்கள்மீது சுமத்துவது நியாயம் இல்லை..