(தந்தை பெரியார் சிந்தனைகள் 30 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 31

3. மொழிபற்றிய சிந்தனைகள்

3. மொழி

மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன்.

(1) மொழி பற்றியவை: (அ) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

(ஆ) மொழியின் தத்துவத்தைப்பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்தந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்தந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். இதைத்தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.

(இ) தேசிய மொழி என்றாலே நாட்டுமொழி என்றுதானே பொருள்? அப்படிப்பார்த்தால் சுதந்திரத்தமிழனுக்குத் தமிழ் அல்லாத வேறு எந்த மொழியும் அன்னியமொழிதானே? அப்படியிருக்க இன்று தேசியமொழி என்பதும் தேசம் எவன் ஆதிக்கத்திலிருக்கின்றதோ அவன் மொழியாகத்தானே ஆக்கப்பெற்றிருக்கிறது? தமிழனுக்குத் தமிழ்நாடுதானே தேசம்? தேசம் என்றால் நாடு என்றுதானே பொருள்?

(ஈ) எதற்கெடுத்ததாலும் பெருமையையே பேசிக்கொண்டு தாய்மொழி, வெங்காயம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உலகத்தோடு போட்டியிடமுடியும்? உலகமே ஒருமொழிக்கு வரவேண்டும். அப்போதுதான் உலகமக்களோடு போட்டிபோட்டுப் பழக வாய்ப்பு ஏற்படும்.

(உ) மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்? அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

(ஊ) மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது. அரசின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடையதாயினும் அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் (இன்று தமிழ்மொழி இந்திய அரசியல்மொழியாகச் செய்ய கலைஞர் ஆட்சி முயன்று வருகின்றது).

இவற்றால், தந்தை பெரியார் அவர்கள், பயன்படும் முறையால்தான் ஒரு மொழியின் பெருமை அமைகின்றதேயன்றி வேறு எவற்றாலும் மொழிக்குப் பெருமை இல்லை என்ற கருத்துடையவர் என்பதை நாம் அறிய முடிகின்றது.

(2) தமிழ்: தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்ததுபோல வேறு எந்த மொழியையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்தததில்லை. ஒரு காவியத்தில் அல்லது புராணத்தில் இம்மொழிப்புகழ்ச்சி இடம் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக,


பொருப்பிலே பிறத்து, தென்னன்
புகழிலே கிடந்து, சங்கத்து

இருப்பிலே இருந்து, வையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்(1)

என்று பாடுவார் வரந்தருவார். ‘தமிழ்விடுதூது’ ஆசிரியர் ‘தித்திக்கும் தெள்ளமுது’, ‘முத்திக்கனி’, ‘புத்திக்குள் உண்ணப் படுந்தேன்’ என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவார். ஆனால் தந்தை பெரியாருக்கு இம்முறை மனத்திற் குகந்ததாக இல்லை. தமிழ் மொழிபற்றி அவரது சிந்தனைகள்:

(க) தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழிவரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும் சமயத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.

(ங) தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலகனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கியதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையடைந்துவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ்வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் செய்யும்.

(ச) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாளவேண்டிய மொழியாகும். நாகரிகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்ற வண்ணம் தமிழையும் கெடுத்து விட்டார்கள். . . நாம் காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ் மொழியைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பழங்கால அநாகரிகத்திற்கேற்றவற்றை மாற்றி இக்கால நாகரிகத்திற்கேற்றபடி சீராக்க வேண்டியது அவசியம்.

(ஞ) நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய் மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்று முயன்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்.

(ட) தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறேன் என்றால் இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாதே என்ற கவலையினால்தானே தவிர, தமிழை மிகவும் உயர்ந்த மொழி, எல்லாவல்லமையும் பொருந்திய மொழி என்று நினைத்து அல்ல.

(ண) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய, அறிவுவாதியாக ஆகமுடிவதே இல்லை. அது மாத்திரமேயல்லாமல் எவ்வளவுக்கெவ்வளவு தமிழில் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகிறன்றதே தவிர, முன்பக்கம் பார்க்கமுடிவதே இல்லை. (குறிப்பு 2)

(த) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப்பார்வை ஏற்படுகிறது. தமிழ்படித்துவிட்டால் பின் பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப்புலவனும் மேதையும் தமிழ்ப்படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆய்விடுகின்றான்! தமிழனுக்கு உயிர் அவனது இலக்கியங்கள்தாம். இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமயஉணர்ச்சியோடு பழமைக் கற்பனைகளே அல்லாமல், அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட, இலக்கியங்களைக் காண்பது அமாவாசையன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது. (குறிப்பு 3)

(ந) தமிழை- (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப் பெறாத) தமிழ்மூல நூல்களைத் தனித்தமிழ் இலக்கியநூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ்ச்சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனைத்தைச் சிறு கருத்தை உருப்பெருக்கி வைத்துத்தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? (குறிப்பு 4)

(ப) தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் – நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுபோன்று தலைதுாக்க முடியாமல் செய்து வருகின்றன. (குறிப்பு 5)

(ம) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?(குறிப்பு 6) 

 (3) ஆங்கிலம்: இம்மொழிபற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தீர்க்கதரிசனமானவை. பொறுப்பிலிருக்கும் கட்சி அரசு ஆலோசித்துச் செயற்படுதல் இன்றியமையாதது. தந்தையின் சிந்தனைகளில் சில:

(அ) இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலகத் தொடர்பு இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்குத் தேசம், நாட்டுக்கு நாடு இப்போதுள்ள தூரத்தில் இருக்காது; கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. இந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும்கூட வேலை இருக்காது.

(ஆ) தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது, பயன்படக்கூடியது என்று என்னைக்கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. ஆங்கிலமே தமிழரின் பேச்சுமொழியாக ஆகுங்காலம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.

(இ) தமிழின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச்சமயம் தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்கமுடியாது. தமிழ் வடமொழியை விட, இந்திமொழியைவிடச் சிறந்ததென்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனாமொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாவது (குறிப்பு 7)   [குறிப்பு 10] அவசியம் என்றும், ஆங்கிலமே நமது பேச்சுமொழியாவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் ஆங்கிலம் அறிவு மொழி மாத்திரம் அல்லாமல் அஃது உலகமொழியுமாகும்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்- (வரந்தருவார்)

குறிப்பு 2. நான் திருப்பதியில் பணியாற்றியபோது தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து கற்று முதல்வகுப்பு பெறவேண்டும் என்று வற்புறுத்துவேன். இது தமிழாசிரியனாகப் போவதற்காக அல்ல என்றும், தேர்வுகள் எழுதி வங்கி அலுவலர், முதல் வகுப்பு அலுவலர், இ.ஆ.ப. அலுவலர் பணிக்குச் செல்ல முயலவேண்டும் என்றும் அதற்காகப் பொது அறிவு பெறும் வழிகளைக் காட்டியும் அறிவுறுத்துவேன். பொருளாதாரம், தத்துவம், கணிதம், அறிவியல் படிப்போர் எங்ஙனம் பிறதுறைகளில் பணியாற்றுகின்றனரோ அவ்விதம் பணியாற்றவேண்டும் என்றும் ஆற்றுப்படுத்துவேன். இதன்பலனை அப்பொழுதே நேரில் கண்டேன்.

குறிப்பு 3. எந்தத் துறைக்கும் போகமுடியாதவன்தான் தமிழுக்கு வருகிறான். அவனது அறிவுக்குறை பிறதுறைகட்குச் செல்லும் உந்தல் இல்லாமல் செய்துவிடுகிறது; தமிழாசிரியர் அலுவல் தவிர பிறதுறை அலுவலுக்குப் போகும் ஆசை இல்லாமல் செய்து விடுகின்றது.

குறிப்பு 4. 17 ஆண்டுகள் ஆந்திரத்தில் பணியாற்றினாலும் என் தாய்மொழியாகிய தெலுங்கைக் கற்கும் ஆசை ஏற்படவில்லை. அறிவியல் ஆசிரியர்களின் துணை கொண்டு தாவரஇயல், விலங்கியல், உயிரியல் போன்ற துறைகளில் அறிவு பெற்றேன். அத்துறைகளில் நான் ஐந்து அறிவியல் மூலநூல்களை எழுதி வெளியிட்டேன். ஒரு பெரிய கல்வியியல் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டேன். “பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற பாரதியாரின் வாக்கு எனக்கு இத்திசையில் செல்ல உந்தல் கொடுத்தது.

(குறிப்பு 5.) இது பின்னர் விளக்கப்பெறும். 

(குறிப்பு 6)  இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.

(குறிப்பு 7) இது கருத்து வேறுபாட்டுக்கு உரியது. மேல்மட்டத்திலேயே நம்சிந்தனை போய்க் கொண்டுள்ளது. அடிமட்டத்தில் சிற்றூர்மக்கள் நிலையில் இஃது இடையூறாக முடியும் என்பது வெள்ளிடை மலை.