(தந்தை பெரியார் சிந்தனைகள் 31 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 32

3. மொழிபற்றிய சிந்தனைகள்

மொழி  (தொடர்ச்சி)

(ஈ) தமிழ் மக்கள் என்னும் குழந்தைக்குத் தாய்ப்பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்குத் தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைப் பருகும், குழந்தை உருப்படியாக முடியுமா! தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பால் ஊறும்? அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்? தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

(உ) மண்டலமொழியை நாம் எவ்வளவு கற்றாலும் நாம் புலவனாக, வித்துவானாக, பண்டிதனாக, மடாதிபதியாக, ஆழ்வாராக, நாயன்மாராகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நாளும் உலக அறிவு பெற்ற, இயற்கையின் தன்மையை உணர்ந்த அறிவின் எல்லை காண ஒரு சிறிதும் தகுதி உடையவர்களாக ஆக முடியவே முடியாது. ஆங்கிலத்தைப் புறக்கணித்துத் தமிழில் பாடம், படிப்பு, கல்வி சொல்லிக்கொடுத்தல் என்பது மனிதன் செல்லும் அறிவுப் பயணத்தை தடுத்து வழியில் குழி தோண்டி வைப்பது போலத்தான் ஆகும்.

(ஊ) நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால்குடிக்க வைக்கும்போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லுகிறேன்.

(எ) எந்த ஒரு மொழியின் நடப்பும் பெரும்பாலும் அம்மொழியின்மூலம் அறியக்கிடைக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். ஆரியருக்கு அடிமைப்பட்டிருக்கும் வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ் இந்தியநாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில அறிவுதான் என்று கூறுவது மிகையாகாது. (குறிப்பு 1)

(ஏ) நம் இந்திய நாட்டில் உள்ள மக்கள் எல்லாநாட்டு மக்களுடனும் பழகவேண்டுமானால் ஆங்கிலம்தான் எளிதான மொழியாகும். உலக மக்களோடு பழகக் கருத்துமாற்றம் செய்து கொள்ள ஆங்கிலம்தான் கட்டாயமொழியாகும். விஞ்ஞானத்தில் கருத்து செலுத்தவேண்டுமானால் ஆங்கிலத்தினாலேயேதான் முடியும்?

(ஐ) ஆங்கிலம் சீர்த்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி. எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ள மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளரவேண்டும்.

(ஒ) அரசன் வேண்டா, குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு, சமதருமம் வேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு, ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல், பொருளாதார முன்னேற்ற அறிவுக்கருத்துகளையும் ஆங்கிலமொழிதான் நமக்குத் தந்தது. வடமொழித் தொடர்பு சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக் கைகள் நம் பகுத்தறிவை அடிமைப்படுத்தின. ஆங்கிலமொழி நம்மை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்து எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. இந்த இடத்தில் அக்காலத்தில் நம்நிலை பற்றி ‘மெக்காலே’ என்ற அறிஞர் ஆயத்தம் செய்த Minutes என்ற அறிக்கையை மீளநோக்கினால் புத்தொளிவீசும். (குறிப்பு 2) 

இந்த இடத்தில் அரசு தனது முரண்பட்ட கொள்கைகளைச் சிந்தித்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள்.

(அ) சாதிப்பெயர்கள்: (1) சாதிப்பெயர்கள் உள்ள தெருப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியது.

விளைவு: (அ) காஞ்சியில் உள்ள ‘ஐயர் தெரு’ என்பதிலுள்ள ‘ஐயர்’ என்பதை நீக்கினால் என்ன ஆகும்?

(ஆ) புதுச்சேரியில் உள்ள ‘செட்டித்தெரு’ என்பதிலுள்ள ‘செட்டி’ என்ற பெயரை நீக்கினால் என்ன ஆகும்?

(இ) பேருந்துப்பெயர்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்கக் கொண்டுவந்த திட்டத்தால் ‘திருவள்ளுவர்’ பெயரும் அடிபட்டுப் போயிற்று. இது மிகவும் வருந்த வேண்டியதொன்று. அரசு மீண்டும் ‘திருவள்ளுவர்’ பெயரைக் கொண்டு வரவேண்டும். ஏதாவது ஒரு குறள் வாசகத்தை எல்லாப் பேருந்துகளிலும் எழுதும்படிச் செய்தல் வேண்டும்.

(ஆ) மொழிவழிக் கல்வி: (1) தமிழ்வழியிலும், ஆங்கில வழியிலும் பயிலலாம் என்ற விருப்பமுறையைப் பயன்படுத்தலாம்.

(2) சட்டத்தால் தமிழை வளர்க்க முடியாது. சங்கத்தால்தான் வளர்க்க முடியும்.

(3) பண்டை அரசர்கள் சங்கத்தில் கவிபாடினார்களேயன்றி அரசவையில் அல்ல.

(4) மூன்றாம் தமிழ்ச்சங்கம் நிறுவிய சேதுபதி அனைத்தையும் சங்கத்திற்கு விட்டுத் தாம் ஒதுங்கிக் கொண்டார்.

(5) கலைஞர் அரசும் தமிழ்வளர்ச்சிப் பொறுப்பைச் சங்கப் பலகைக்கு விட்டு, அரசு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்பது அடியேனின் விழைவு.

(4) சமற்கிருதம்: சமஸ்கிருதம் பற்றியும் தந்தை பெரியாரவர்கள் சிந்தித்துள்ளனர். அவர் சிந்தனைகளை ஈண்டுத் தருகிறேன்:

(1) சமற்கிருதத்தினால் தமிழர்களும் தமிழ் நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அநுபவிக்கின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

(2) பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமற்கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமற்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகிறது? சமற்கிருதத்திற்காக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

(3) வடமொழியை நம் படுக்கை வீட்டுக்குள் விட்டுக் கொண்டு, மதம், கலாச்சாரம், கடவுள், ஆத்துமார்த்தம், நாகரிகம், இலக்கியங்கள், பேச்சு வழக்கு முதலியவற்றில் தன்னிகரில்லா ஆதிக்கம் செலுத்தவிட்டுக் கொண்டு இருப்பவர்கள் இந்தி வெறுப்பு, இந்தி எதிர்ப்புகள் நடத்துவது வெட்கக் கேடானகாரியம் ஆகும்.

(4) இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழிக்கும் (சமற்கிருத்தத்திற்கு) கடவுள் பேரால் பல மகத்துவங்கள் கூறி, நம் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமற்கிருதச் சொற்களை ஆசார அனுட்டானங்களைப் புகுத்தி விட்டனர். அந்த வேற்றுமொழிக்குத் தனிச்சிறப்பு ஏதுமில்லை.

வடநாட்டுடன் தொடர்பு ஏற்பட்ட நாள்முதல்- புத்தம், சமணம் நமது நாட்டிற்கு வந்த நாள்முதல்- பாலி, பிராகிருதம், சமற்கிருதம் நம் நாட்டிற்கு வந்து விட்டன; மெதுவாகக் கலக்கவும் தொடங்கின. பார்ப்பனர் அம்மொழியைக் கொண்டுவந்து புகுத்தினர் என்று சொல்லுவதற்கில்லை. படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி சமற்கிருதத்தைத் தேவமொழி என்றும் அதுவே தமது மொழி என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர். தொடக்கக் காலத்திலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் நகராண்மை மாவட்டவாரியத்தின் நிருவாகத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளிலும் அம்மொழி பயில்வதற்கு வாய்ப்புகள் தரப்பெற்றிருந்தது. திருவையாறு, திருப்பதி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் கல்லூரிகளில் பயின்று சிரோமணி பட்டம் பெறுவதற்குரிய கல்வி கற்பிக்கப் பெற்றுவந்தது. ஆனால், ஆர்வத்துடன் படிப்பவர்கள் குறைவாகவே இருந்தனர்.

60-களில் உயர்நிலை பள்ளிகளில் எல்லாரும் பொதுத்தமிழ் பயில்வதற்கும் மேற்படிவங்களில் சிறப்புத் தமிழுக்குப் பதிலாக விரும்புவோர் சமற்கிருதம் பயிலலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. ஆயினும் பார்ப்பனர்கள் இதனை விரும்பி அதிகமாகப் படித்தனர் என்று சொல்வதற்கில்லை.

காரைக்குடியில் மேற்படிவங்களில் படிவம் ஒன்றுக்கு 400க்கு மேல் இருந்த மாணவர்களில் 7 பேர்தான் சமற்கிருதம் படித்தனர் என்பதையறிவேன். நான் படிக்கும்போது வாய்ப்புகளை இழந்ததால் என் மகன் ஒருவனை சமற்கிருதம் படிக்கும்படிச் செய்தேன். 1943-முதல் தவத்திரு சித்துபவாநந்த அடிகளை அறிவேன், பார்ப்பனரல்லாதார் பெருவாரியாகச் சமற்கிருதம் பயில வேண்டும் என்றும் இவர்கள் படித்து அம்மொழியில் புலமை எய்திவிட்டால் பார்பபனர் தம்மொழி என்று உரிமை கொண்டாடும் பழக்கத்தை விட்டிடுவர் என்றும் அறிவுரைகூறி வந்ததை அறிவேன். ஆனால் 1941 முதல் புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நிலைப் பள்ளியில் நான் தலைமையாசிரியனாக இருந்த காலத்தில் (1941-50) இந்தி, சமற்கிருதம் பயில வாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை. நான் விட்டு வந்த ஒன்றிரண்டு ஆண்டுகட்குப் பிறகு இந்தி பயில வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பதாக அறிந்தேன்.

இருமொழிக் கொள்கையை அரசு செயற்படுத்தத் தொடங்கிய நாள் முதல் இந்தியும் சமற்கிருதமும் அரசு உயர்நிலை மேனிலை பள்ளிக்கல்வித் திட்டத்தில் இடம்பெறாமல் போய்விட்டன.

குறிப்பு 1. ஆங்கிலம் படித்த காந்தி, நேரு முதலியவர்களுக்குத்தான் விடுதலை வேட்கை எழுந்ததேயன்றி வடமொழி படித்த சாத்திரிகட்கும் புரோகிதர்கட்கும் கோயில் குருக்கட்கும் ஏன் எழவில்லை? சிந்திக்க வேண்டும்.
குறிப்பு 2. இன்று வெளிநாட்டுக்குக் கல்வி கற்கச் சென்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்களே என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்